பூமிப்பந்தில் பூச்சரம் சுற்றியதுபோல், படர்ந்து கிடக்கும் தமிழரெல்லாம் ஒற்றைப்புள்ளியில் ஒன்றிணைந்து கொண்டாடும் உறவுத் திருவிழா தைப்பொங்கல். சார்ந்திருக்கும் சமயம், சேர்ந்திருக்கும் சமூகம் மற்றும் வாழ்ந்துவரும் வட்டாரம் எனும் வரையறைகளைக் கடந்து, தமிழ் எனும் தனிப்பெரும் அடையாளத்தால் தொப்புள் கொடி உறவில் இதயம் பொங்கி மகிழ்ந்திருக்கும் மங்கலத் திருவிழா பொங்கல் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
மறதிக்குப்
பெயர்பெற்ற தமிழினம், மறவாமல் கொண்டிருக்கும் உயர் பண்பு நன்றிமறவாமை. தன்னை வாழவைக்கும் இயற்கைக்கும், இணைந்து இயங்கும் விலங்குகளுக்கும் நன்றிகூறும் தருணமாகப் பொங்கல் பண்டிகையைத் தமிழினம் தகவமைத்துக் கொண்டுள்ளது. அறுவடை முடிந்த கையோடு அதற்குக் காரணமானவர்களை நன்றியோடு நினைவுகூரும் நற்பண்பின் செயல்வடிவமாக, பொங்கல் விழா குதூகலத்தோடு கொண்டாடப்படுகிறது.
போகியிலே
பழையனவற்றைக் களைந்து, செங்கரும்பும் இளமஞ்சளும் கைகோர்த்து, பச்சரிசியுடன் சர்க்கரை கலந்து, சூரியன் முன்னிலையில் நெருப்புச் சுவாலைகளின் அனல் கரங்களால் புதுப்பானையில் பொங்கி வழிய பொங்கலிட்டு, மறு நாள் கால்நடைகளைக் குளிப்பாட்டி கொம்புகளில் மைதீட்டி அலங்கரித்து, கழுத்தில் பூச்சூடி அவைகளையும் தன் இணைப்பணியாளர்களாய் கௌரவித்து, நிறைவாக மானிட முகங்களைத் தரிசித்து, நலம் விசாரித்து, உறவுகளைப் பகிர்ந்திட முகத்திற்கு முகமாய் காணும் திருநாளாய் பொங்கல் விழா நான்கு நாள்களாய் நடைபெறுகிறது.
வருடந்தோறும்
தமிழர் வாழ்வில் விளக்கேற்ற வந்துபோகும் வசந்த விழாவான பொங்கலையும், அதன் பொருளையும் நடந்து வந்த வரலாற்று வழிகளை இளைய தலைமுறைக்கு விளக்கிக் கூறுவதைத் தமிழினம் தவிர்த்தே வருகிறது. விடுமுறை கிடைக்கிறது என்கிற மேலிடும் மகிழ்ச்சியோடு தமிழரின் மரபுவிழா குறிக்கப்பட்டு வருகிறது. வான் புகழ் கொண்ட தமிழரின் வரலாற்றுக் கொண்டாட்டத்தை இன்றைய தலைமுறை பள்ளிக்கு விடுமுறை, புத்தாடைகள், தொலைக்காட்சியில் புதிய திரைப்படம், சுவையான சமையல், வெளியூர் சுற்றுலா என்கிற சுழற்சிக்குள்ளே சுருண்டுவிடுகிறது. வேர்களை விலக்கிவிட்டு, கிளைகளில் மட்டுமே தோரணம் கட்டித் தொங்க விடுகிற இளைய தலைமுறையினர் பொங்கலின் பொருளினை உணர்ந்து பானையில் பொங்கலிட வேண்டும்; அங்ஙனமே பொருளுணர்ந்த தமிழினம் பொங்கி எழுந்திட வேண்டும்.
‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழர்குடி’ எனும்
உன்னதத்தைக் கொண்ட தமிழினம், வெறும் பழம்பெருமை பேசிப் பேசியே பாழாய் போய்க் கொண்டிருக்கிறது. தமிழினம் திட்டமிட்டு அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப்படுகிறது. தமிழின விரோதிகளும் துரோகிகளும் தமிழருக்குப் பாடை கட்டுவதிலே திரைமறைவு வேலைகளைத் திறம்படச் செய்து வருகிறார்கள். வேர்களை விலக்கிவிட்டு மரங்கள் தங்கள் கிளைகளுக்குத் தோரணம் கட்டுவதால் வாழ்ந்து விடமுடியாது. வேரில் வெந்நீரைப் பாய்ச்சுவதும், கிளைகளுக்கு வர்ணம் பூசுவதுமாய் சில தமிழினப் பகைவர்கள் தமிழின கற்பக விருட்சத்தை அழித்துவிட ஆலாபனை செய்துவருகிற அபாயத்தை, தமிழ்த் தலைமுறைகள் அறியாமலே அழிந்து வருகின்றன. இந்நிலையில், விழாவோடு முடித்துக்கொள்ளாமல் தமிழும் தமிழரும் விழாமல் பார்த்துக்கொள்வது தமிழ் மறவர்களின் தற்காலக் கடமையாகும்.
தனக்கெனத்
தன்னிகரற்றத் தன்மைகளைக் கொண்டு தனித்தியங்கும் உயர்தனிச் செம்மொழி எனும் உன்னதத்தைக் கொண்ட தமிழின் ஆண்டு களுக்குச் சமஸ்கிருதத்திலே பெயர்கள் சூட்டி கேவலப்படுத்தும் பழக்கம் வேறு எந்த மொழிகளிலும் இருக்கமுடியாது. அதுவும் புராணங்களின் புனைவுகளிலிருந்து பிழிந்தெடுத்த கற்பனைக் கதைகளிலிருந்து இந்த விச வேர் முளைக்கிறது. நாரத முனிக்கும் பெண் வேடம் பூண்டிருந்த கண்ணனுக்கும் பிறந்த பிள்ளைகள் அறுபது பேராம்! அவர்களின் பெயர்கள் தமிழரின் ஆண்டுகளுக்குச் சூட்டப்பட்டிருக்கின்றன.
சீரிளமைத்
திறம் வியக்கும் அன்னைத் தமிழை ஆரிய அழுக்கு பற்றிக்கொண்டதால் தமிழரின் ஆண்டுக்கு அந்நியர்களின் புராணப் புனுகுகளைக் கடனாக வாங்கி வைத்திருக்கும் இழிவை இந்த இளைய தலைமுறை அறிந்திருக்கவேண்டும். தான் பெற்றெடுத்த குழந்தைக்கு வழிப்போக்கன் பெயர் சூட்டுவதும் அதுவும் அடுத்த வீட்டுக்காரனைத் தகப்பனாக முதலெழுத்தில் குறிப்பதும் எத்தகைய அவமானம் என்று மானத்தை உயிரினும் மேலாய் போற்றுகிற தமிழ்க்குடிகள் உணரவேண்டும்.
‘தை பிறந்தால் வழி
பிறக்கும்’ என்பது
தமிழர் கண்ட வாழ்வியல் நடைமுறை. மரபுகளையும் பண்டையத் தமிழர் இலக்கியத் தரவுகளையும் கொண்டு ஆராய்ந்தால் தமிழராண்டின் தலைமாதம் தை என்பது புலனாகும்.
தமிழ் மாமேதைகள் மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. மற்றும்
பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட தமிழின அறிஞர்கள் இதனை அறுதியிட்டு உறுதி செய்திருக்கின்றனர்.
தமிழரையும்
தமிழ்நாட்டையும் வஞ்சிப்பதையே நோக்கமாகக் கொண்டு ஒன்றிய அரசுகள் இயங்குவதை வரலாற்றில் பார்த்து வருகிறோம். தமிழரின் வீர விளையாட்டாகவும் காளை இனத்தின் வீரியத்தை வலுப்படுத்தவும் நெடுங்காலமாய் நடத்தப்பட்டு வரும் மஞ்சு விரட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை முடக்க சதிசெய்தனர். தமிழினத்தின் ஒருமித்த தன்னெழுச்சிப் போராட்டமாகிய மெரினா புரட்சியால் தமிழினப் பகைவர்களின் சதி உடைக்கப்பட்டது. தமிழர் மண்ணில் வாடிவாசல்கள் திறக்கப்பட்டன.
தமிழ்நாட்டின்
வளர்ச்சியை வடநாட்டவர்கள் பொதுவாகப் பொறுத்துக்கொள்வதில்லை. இந்திய ஒன்றியம் பல தேசிய இனங்களின்
கூட்டமைப்பு. இங்கே ஒரே தேசியம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனும் போலியான ஒற்றைக் கருத்தியல் நடைமுறைக்கு ஒத்துவராது. தமிழரின் தாய்நாடாம் தமிழ்நாட்டிலும் இன்னும் பிற நாடுகளில் தேசிய மொழியாகவும் கொண்டாடப்படுகிற செந்தமிழை முடக்கும் நோக்கில், இந்திய ஒன்றிய மொழிகளில் ஒன்றான இந்தி மொழியை தமிழர்மீது திணிப்பதும், இந்தியை இந்திய ஒன்றியத்தின் ஒரே தேசிய மொழி எனப் பிழையாகப் பிதற்றி, போலியாகக் கட்டமைப்பதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
வானொலி
உள்ளிட்ட ஊடகங்களிலும், தொடர் வண்டி போன்ற போக்குவரத்துகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழரின் வரிப்பணம் கலந்தே இருக்கிறது. ஆனால், இங்கெல்லாம் தமிழருக்குப் புரியாத அந்நிய மொழியான இந்தியே வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழர் தமிழரோடு உரையாட தாய்மொழி தமிழும், உலகோடு உரையாட ஆங்கிலமும் இருக்கும்போது இடைச்செருகலாக இந்தி அறியாத தமிழர்கள்மீது இந்தியைத் திணிப்பது மனித உரிமை மீறலாகும்.
தமிழை
எங்கெல்லாம் ஒழிக்க முடியுமோ அங்கெல்லாம் ஒழிப்பதற்கு அனைத்து அதிகார ஆயுதங்களையும் களத்தில் இறக்கிவிட்டு, மேடைதோறும் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சரும், மற்ற வடநாட்டு அமைச்சர்களும் தப்புத்தப்பாய்த் தமிழைப் பேசி தமிழ் ஆர்வலர்களாய் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். கோழியைப் பிடித்து குழம்பு வைக்க முயலுகிறவனும், கோழியின் மொழியிலே அதனைக் கூப்பிடுகிறான்; கொலைகாரன் தனது மொழியைப் பேசுகிறானே என்று கோழி பெருமை பாராட்டிக் கொண்டால், குழம்பில் மிதப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.
சங்கம்
வைத்து தமிழை வளர்த்த இம்மண்ணில் ‘காசி தமிழ்ச்சங்கம்’ என்னும்
தமிழுக்குத் தொடர்பில்லாத அமைப்பை மக்களின் வரிப்பணத்தில் அமைப்பதும், அதற்கு தமிழுக்கே தொடர்பில்லாதவர்களை வைத்துக் குடமுழுக்கு நடத்துவதும் தமிழுக்கும் தமிழருக்கும் இழைக்கும் அவமானமாகும். செத்துப்போன சமஸ்கிருதத்தைத் தமிழரின் தலையில் கட்டுவதை மானமிகு தமிழன்னையின் பிள்ளைகள் தலையைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்துவார்கள். கனகவிசயனின் தலையில் கல்லைச் சுமக்க வைத்து, இமய உச்சியில் சிலையெழுப்பிக் கொடியை நட்ட தமிழ் மரபின் தலைமுறைகள் இந்தக் கொடுமைகள் கண்டு கொதிக்காமல் இருப்பது வியப்பாய் இருக்கிறது.
தமிழுக்கு
எதிரான எல்லா நடவடிக்கைகளிலும் ஒன்றிய அரசுகள் ஈடுபட்டு வருவது வரலாற்றை அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள். தமிழ்நாட்டின் மக்கள்நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகள் போட அனைத்து முயற்சிகளிலும் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்திக்கும் இந்துத்துவ அடிப்படைவாதத்திற்கும் முட்டுக் கொடுக்கிறது. தமிழர்களுக்குத் தரவேண்டிய கல்வி நிதியைத் தராமல், புதிய கல்விக் கொள்கை எனும் அறிவியலுக்கு முரணான புராணப் புனைவுகளையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடத்தனத்தையும் திணிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் உபகரணங்களும் அறிவுசார் உலகை வழிநடத்தும்போது புராணங்களையும் கற்பனைக் காப்பியங்களையும் கல்விக் கருவூலமாகப் போதிக்கிறார்கள். பகுத்தறிவுப் பூமியான தமிழ் மண்ணில் மூடத்தனங்களை மூலதனங்களாகக் கொண்டு மக்களிடையே பிற்போக்குத்தனத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அமெரிக்காவின்
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்து உலகிற்குத் தந்தனர்; ஆனால், புல்புல் பறவையில் ஆகாயத்தில் மனிதர்கள் பறந்ததாக மக்களின் காதில் பூ சுற்றுவதையும், பொய்களை
விதைப்பதையும் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார்கள். வரலாறுகளைத் திரித்து, கோவில்களை இடித்து, மசூதிகளையும் கிறித்தவ ஆலயங்களையும் அமைத்தார்கள் என்று வதந்திகளைப் பரப்பி அமைதித் தோட்டமான தமிழ் மண்ணில் மதக் கலவரங்களுக்கு வித்திடுகிறார்கள். தமிழ் மண்ணை ஒருகாலமும் ஆளமுடியாது என்பதால், புறவாசல் வழியே அரசியல் முகவர்களை ஆளுநர்களாய் அனுப்பி மக்களாட்சிக்கு விரோதமாய் மன்னராட்சி நடத்துகின்றனர்.
‘பெற்றோரைச் சுற்றிவருவது பூமியைச் சுற்றுவதற்குச் சமம்’ எனப் புரட்சியான வேதம் கூறிய தமிழ்க் கடவுள் முருகனை வைத்து அரசியல் செய்து, அதிகாரத்தைப் பிடிக்க குறுக்கு வழியில் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் கும்பலை, தன்மானம் கொண்ட தமிழினம் அடையாளம் காணவேண்டும். தமிழரின் இரத்தத்தை எண்ணெய் ஆக்கி, அதிலே குன்றத்து தீபம் ஏற்றி மகிழ்வு காணும் மனநிலை கொண்டவர் அல்லர் முருகப்பெருமான். தமிழரின் வாழ்வில் தீபம் ஏற்றுவதைப் பற்றி சிந்தியாமல் மசூதிக்கு அருகில் உள்ள எல்லைக் கல்லில் தீபம் ஏற்றி அரசியல் இலாபம் தேடும் மதவெறிக் கும்பலுக்குத் தமிழர்கள் இரையாகி விடக்கூடாது.
ஆட்சியில்
இருந்த பாண்டியன் தவறிழைத்ததால், மதுரையை எரித்த வீரத்தமிழச்சி கண்ணகி மரபில் வந்த தமிழ் வேங்கைகள், கடவுளின் பெயர் சொல்லி தமிழரிடையே பிளவுகளையும் மதவெறிகளையும் ஏற்படுத்தும் விஷமத்தனத்தை வேரோடுப் பிடுங்கி நெருப்பில் வீசவேண்டும். இன்று தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி, மக்கள் நலத்திட்டங்களைப் பின்னுக்குத்தள்ளி மதவெறியூட்டி அதிகாரப் பசியைத் தீர்த்துக்கொள்ள ஆட்சியாளர்கள் முயல்வதும், அதற்குப் புனிதமிக்க நீதித்துறையில் புகுந்துள்ள மதவெறி ஓநாய்கள் ஒத்தாசை புரிவதையும் தமிழ்மக்கள் வேடிக்கை பார்க்கக்கூடாது. வடவர்களின் சூழ்ச்சி எந்த வடிவில் வந்தாலும், தன்மானம் கொண்ட தமிழ்த்தாயின் பிள்ளைகள் அதனைப் பிடுங்கி எறிய போர்க்குணத்தோடு புறப்பட்டு வரவேண்டும்.
பொங்கலுக்கு
முன்னே பழையனவற்றையும் அவசியமற்றதையும் கழிவுகளையும் நெருப்பிலிட்டு எரித்துப் போகி கொண்டாடும் தமிழினம், தமிழருக்கு எதிரான இந்தித் திணிப்பு, இந்துத்துவத்
திணிப்பு, புராணங்களைப் புகுத்துதல், அறிவுக்கு எதிரான மூடத்தனங்களைப் பரப்புதல் என்று நீளும் குப்பைகளைப் பகுத்தறிவுத் தீயில் எரித்துவிட்டு பொங்கலிட புறப்பட வேண்டும்.
தமிழினமே!
இனியும் நீ பொறுத்தது போதும்.
பொங்கல் திருநாளில் தமிழரின் பானைகள் பொங்குவதுபோல, ஒட்டுமொத்தத் தமிழினமும் இத்தமிழர் விரோதப் போக்குகளுக்கு எதிராகப் பொங்கி எழவேண்டும்.
எங்கள் வாழ்வும்
எங்கள்
வளமும்
மங்காத தமிழ்
என்று
சங்கே
முழங்கு!