‘நம் வாழ்வு’ வார இதழின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ‘நம் வாழ்வு’ வார இதழ் அலுவலகத்தில் ‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத் தலைவர் ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தென்னிந்தியத் திரு அவை சென்னை மண்டல மேனாள் பேராயர் மேதகு தேவசகாயம், நாடாளுமன்ற, சட்டமன்ற மேனாள் உறுப்பினர் சா. பீட்டர் அல்போன்ஸ், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர் திரு. ரபி பெர்னார்டு, ‘நம் வாழ்வு’ இதழின் மேனாள் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் வின்சென்ட் சின்ன துரை, தொழிலதிபர் திரு. அமல்ராஜ் மற்றும் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்நிகழ்வின் தொடக்கமாக, முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் அவர்கள் பொன்விழா ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயல்திட்டங்களைக் குறித்து எடுத்துக்கூறினார். குறிப்பாக, கடந்த ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘நம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழ்’ பொன்விழா ஆண்டில் ஆகச்சிறந்த செயல்பாடாக எடுத்துரைத்தார்.
முனைவர்
ரபி பெர்னார்டு அவர்கள் தன்னுடைய சிறப்புரையில், ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழைப் பாராட்டியதோடு, இது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, அவர் தன்னுடைய உரையில், “இன்று தமிழ்நாட்டில் சுமார் 70 இலட்சம் கிறித்தவர்கள் இருக்கிறார்கள். நாம் ஒன்றித்து இருப்பதே நமது சக்தி. இந்த ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மக்களிடத்தில் வளர்க்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது” என்று
வலியுறுத்தினார். குறிப்பாக,
திரு அவையின் தலைவர்கள் கிறித்தவ ஒன்றிப்பிற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும் அதே நேரத்தில் இந்த இதழுக்கு நாம்தான் பொருளாதார ரீதியாகவும் அதிக ஆதரவுக் கரம் நீட்டவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேனாள் பேராயர் தேவசகாயம் தன்னுடைய கிறிஸ்துமஸ் செய்தியில், கிறிஸ்துமஸ் எவ்வாறு தூய்மையின் அடையாளமாக, வாழ்வின் அடையாளமாக, ஒளியின் அடையாளமாக இருக்கிறதோ அது போன்று ‘நம் வாழ்வு’ இதழ் இச்சமூகத்தில் பிறருக்கு வாழ்வை வழங்கக்கூடியதாக, இருளில் இருப்பவர்களுக்கு ஒளியைக் கொடுப்பதாக இருக்கிறது எனப் பாராட்டினார்.
திரு.
பீட்டர் அல்போன்ஸ் தனது உரையில், “இன்றைக்குச் சமூகத் தொடர்பு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது. இன்று நம்மைச் சுற்றி எதிர்மறையான கருத்துகள், நமக்கு எதிராக சூழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” எனக்
கூறினார். “நம்மையெல்லாம் ஒன்றிணைக்கிற ஓர் இதழ் ‘நம் வாழ்வு.’ இதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்” எனக்
கேட்டுக்கொண்டார்.
ஆயர்
மேதகு லூர்து ஆனந்தம், “நமது கிறித்தவ மக்களின் எண்ணிக்கைதான் நமது சக்தி. நமது எண்ணிக்கையைப் பிளவுபடுத்தப் பல சக்திகள் செயல்படுகின்றன.
‘அனைவரும் ஒன்றாய் இருப்பார்களாக’ என்ற
கடவுளின் கட்டளையை ஏற்று இன்றைய மதவாதச் சூழலில் இணைந்து பயணிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது” எனவும்,
“நம்மைச் சுற்றி நிகழும் அரசியல் பேராபத்தைத் தடுக்க பிற மதத்தினர், நல் மனம் கொண்டோர், சமயசார்பற்ற சிந்தனையாளர், நண்பர் குழுக்கள் என அனைவரும் இணையவேண்டும்” எனவும்
வலியுறுத்தினார்.
சிறப்பாக
நடைபெற்ற இந்தக் கிறிஸ்துமஸ் உறவுக் கொண்டாட்ட நிகழ்வு ‘நம் வாழ்வு’ வரலாற்றில் மிக முக்கியமான நாளாக அமைந்திருந்தது.
விழா
நிறைவில் நடைபெற்ற உணவு விருந்திலும் அனைவரும் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். சிறப்பாக, வருகைபுரிந்த அனைவருக்கும் பொன்விழா மலர், ‘நம் வாழ்வு’ நாள்காட்டி, நூல்கள் எனப் பரிசுப் பொருள்களும் பரிமாறப்பட்டன.