எண்பதுகளின் தொடக்கத்தில் குமரி மாவட்டத்தின் மண்டைக்காட்டில் சங்கப் பரிவாரங்களின் திட்டமிட்ட சூழ்ச்சியால் இந்து முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியல் பரப்புரைகள், தொடர்ந்த வகுப்புவாதக் கலவரங்கள், தொடர்ந்து அறுவடை செய்யப்பட்ட வகுப்புவாத அரசியல் குமரி மாவட்டத்தைக் குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட வகுப்புவாத அரசியலின் மிகப்பெரிய அறுவடை குமரியில்தான் தொடங்கியது.
திராவிட
மண்ணின் திருவிதாங்கோட்டு தொகுதிதான் தமிழ்நாட்டின் முதல் இந்து முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர். இதே தொகுதி மீண்டும் ஒருமுறை பாரதிய சனதாவின் வேலாயுதத்தை உறுப்பினராகத் தெரிவுசெய்யும் ‘பெருமை’யைத் தந்தது. இன்று சங்கப் பரிவாரங்களின் உண்மையான விளை நிலமாக குமரித் தொகுதி நம்பப்படுகிறது. இருமுறை ஒன்றிய அரசின் அமைச்சர் பதவியை வகிக்கும் வாய்ப்பு குமரியின் பொன். இராதாகிருஷ்ணன் பெற்றமைக்கான காரணம் என்ன? இன்றும் மதச்சார்பற்றக் கட்சிகளுக்குப் பெரும் சவாலைத் தரும் மாவட்டமாக குமரியே உள்ளது. நாகர்கோவில் தொகுதி இன்று பாரதிய சனதா வசமே உள்ளது.
குமரி
மக்கள் தமிழ்நாட்டில் அதிக கல்வி அறிவு பெற்றவர்கள். குமரியின் மக்கள்தொகையில் ஐம்பது விழுக்காட்டினருக்கும் மேல் கிறித்தவ மறையைச் சார்ந்தவர்கள். நாடார் குலத்தைச் சார்ந்தோர் பகுதி; குறிப்பிட்ட எண்ணிக்கையில் கணிசமானோர் மீனவர்கள். இவர்கள் அனைவரும் கத்தோலிக்க மறையைச் சார்ந்தோர். கடலன்னையின் தயவில் வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கும் இம்மக்கள், தாம் சேகரித்த கடல்வளத்தை உள்நாட்டு மக்களோடு கொண்ட வாணிபம் தரும் வருவாயில் வாழ்பவரே.
குமரி
மாவட்டத்தைக் குறிவைத்த சங்கப் பரிவாரங்கள், சமயங்களால் வேறுபட்ட மக்களாயினும், சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்த இம்மக்களிடையே பிரிவினையை வளர்க்கத் திட்டமிட்டு அதில் வெற்றியும் கண்டன. குமரி மாவட்டத்தின் பெரும்பான்மை நாடார் குலமக்கள் இந்து-கிறித்தவர் என்ற பிரிவினையுடையவராயினும், சாதி ரீதியாக ஒருமனப்பட்டிருந்தனர். ‘குமரியின் தந்தை’ எனப் போற்றப்படும் மார்ஷல் நேசமணி அவர்கள் ஒரு கிறித்தவராயினும், இந்து மதம் சார்ந்த நாடார் எவரும் இவரைக் கிறித்தவராகக் கருதி பேதம் காட்டவில்லை. இவர் மரணம் அடைவதுவரை நாகர்கோவில் தொகுதியின் முடிசூடா மன்னராகவே திகழ்ந்தார்.
1967-ஆம் ஆண்டு
நடந்த தேர்தலில், தான் பிறந்த விருதுநகரில் தோற்றுப்போன பெருந்தலைவர் காமராசர், 1969-இல் மார்ஷல் நேசமணி உயிரிழந்த நிலையில் அவரின் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முன்வந்தார். தலைவர் காமராசருக்கு எதிராக உள்ளூரில் செல்வாக்குப் பெற்ற கிறித்தவ மறைசார்ந்த மருத்துவர் ஒருவர் நிறுத்தப்பட்டார். இதுவரை கிறித்தவராம் மார்ஷல் நேசமணியை ஆதரித்த மக்கள், மத வேறுபாடு காட்டாமல்
வேறு மாவட்டத்தைச் சார்ந்த, வேறு மதம் சார்ந்த காமராசரைச் சமயப் பேதமின்றி, இருவேறு சமயம் சார்ந்த நாடார் குலமக்கள் ஒருங்கிணைந்து மிகப் பெரிய வெற்றியைத் தந்தனர்.
நச்சு விளைத்த
விதை
குமரி
மக்கள் மத வேறு பாடுகளை
மறந்து, சமூக ரீதியாக ஒன்றுபட்டிருந்த நிலையில் வகுப்புவாத நச்சு மெல்ல மெல்ல ஏற்றப்பட்டதன் விளைவு, இன்று மத அடையாளமே தேர்தல்
வெற்றியை நிர்ணயிக்கும் கருவியாய் மாறிப்போனது. இருபெரும் சமய அடையாளங்களை முன்வைத்தே தேர்தல் நடத்தப்படுகிறது. கட்சி ரீதியாக வேறுபட்டு, கட்சியின் அடிப்படையில் வாக்களிப்பதைவிட்டு, இன்று குமரி மக்கள் மதரீதியாக வேறுபட்டு வாக்களிக்கின்றனர். கிறித்தவர்களைக் கிறித்தவர்களாகவும், இந்துகளை இந்துகளாகவும் அணிதிரட்டி வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கின்ற நிலை.
தென்
திருவாங்கூர் பகுதியாம் இன்றைய குமரி மாவட்டம் தமிழ்ப்பேசும் பகுதியானதால், தமிழ்நாடு காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்து, குமரி மக்கள் சாதி, மத, ரீதியாகப் பிரிந்திருந்தாலும் குமரி மக்கள் ஒருங்கிணைந்து நின்று போராடி தாய்த் தமிழகத்தோடு 1956-இல் இணைந்தனர். ஒன்றுபட்ட போராட்டத்தில் நிறைய இழப்புகளைச் சந்தித்தாலும், பல உயிர்களை இழந்த
பின்னும் பிளவுபடாமல் ஒருங்கிணைந்து வெற்றி பெற்றனர். ஒன்றுபட்ட தனித்த இயல்புடைய இச்சமூகம் வகுப்புவாத நச்சின் ஊடுருவலால் சிதைந்துபோனது.
ஒரே நாளில்
அல்ல...
வகுப்புவாதம்
மதத்தை மையப்படுத்தி வளர்க்கப்பட்டாலும், இதன் நோக்கம் அரசியலே. ‘Politics playing
politics’
என்பார் வகுப்புவாத அரசியலை ஆய்வுசெய்த பேராசிரியர். “இவ்வகுப்புவாதக் கருத்தியல் ஒரேநாளில் உருவாக்கப்படுவதும் அல்ல; தாய் மடியில் படுத்துக்கொண்டு மெல்ல மெல்ல பாலை உறிஞ்சும் பச்சிளம் சிசுவைப்போல், வகுப்புவாத நச்சு மக்களிடம் பலவகை யுக்திகளால் ஊட்டப்படுகிறது. இதனை நச்சு (Toxis) என்பதை
அறியா மக்கள், இந்நச்சோடு வாழப் பழகிக் கொள்கின்றனர்” என்பார்
மேனாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்.
குமரி மாவட்ட அரசியலை இன்று மதரீதியான பிளவே தீர்மானிக்கிறது. மதரீதியாக
மக்களைப் பிளவுபடுத்தி வகுப்புவாத அரசியலை முன்னெடுத்த சங்கப் பரிவாரங்கள் இன்று குமரி மாவட்ட மக்களிடையே பகையையும் நம்பிக்கையின்மையையும் வளர்த்து வருகிறது.
மேலே
கூறப்பட்டது போன்று, இப்போக்கு ஒரே நாளில் உருவானதல்ல; குமரிக் கடலில் நிறுவப்பட்ட விவேகானந்தர் மண்டபம், தொடர்ந்து அமைக்கப்பட்ட விவேகானந்தர்புரம், குமரி மாவட்டக் கிறித்தவர் பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகள் முதலில் நடந்தேறின. கிறித்தவர்களின் ‘கட்டாய’ மதமாற்றம், ஆலயங்களில் ஒலிப்பெருக்கி ஏற்படுத்தும் சத்தம் குறிப்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் திருவிழாவின்போது, அண்டை கடற்கரைவாழ் முக்குவர் இன இளைஞர்கள் இந்துப்
பெண்களை அவமானப்படுத்தியதாகக் கூறப்பட்ட பொய்யுரைகள், தொடர்ந்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட கலவரத்தில் எட்டு மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!
வகுப்புவாதக்
கருத்தியலை விதைக்கத் தொடங்கி பொய்க்கதைகள், கன்னியாகுமரி மாவட்டத்தை ‘கன்னிமேரி’
மாவட்டமாக மாற்றுவதற்கான கிறித்தவர்களின் சூழ்ச்சி - இப்படியான பொய்ப்பரப்புரைகள் - திடீரென மாவட்டம் முழுவதும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்து எழுச்சி மாநாடுகள் - குமரி மாவட்டத்தின் இந்து மத உயர்சாதி ஆதிக்கம்
எல்லாம் திட்டமிட்டு மிகச்சீராக, நேர்த்தியோடு திட்டமிட்ட முயற்சிகளின் விளைவே இன்றைய குமரி மண்ணில் வகுப்புவாத அரசியலின் வெற்றி.
இந்து
மதம் நியாயப்படுத்திய வர்ணக் கோட்பாட்டை எதிர்த்து நின்ற அய்யாவழி வைகுண்டர் தோன்றி புரட்சி செய்ததும் இங்குதான்.
குமரி
மாவட்ட மக்களில் ஒரு பிரிவைச் சார்ந்த பெண்கள் மார்பை மறைக்கும் வகையில் நிலவிய கொடுஞ்சட்டத்தை எதிர்த்து நிற்கவும் வெற்றி பெறவும் கிறித்தவம் துணை நின்றது என்ற வரலாற்றை எங்கும் மறந்துவிடக்கூடாது.
திருப்பரங்குன்றத்தில்
நடப்பது
என்ன?
குமரி
மாவட்டத்தை வகுப்புவாதிகளின் அரசியல் ஆதிக்கக்களமாக மாற்றுவதற்கு என்னென்ன முயற்சிகள் செய்யப்பட்டனவோ, அதே முயற்சிகள் இங்கும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆளும் தி.மு.க.
அரசு இந்துகளுக்கு எதிரான அரசு, இந்துகளின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் அரசு என்ற பொய்ப்பிரச்சாரம். இதே பொய் முழக்கத்தை இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் முருகன் எழுப்புவதுதான் விந்தையிலும் விந்தை.
குமரியில்
மக்களை ஒன்றுபட்ட சாதியினரை மத அடிப்படையில் பிளவுபடுத்தலில்
வெற்றி கண்ட மதவாதிகள், தேசிய அளவில் இந்துகளை மத அடிப்படையில்
ஓர்மைப்படுத்த
(polarize) மதச்சிறுபான்மையினரை குறிப்பாக, இசுலாமியரை இந்நாட்டின் அந்நியராகவும் எதிரிகளாகவும் கட்டமைத்து வருவதை நாமறிவோம். மதுரையின் திருப்பரங்குன்றத்தை தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கவும், மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கவும் எடுக்கப்பட்ட முயற்சியே இன்றைய நிலை.
மண்டைக்காட்டு
கலவரத்திற்குப் பின் அரசால் அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் அறிக்கை, குமரி மாவட்டத்தில் நடைபெறுவதாகக் கூறப்பட்ட மதமாற்ற நடவடிக்கையைச் சாடினாலும், ஆர்.எஸ். எஸ். அமைப்பு முன்னெடுக்கும் கலாச்சாரம் திராவிட மண்ணிற்கு எதிரானது என்றும் விமர்சித்திருந்தார். குமரி மாவட்டத்தின் கடலோர மக்களின் அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர்களுக்கெனத் தனித்தொகுதியை ஒதுக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்தார். இப்பரிந்துரையை அரசும் கண்டுகொள்ளவில்லை, திரு அவையும் மறந்து போயிற்று.
குமரி
மாவட்டம் எரிந்த காலகட்டம் வேறு; இன்றைய காலகட்டம் வேறு. அன்று வகுப்புவாதக் கருத்தியல் நாடு முழுவதும் பரவாநிலை; இன்று தமிழ்நாடும், தமிழ்நாடு தாண்டியும் வகுப்புவாத அரசியல் இந்தியாவின் ஆளும் கருத்தியலாக ஏற்கப்பட்ட நிலை. அயோத்தியை இன்றைய மதவாதிகள் கையில் எடுத்திருந்தபோது, இந்தியருள் பலர் இன்றைக்கு உருவாகியுள்ள நிலை உருவாகும் என்று நம்பவில்லை.
1991-ஆம் ஆண்டின்
வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டவிதிகளையும் மீறி, 400 ஆண்டுகால மசூதி இடிக்கப்பட்டு, இராமருக்கான பெரிய கோவிலும் எழுந்தது அண்மை வரலாறு. இராமருக்கான கோவில் ஒரேநாளில் உருவாகவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவில் உருவாக்கப்பட்டது. இராமசென்ம பூமியில் எழுப்பப் பெற ஒரு நீதியரசரின் தீர்ப்பு காரணமாயிற்று. அதே இரஞ்சன் கோகாய் சரியான ‘சன்மானம்’
பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர், கோகாய் போன்று ஒரு தீர்ப்பெழுதுகிறார்.
மிக்கேல்பட்டி
பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை மிக்கேல்பட்டி என்ற பெயரே சான்றளிப்பதாகக் கூறி வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தவர் இவர்தான் -திருப்பரங்குன்றத்தின்
இன்றைய நாயகர். மிக்கேல்பட்டி வழக்கில் இவர் அளித்த தீர்ப்பை மேனாள் நீதியரசர் சந்துரு, “விசனம் அளிக்கும் விந்தை” என வர்ணித்ததை நினைவில்
கொள்வோம்.
திருப்பரங்குன்றம்
என்ற முருகப் பெருமானின் படை வீட்டைச் சிக்கந்தர் வழிபாடு தீட்டாக்கி விட்டதாம். அயோத்திக்கு ஓர் இராமர், குமரிக்குக் கிறித்தவம், திருப்பரங்குன்றத்திற்கு சிக்கந்தர்.
சிக்கந்தர்
மூலம் இசுலாமியர் மீது அவதூறு பரப்ப, மதப்பெரும்பான்மையைத் தேர்தல் நெருங்கும் வேளை ஓர்மைப்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. எளிமையான இறைநம்பிக்கையுடைய எளிய நம்பிக்கையில் விஷத்தை விதைத்து வரும் போக்கு தொடர்கிறது.
தமிழ்நாடு
பாரதிய சனதா வெற்றி நெருங்குவதாக மகிழ்வதில் நியாயம் உண்டு. தமிழ்நாடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், ‘அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்’
எனவும், ‘இவ்வரசு மக்களிடம் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கியுள்ளது’ எனவும்,
‘நீதியரசரின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்’
எனவும் அறிக்கை அளித்துள்ளமை தேர்தல் அரசியலில் எவருக்கும் வியப்பைத் தராது என்பது உண்மை.
பாசிசம்
அண்டை வாசலில் நிற்கிறது. மதச்சார்பற்றக் கட்சிகள், மதச்சார்பற்றச் சமூக இயக்கங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், இவைகளோடு தமிழ்நாடு திரு அவையும் என்ன செய்யப்போகின்றன? மௌனித்தல் நம் நிலைப்பாடாக இருத்தல் மாபெரும் குற்றமே.
“இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பது ஒரு குற்றம் (Crime); கொலைக்குள்ளாவது
குற்றம்; கொல்லப்படுதல் குற்றம்; ஏழையராக இருப்பது ஒரு குற்றம். ஏழையருக்காக நிலைப்பாடு எடுத்தால் அரசின் பார்வையில் குற்றம்”
- அருந்ததிராய் நூல்; அசாதி (Azadi) பக்.
13).