news-details
சிறப்புக்கட்டுரை
கிழவனும் கிழவியும் (வலையும் வாழ்வும் – 36)

பேரன் விடுமுறைக்கு வருகிறான் என்ற செய்தி அறிந்ததிலிருந்து சிங்கராயன் மிகவும் பரபரப்பாகவே இருந்தார். மாப்பிள்ளைக்குத் துபாயில் வேலை கிடைத்தபிறகு மகள், பேரன் என்று குடும்பமே அங்கே சென்று செட்டிலாகிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் விடுமுறைக்காக அவர்கள் ஊர் வருவதுண்டு.

இப்போ வினோ என் தோளுக்கு மேலே வளர்ந்திருப்பான்ல. அவனுக்கு மாம்பழம்னா ரொம்பப் பிடிக்கும். இராயப்பன் கிட்டச் சொல்லி மாங்கா பறிச்சி பழுக்க வைக்கணும்என்று தன் மனைவி சிறியபுஷ்பத்திடம் வீட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டு கூறிக்கொண்டிருந்தார் சிங்கராயன்.

பிள்ளைங்களுக்கு அங்க அப்படி என்ன சாப்பிடக் கிடைக்குதோ? வீட்டை விட்டு நம்ம ஊர் மாதிரி வெளியே வரமுடியுமா? வினோவிற்குச் சைக்கிள் ஓட்டத் தெரியுமோ... தெரியலையோ? போன வருசமே அவனுக்குச் சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சேன். அவனை நம்ம செட்டிக்குளத்துக்குக் கூட்டிட்டுப்போய் நீச்சல் சொல்லிக்கொடுக்கணும்; சில்லிக்குளத்துல தூண்டில் போட வச்சி விரால் மீன்பிடிச்சிக் கொடுக்கணும்; தென்னந் தோப்புக்குக் கூட்டிக்கிட்டுப்போய் இளநீர் வெட்டி கொடுக்கணும்என்று கூறிக்கொண்டே போகையில், சிறியபுஷ்பம் குறுக்கிட்டு, “கொஞ்சம் வம்பளக்காம இருங்க. எப்பப் பாத்தாலும் ஓயாம பேரன் புராணமே பேசிக்கிட்டு இருக்கிறது...” என்று வாய்க்காலில் புரண்டோடும் வெள்ளத்தைக் கரை மண்ணெடுத்து அடைப்பது போல கிழவனின் வாயடைத்தாள் கிழவி.

இதுவே பழைய சிங்கராயன் என்றால் சிறியபுஷ்பத்தின் இந்தப் பேச்சுக்கு இந்நேரத்திற்கு அவள் கன்னத்தைப் பழுக்கவைத்திருப்பார். வயதான பிறகுதான் சிறியபுஷ்பத்தால் இப்படியேனும் அவரிடம் பேசமுடிகிறது.

சிங்கராயனுக்குக் கொஞ்ச நாளாகவே தன் பேரனுக்குத் தன் சிறுவயது விளையாட்டுகளையும் பழக்கவழக்கங்களையும் சொல்லித்தர வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார். சிறியபுஷ்பமும் தன் பங்கிற்கு அச்சுமுறுக்கு, சுத்துமுறுக்கு, அதிரசம், முந்திரிக்கொத்து என்று பண்டங்கள், பலகாரங்கள் செய்து டின் டப்பாவிலே அடைக்கத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

திருவிழாவை முன்னிட்டு வீட்டிற்கு முன்பாக வரும் மரியம்மாவின் தேருக்காகக் காத்திருப்பது போல வீட்டிற்கு முன்பாக கிழவனும் கிழவியும் தன் பேரனுக்காகக் காத்திருந்தார்கள்.

கார் ஒன்று வீட்டிற்கு முன்பாக வந்து நின்றது. பேரன் சிங்கராயன் எண்ணியதுபோல தன் உயரத்திற்கு வளர்ந்திருந்தான். சிறிதாக அரும்பு மீசையும் வளர்ந்திருந்தது. புட்டிக் கண்ணாடி, டி-சர்ட், ஜூன்ஸ் என்று வெளிநாட்டுப் பிள்ளைப்போல இருந்தான் அவன்.

ஹாய் தாத்தா! ஹவ்வார் யூ?” என்று ஆங்கிலத்தில் பேசியது சிங்கராயனுக்கு அடிவயிற்றைக் கலக்கியது.

இவனுக்கு இன்னும் தமிழ் ஒழுங்கா பேசத் தெரியலைப்பா. ஸ்கூல்ல கூட பிரெஞ்சுதான் செக்கண்ட் லாங்குவேஜ். நாங்க வீட்லேயும் தமிழ்ல பேசுறதில்லையா... அதான்என்றாள் மகள். குளத்து மீன்கள் தண்ணீர் மேல்பரப்புக்கு வந்து காற்றோடு ஏதோ இரகசியம் பேசிவிட்டு, ‘சட்டென்று உள்ளே செல்வதுபோல தன் தந்தையிடம் இவற்றைச் சொல்லிவிட்டு தன் சூட்கேசைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள் மகள்.

சிங்கராயனால் தன் பேரனிடம் நினைத்தது போல இம்முறையும் ஒட்டி உறவாட முடியவில்லை. செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கும் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார். அவன் ஏதேதோ பேஸ் டைம், வாட்ஸ்அப், ஸ்நாப் சாட், ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ்... என்றெல்லாம் கூறுவான். ஆனால், இவருக்குத் தன் பேரன் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்திருக்கிறானோ என்று எண்ணத்தோன்றும்.

சில நேரம் பேரன் தன்னிடம் வந்து ஏதேதோ பேசுவான்; ஆனால், அவருக்கு ஒன்றும் புரியாது. சில நேரம் தன் பேரனிடம் குளம், கோயில், வயல், தோப்பு என்றெல்லாம் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஆனால், அவனுக்கு இதிலெல்லாம் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. இம்முறை அவன் அறையிலிருந்து வெளியே வருவதே அரிதாக இருந்தது. வந்தாலும் தன் போனில் ஏதோ செய்துக் கொண்டிருப்பான் அல்லது ஆங்கிலத்தில் யாரிடமோ அரட்டையடித்துக் கொண்டிருப்பான். சில நேரம் அவன் வீட்டில் இருக்கிறானா? என்ற சந்தேகமே வந்துவிடும். தன் மகளிடம், ‘வினோ என்ன செய்கிறான்?’ என்று கேட்டால், ‘அப்பா, அவனுக்கு ஆன்லைன் கிளாஸ் போயிட்டு இருக்குப்பா. அவன டிஸ்டர்ப் பண்ணாதீங்கஎன்று பதில் வரும்.

வினோவின் செய்கை சிங்கராயனுக்குச் சில நேரம், ‘இவர்கள் இதற்காக இவ்வளவு தூரம்  வந்தார்கள்; இங்கு வராமலேயே இருந்திருக்கலாம்என்று நினைக்கத்தோன்றும். ‘அவன் உலகத்திற்குள் நம்மால் நுழையவே முடியாது போலும்என்று அவராக நினைத்துக்கொண்டு தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார்.

இருபது நாள்கள் விடுமுறை இமைமூடித் திறக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது. அப்பா, அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற சம்பிரதாயச் சந்திப்பு நிறைவடைந்தது. கொண்டு வந்த சூட்கேசுகள் திறக்கப்படாமலேயே காரில் ஏற்றப்படுகின்றனவோ... என்னவோ?

கொடியசைத்து அனுப்பப்படுகின்ற சிறப்பு இரயிலைப்போல அவர்களுக்கு வழக்கம்போல கையசைத்து வழியனுப்பி வைத்தார்கள் அந்தக் கிழவனும் கிழவியும். குளம், வயல், தோப்பு, மீன், மாம்பழம் என்ற சிங்கராயனின் திட்டங்கள் ஒன்றும் இம்முறையும் ஒத்துவரவில்லை. சுத்துமுறுக்கும் அச்சுமுறுக்கும் வழக்கம்போல டப்பாவிலேயே அடைபட்டுக்கிடந்தது.

சிங்கராயனும் சிறியபுஷ்பமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு அடுத்த ஆண்டு வரவிருக்கும் தன் மகளுக்காகவும் தன் பேரனுக்காகவும் இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டனர்.  

நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்களில் நமக்கு ஏதாவது தெரியாமல் போய்விடுமோ? அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் நம் பங்கு இல்லாமல் போய்விடுமோ? என நமக்குள் ஏற்படும் ஒருவித பய உணர்வுதான்போமோ - FOMO (Fear of Missing Out) எனலாம். 2004-இல் ஆக்ஸ்போர்டு அகராதியில்தான் முதல்முறையாக இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் தாக்கத்தினால் இத்தகைய மனப்பிறழ்வு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

அண்மையில் சமூக ஊடகங்களில்டிரெண்டாகும்காரியங்கள், சுவாரசியமான செய்திகள் அல்லது வைரல் காணொளிகளைத் தவறவிடாமல் இருக்க ஆன்லைன் தளங்களைத் தொடர்ந்து சரிபார்க்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகின்றது.

எடுத்துக்காட்டாக, தன் நண்பன் ஒரு சுற்றுலாதலத்திற்குச் சென்றுவிட்டு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தன் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருந்தால், தானும் அந்த இடத்திற்குப் போயிருக்கலாமே என்று எண்ணுவது மற்றும் போக முடியாமல் போனதை எண்ணி மனவருத்தம் அடைவதை போமோஅறிகுறி எனலாம்.

போமோபோன்ற ஆபத்துகளிலிருந்து நம்மை மீட்டெடுக்கச் சில வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். முதலாவதாக, சமூக ஊடகங்களை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளவேண்டும். நமக்குக் கிடைக்காத அனுபவங்களை எண்ணிப் புலம்புவதைக் கைவிட்டுவிட்டு, நமக்குக் கிடைத்த வேறு தனிப்பட்ட நல்ல அனுபவங்களை எண்ணி மன நிறைவடையவேண்டும்.

பிறருக்கு எது முக்கியமும் முதன்மையுமோ அது நமக்கும் முக்கியமாகவும் முதன்மையாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நமது முதன்மைகளை நாமே வடிவமைத்துக்கொள்வோம். சில வேளைகளில் சிலவற்றைத் தவறவிடுவதும் கூட நம் வாழ்க்கைக்கு நல்லது பயக்கும் என்ற உணர்வுநிலையைப் பெறுவோம். இதனைஜோமோ - JOMO (Joy of Missing Out) என்கின்றனர்.           

(தொடரும்)