சிந்தனைகளின் ஊற்று மனம். சிந்திக்கும் மனிதனே சிந்தனையாளர். தெளிந்த மனத்தோடு தன் எண்ணத்தை ஒரே நிலையில் கொண்டு சென்று சிந்திப்பவன் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்று, சரியான பாதையில் சென்று மன அமைதி பெற்று வெற்றியடைகின்றான்.
‘மாகோங்’ என்றால் ‘ஞானி’ என்று பொருள். ஞானிகளின் தன்னம்பிக்கையும், தெளிவான சிந்தனையும், குழப்பமில்லாத கண்ணோட்டமும் அவர்களின் பிறப்புரிமைகள். ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தெய்வீகம் பொருந்திய சிந்தனை இருக்கின்றது. அவை ஒவ்வொரு மனிதனிடமும் வேறுபடும்போது புதுமையாகத் தோன்றுகிறது.
மெல்கியோர்
எனும் பாரசீக ஞானி இயேசுவை அமைதியின் அரசராக எண்ணி பொன்னையும், கஸ்பார் எனும் எத்தியோப்பிய ஞானி குருத்துவத்தைக் குறிக்கும் சாம்பிராணியையும், பல்தசார் எனும் அரேபிய ஞானி இறந்த உடலைப் பதப்படுத்தும் வெள்ளைப்போளத்தை இயேசுவின் சிலுவை மரணம் குறித்தும் காணிக்கையாகக் கொண்டு செல்கிறார்கள். விண்மீன் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. ஒரு புதிய அரசர் பிறப்பை இந்த
விண்மீன் முன்னறிவிப்பதாக இவர்கள் நம்பினர்.
இம்மூவரும்
வெவ்வேறு இடங்களிலிருந்து புறப்பட்டாலும் ஒரே இலட்சியத்தோடு, வேற்றுமையில் ஒற்றுமையாக, பிற இனத்தாரின் பிரதிநிதிகளாக இரவிலும் காடு, மலை கடந்து இறையாசிர் பெற ஆவலுடன் சென்றபோது, வழிகாட்டிச் சென்ற விண்மீன் மறைவால் ஏரோது அரசர் மாளிகையை அடைந்தனர். அரசன் ஏரோதிடம், “யூதர்களின் அரசர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்தோம்” என்று கூற, அதைக் கேட்ட ஏரோது அரசன் தனக்குப் போட்டியாகப் பிறந்த குழந்தையைக் கொல்ல மனத்தில் திட்டமிட்டு அவர்களிடம், “நீங்கள் சென்று வணங்கிவிட்டு எனக்கு அறிவியுங்கள்” (மத்
2:8) என்று அனுப்புகிறான். பின்னர் நடந்தேறிய பல நூற்றுக்கணக்கான மாசற்றக் குழந்தைகளின்
சாவிற்குக் காரணமாகிறான் ஏரோது. ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்ற
பழமொழிக்கேற்ப அவன் வாழ்வு அழிவுக்குட்பட்டது. அதிகாரம் ஆணவத்தின் பிறப்பிடம். “சிறியதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோர் தெருவாருக்கும் பயனற்ற சிறிய வீணன்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
மூன்று
ஞானியரும், ஏரோது மன்னனின் தீய என்ணத்தை அறியாமல் இருந்தனர். இயேசு பாலனை விழுந்து வணங்கிவிட்டு மனநிறைவும் அமைதியும் ஆசிரும் பெற்று, ஆண்டவரின் தூதர் எச்சரித்ததால் வேறு வழியே சென்றடைந்தனர்.
பிறக்கும்
இந்தப் புத்தாண்டில் (2026) நாட்டின் நீதி, நேர்மை, வளம் பெற தேர்தல் களம் செல்ல வேண்டியிருக்கிறது. பழிவாங்கும் உணர்ச்சி, பதவி மோகம், சாதி-மதவெறி கொண்டவர்கள் மன்னராட்சியில் மட்டுமின்றி, சனநாயக அமைப்பிலேயும், ஆட்சிப் பீடத்தைத் தனக்குக் கிடைத்த நிரந்தரமான சுக பூமி என்று தப்புக்கணக்கு போட்டு அழிந்து போகிறார்கள். குறுக்கு வழியிலே அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க விரும்புகிறார்கள். பொறாமையால் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதிலேயே, சுயநலத்திலேயே இவர்களின் சிந்தனை இருக்கும். ஒருபோதும் இவர்கள் சரித்திரத்தில் இடம்பெறுவதில்லை.
சுயநலமின்றிப்
பொதுப் பணியாற்றி, மக்களுக்கு நன்மை செய்வதே ஆண்டவருக்கு உகந்த இலட்சிய வாழ்வு. கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு மக்கள் ஆதரவைப் பெறும் தலைவர்களைத் தவிர்த்து, உள்ளதை உள்ளபடி உரைக்கும் நேர்மையான தலைவர்களை, மக்களாகிய நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களாகிய நாம் குடியுரிமை, வாக்குரிமையை இழந்துவிடாமல் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். ‘இனாம்’ என்ற பெயரில் நாம் பெற்ற சுதந்திரத்தை இழந்து அடிமையாகக் கூடாது. நமக்குத் தெரிந்த உண்மைகளைப் பாமர மக்களின் சிந்தனைக்கு எட்டும் வகையில் விளக்கமாக எடுத்துரைக்கவேண்டும்.
மூன்று
ஞானிகள் பாலன் இயேசுவை வணங்கியபின் மனம் நிறைந்து, எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் சென்றதுபோல, நாமும் நமது சிந்தனைகளைச் சிதறவிடாமல் மனமாற்றம் அடைந்து, இறையனுபவம் பெற்றவர்களாக இயேசுவின் முக ஒளியில் அமைதி காண்போம்!