பா.ச.க. முன்னெடுத்து வரும் மத அடிப்படையிலான அரசியலுக்கு எதிராக, ஒரு வலுவான மற்றும் நம்பகமான மாற்று அரசியல் கட்டமைப்பை காங்கிரஸ் கட்சி இதுவரை உருவாக்கத் தவறியிருப்பதே இந்திய அரசியலின் முக்கியக் குறைபாடு.
மேனாள்
பிரதமர் திரு. மன்மோகன் சிங் தலைமையிலான பத்து ஆண்டு கால ஆட்சி (2004-2014) பொருளாதார ரீதியாகவும், ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்பதிலும் ஒப்பீட்டளவில் சிறப்பாகவே செயல்பட்டது. ஆனால், அந்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட ‘2ஜி’ உள்ளிட்ட ஊழல் புகார்கள், எதிர்க்கட்சிகளாலும் ஊழலுக்கு எதிரான இயக்கங்களாலும் பெரிதுபடுத்தப்பட்டன. இது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான ஒரு பெரும் அரசியல் அதிர்வலையை மக்கள் மத்தியில் உருவாக்கியது.
அதேநேரத்தில்,
‘குஜராத் வளர்ச்சி மாதிரி’
(Gujarat Model) என்ற
அரசியல் பிரச்சாரம் முன்னிலைப்படுத்தப்பட்டு,
2014-ஆம் ஆண்டு இந்திய அரசியலில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதன் பின்னர் திரு. மோடி தலைமையில் அமைந்த பா.ச.க.
அரசு, மன் மோகன் சிங் காலத்தில் உருவாக்கப்பட்ட வலுவான பொருளாதார அடித்தளம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மென்பொருள் துறை மற்றும் உயர்கல்வி விரிவாக்கம் போன்ற காரணங்களால் பொருளாதார வளர்ச்சியை ஓரளவுக்குத் தக்கவைத்துக்கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இதே காலகட்டத்தில் இந்த ஆட்சி தெளிவான முதலாளித்துவ ஆதரவு கொண்ட ஒன்றாக மாறியது. அம்பானி, அதானி போன்ற சில பெரு நிறுவனங்கள் அபார வளர்ச்சியடைந்த நிலையில், நாட்டின் செல்வம் ஒருசிலரின் கைகளில் மட்டுமே குவியும் சூழல் உருவானது. சிறு தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை மக்கள் கடுமையான பொருளாதார அழுத்தங்களுக்கு ஆளாகினர். நடைமுறையில், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டுமே நன்மை பயக்கும் அரசியலாக இது மாறிவிட்டது.
இதனுடன்
சேர்ந்து பா.ச.க.
ஆளும் பல மாநிலங்களில் சிறுபான்மைச்
சமூகங்களுக்கு எதிரான போக்குகள் வெளிப்படையாகத் தெரிந்தன. மதச்சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசமைப்பு உறுதி செய்துள்ள சமத்துவம் ஆகியவை கேள்விக்குறியாகின. அண்மைக்காலமாக, இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கிறிஸ்துமஸ் போன்ற சிறுபான்மையினரின் விழாக்கள் மதவாதக் கும்பல்களால் தாக்கப்படுவது ஓர் அசாதாரணமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இது இந்திய சனநாயகத்தின் ஆன்மாவிற்கே விடுக்கப்பட்ட சவாலாகும்.
இத்தகைய
சூழலில், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது, பா.ச.க.
சனநாயகமற்ற முறைகளைக் கையாள்கிறது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல், பதவி ஆசை காட்டி இழுத்தல் போன்ற செயல்களின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைத் திட்டமிட்டு வீழ்த்துகிறது. மத்தியப்பிரதேசம், அருணாச் சலப்பிரதேசம், கோவா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் இந்திய சனநாயக வரலாற்றில் கரும்புள்ளிகளாகவே கருதப்படவேண்டும். அது மட்டுமல்லாது, அண்மையில் கேரள மாநிலம் மட்டத்தூரில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில், இடதுசாரி கட்சிக்கு எதிராக பா.ச.க.
ஆதரவு பெற்ற வேட்பாளரைக் காங்கிரஸ் உறுப்பினர்களே ஆதரித்த சம்பவம், அக்கட்சிக்குள் நிலவும் கொள்கைத் தெளிவின்மையை அம்பலப்படுத்துகிறது.
மதச்சார்பற்ற
இந்திய அரசியல் என்பதில் திரு. இராகுல் காந்தி உறுதியாகத் தோன்றினாலும், காங்கிரஸ் கட்சிக்குள் கொள்கையற்றத் தலைவர்கள், பதவி ஆசை கொண்டவர்கள் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கியவர்கள் இன்னும் நீடிப்பது கட்சியின் பலவீனமாக உள்ளது. பல மாநிலங்களில் கட்சியின்
அடிப்படைக் கட்டமைப்பு (Grassroot level)
செயலற்றுப் போயுள்ளது.
இந்த
உள்நிலை பலவீனங்களைச் சரிசெய்யாமல், தேர்தல் காலங்களில் மட்டும் செயல்பட்டுவிட்டு, மற்ற நேரங்களில் அமைதியாக இருந்தால் பா.ச.க.-வின் மதவாத அரசியலுக்கு காங்கிரசால் ஒருபோதும் மாற்றாக முடியாது. தேர்தல் அரசியலைத் தாண்டி தினசரி அரசியல் தலையீடு, தொடர்ச்சியான மக்கள் இயக்கங்கள், மதவாதத்திற்கும் கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்திற்கும் எதிரான தெளிவான செயல்திட்டங்கள் காங்கிரசுக்கு அவசியமானவை.
மேலும்,
காங்கிரஸ் தென் மாநிலங்களை மட்டுமே நம்பியிருக்காமல், வட இந்திய அரசியலில்
தீவிரக் கவனம் செலுத்தவேண்டும். அங்குள்ள ஏழைகள், விவசாயிகள், தலித் மற்றும் பழங்குடியினரின் பிரச்சினைகளை நேரடியாகக் களத்தில் நின்று பேசவேண்டும். அரசமைப்பைப் பாதுகாத்தல், மதச்சுதந்திரத்தை உறுதி செய்தல் மற்றும் சமூக நீதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றைத் தனது முதன்மை அரசியல் அடையாளமாகக் காங்கிரஸ் மீண்டும் கட்டமைக்கவேண்டும்.
இறுதியாக,
இந்திய சனநாயகம் என்பது வெறும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான விளையாட்டு அல்ல; மாறாக, அது நீதி, சமத்துவம், கண்ணியம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மீது கட்டப்பட்ட ஒரு சமூக ஒப்பந்தமாகும். அந்த அறநெறி அரசியலை மீண்டும் மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வர முடியுமா? என்பதே
வருங்கால இந்தியாவின் மிக முக்கியமான கேள்வி.