‘நம் வாழ்வு’- கிறிஸ்து பிறப்பு உறவுக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட தென்னிந்தியத் திருச்சபையின் சென்னை மண்டல மேனாள் பேராயர் மேதகு முனைவர் தேவசகாயம் அவர்களின் வாழ்த்துச் செய்தி:
“நம் வாழ்வு’ குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்களையும், கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த ஆண்டும் கடந்த ஆண்டும் அன்போடு என்னைக் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அழைத்ததோடு, ‘நம் வாழ்வு’ என்ற இந்தச் சீரிய இதழின் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்ட முதன்மை ஆசிரியர் அவர்களுக்கும், ஆயர் அவர்களுக்கும், ‘நம் வாழ்வு’ குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
ஒவ்வொரு
முறையும் ‘நம் வாழ்வு’ இதழ் என் கைகளில் வரும்போது முழுவதையும் வாசிக்க இயலாவிட்டாலும், தலையங்கத்தைத் தவறாமல் படிப்பது எனக்குப் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அது காலத்திற்கேற்ற இறைவார்த்தையாக அமைந்து, நாம் எதிர்கொள்ளும் சமூக, ஆன்மிகச் சவால்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. மக்கள் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய பிரச்சினைகள் அனைத்தும் அதில் நயமாகப் பொதிந்து கிடக்கின்றன.
கிறிஸ்து
பிறப்பு நாடகங்களில் பொதுவாக இரண்டு முக்கியக் காட்சிகள் இடம்பெறுகின்றன. ஒன்று,
மேய்ப்பர்களுடைய வயல்; மற்றொன்று,
மாட்டுத் தொழுவம். மேய்ப்பர்களுடைய வயல் - ஒளியும் தூய்மையும் மகிழ்ச்சியும்!
மேய்ப்பர்களுடைய
வயல் காட்சியில் ஐந்து முக்கிய அம்சங்கள் வெளிப்படுகின்றன:
1. ஒளி - வான
தூதர் தோன்றியபோது அந்த வயல்வெளி முழுவதும் ஒளியால் நிரம்பியது.
2. கூட்டம் - வான
தூதர்கள், மேய்ப்பர்கள் என ஒரு பெரிய
குழாம் அங்குக் கூடியது.
3. தூய்மை - இறைமகன்
பிறப்பின் அறிவிப்பால் அந்த வயல்வெளி ஒரு தூய இடமாக மாற்றப்பட்டது.
4. செழுமை - அக்காலத்தில்
நிலம், ஆடு, மாடுகள் கொண்டிருப்பது செழுமையின் அடையாளமாகக் கருதப்பட்டது.
5. மகிழ்ச்சியும் துதியும்
- முதலில் வான தூதர்கள் துதித்தனர்; பின்னர் மேய்ப்பர்களும் துதியின் குரலாக மாறினர்.
மாட்டுத்தொழுவம்
- வறுமையின்
மத்தியில்
வெளிப்பட்ட
இறையன்பு!
இரண்டாவது
காட்சியான, மாட்டுத்தொழுவம். வெளிப்படையாக அது இருளும் வறுமையும் நிறைந்த இடமாக இருந்தாலும், அதுவே உலகிற்கு ஒளியைக் கொடுத்த இடமாக மாறியது. இயேசு பிறந்த தருணத்திலிருந்தே அவரை அழிக்க சதிகள் தொடங்கின. வாழ்நாள் முழுவதும் அவர் இருளின் சூழலில் வாழ்ந்தார்.
அவரைச்
சூழ்ந்து மக்கள் கூட்டம் இருந்தாலும், அவர் அனுபவித்தது ஆழ்ந்த தனிமை. பன்னிரண்டு திருத்தூதர்களும் கூட அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ‘இவர் யார்?’ என்ற கேள்வி அவர்களுக்குள் இருந்தது. அந்தத் தனிமையின் உச்சம் கெத்சமெனி தோட்டத்தில் வெளிப்பட்டது.
இயேசு
வாழ்ந்த கலிலேயா பகுதி, கிராமங்களும் ஏழை மக்களும் நிறைந்த பகுதி. சமயத்தால் ஒதுக்கப்பட்டவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டார். வறுமையை அவர் தன்னிச்சையாக ஏற்றார். பிறப்பில் கந்தைத்துணி; இறப்பில் பிறருடைய கல்லறை. படகு, கழுதை, கல்லறை - அனைத்தும் அவருக்கு இரவலாக இருந்தன. அதனால்தான் அவர் கூறினார்: “நரிகளுக்கு வளைகள் உண்டு, வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு; மானிட மகனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.”
இம்மானுவேல்!
- எப்போதும்
நம்மோடு இருக்கும்
கடவுள்!
யோவான்
நற்செய்தியாளர் கூறுவதுபோல, “வார்த்தை மனிதனானார்!” தனிமையில் இருப்பவர்களுக்குத் துணையாகவும், துயரில் இருப்பவர்களுக்கு ஆறுதலாகவும் இயேசு வாழ்ந்தார். அவருக்கு ‘இம்மானுவேல்’ என்று
பெயரிடப்பட்டது - ‘கடவுள் நம்மோடு இருக்கிறார்’ என்பதற்கான
அடையாளம்.
இயேசு சென்ற
இடமெல்லாம்
தூய்மையடைந்தது!
மனிதர்களாக
இருந்தாலும், இடங்களாக இருந்தாலும். வெளிப்படையான தூய்மையைவிட, உள்ளார்ந்த தூய்மையையே இறைவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவர் போதித்தார். பசியிலிருந்தவர்களுக்கு உணவளித்தார். துயருற்றவர்களின் கண்ணீரைத் துடைத்தார். உடல்சார்ந்த செழுமையை மட்டுமல்ல, ஆன்மிகச் செழுமையையும் மீட்பையும் வழங்கினார். மனிதரை இறைப்பிள்ளைகளாக உயர்த்தினார்.
இறுதியாக,
ஒரு கேள்வி நம்முன் நிற்கிறது: நமக்கு வாய்ப்புக் கிடைத்தால், நாம் மேய்ப்பர்களுடைய வயலுக்குச் செல்ல விரும்புகிறோமா? அல்லது மாட்டுத் தொழுவத்திற்குச் செல்லத் தயாராக இருக்கிறோமா?
இயேசு
பிறந்தது செழுமையில் அல்ல; வறுமையில்! ஒளிமிக்க இடத்தில் அல்ல; இருளில்! அந்த இருளையே ஒளியாக மாற்ற வந்தார். அந்த ஒளி இன்றும் நம் வாழ்வை மாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த ஒளியை ஏந்தி வாழ்வதே உண்மையான கிறிஸ்துமஸ்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!