news-details
ஞாயிறு மறையுரை
சனவரி 25, 2026, ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு - எசா 9:1-4; 1கொரி 1:10-13,17; மத் 4:12-23 (இறையாட்சியின் பணியாளர்கள் நாம்!)

இறையாட்சி என்பது விண்ணகம் அல்ல; அது ஓர் இடமல்ல; ஓர் அரசியல் ஆட்சி முறையுமல்ல; அது கடவுள் மையமாக இருக்கும் வாழ்க்கைமுறை; அன்பு செய்யும் ஆட்சி நிலை; நீதி நிலவும் இறைச்சமூகம்; மன்னிப்பு மலரும் உறவுமுறை; அமைதி விதைக்கப்படும் இடம். இறைவன் மனித வாழ்வுக்குள் நுழைவதும் மனித இதயங்களில் அவரது ஆட்சி மலர்வதுமே இறையாட்சி. இறையாட்சி என்பது இறைவனின் விருப்பம் நிறைவேறும் இடம். இறைவனின் ஆட்சி நிலையானது; உலகளாவியது; ஆன்மிகமானது.

இயேசு தம் பணியைத் தொடங்கியபோது அறிவித்த முதல் செய்தி: “மனம் மாறுங்கள், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது (மத் 4:17). இறையாட்சி பேசுவதால் அல்ல; அறிவிப்பதால் அல்ல; மாறாக, அது மனமாற்றத்தின் வழியாக, இயேசுவைப் பின்தொடர்வதன் மூலம் அன்பு, சேவை, நீதி ஆகிய செயல்களால் கட்டமைக்கப்படுகிறது. இன்று இயேசு உருவாக்கிய மக்கள் இயக்கமாகிய இறையாட்சி எனும் இயக்கத்தை உலகெங்கும் எடுத்துச்செல்லும் பணியாளராய் ஒளிர்ந்திட அழைக்கப்படுகின்றோம்.

இயேசு தொடங்கிய பணிவாழ்வினை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இன்றைய முதல் வாசகம் அமைகின்றது. “செபுலோன் நாடே! நப்தலி நாடே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது (எசா 9:1,2; மத் 4:15-16) என்ற அழகிய வரிகளை இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். இவை இரண்டிற்குமான முக்கியத் தொடர்பு என்ன எனக் காண முயல்வோம்.

யோசுவா தனது தலைமையில் இஸ்ரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றபோது, அந்நாட்டின் பகுதிகளை 12 குலத்தாருக்கும் வழங்கினார். செபுலோன், நப்தலி நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் அங்கு ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருந்த வேற்றின மக்களை விரட்டிவிட்டே அவற்றை அவர்களுக்குக் கொடுத்தார். ஆனால், செபுலோன், நப்தலி நாட்டிலிருந்த வேற்றின மக்களை அவரால் விரட்ட முடியவில்லை. எனவே, யோசுவா இந்த இரண்டு நாடுகளையும் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கியபோது, அங்குள்ள வேற்றின மக்களோடு இணைந்து வாழவேண்டிய சூழலே ஏற்பட்டது. இது இஸ்ரேல் மக்களுக்கு ஒரு பெரும் அவமதிப்பாக இருந்ததாகவே கருதப்படுகிறது. மேலும், இந்த இரு நாடுகளும் கலிலேயப் பகுதியில் யோர்தானுக்கு அப்பால் வருகின்றபெருங்கடல் வழிப்பகுதியேஎன்றும் கூறப்பட்டுள்ளது. ‘பெருங்கடல் வழிப்பகுதிஎன்பது இஸ்ரயேல் நாட்டையும் எகிப்து போன்ற பிற நாடுகளையும் இணைக்கும் பெரியதொரு வியாபாரச் சாலையாகவும் அமைந்திருக் கின்றது.

இஸ்ரயேலின் வடபகுதியில் அமைந்துள்ள இந்தப் பகுதிகள்தாம் அசீரியர்களால் முதலில் கைப்பற்றப்பட்டன. கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் அசீரியர்கள், வட அரசான இஸ்ரயேலைத் தாக்கி, சமாரியாவைச் சூறையாடி, இஸ்ரயேல் நிலப்பரப்பையே மாற்றி அமைத்தார்கள். வளமையும் செழுமையும் அழகும் சேர்ந்த கலிலேயப் பகுதி இவர்களால் கைப்பற்றப்பட்டு, பேரழிவுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கப்பட்டது. தென்னரசான யூதேயாவை விட, வட அரசான இஸ்ரயேல் பல வழிகளில் வல்லமையுடையதாக இருந்தபோதும் அழிந்துபோனது. இந்தப் பகுதிகளின் அழிவு ஆண்டவருடைய தெரிவிலே நிகழ்ந்தது (9:1) என்று எசாயா கூறினாலும், செபுலோனையும் நப்தலியையும், பிற்காலத்தில் அதிகளவாகப் பிற இனத்தவர் வாழ்ந்த பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதிகள் மற்றும் பிற இனத்தவர் வாழும் கலிலேயா போன்றவை ஆண்டவரால் மேன்மைப்படுத்தப்படும் என்கிறார். எசாயா இணைத்துக் கூறிய ஆசிமொழிகள் பிற்காலத்தில் இந்தப் பகுதியில் (கலிலேயாவில்) இயேசு பணி செய்ததை நினைவூட்டுகிறது.

காரிருளின் துயரத்திலிருந்த, அவமதிப்புக்குள்ளான பகுதியிலிருந்து இயேசு தமது பணியைத் தொடங்குவது, “செபுலோன் நாடே! நப்தலி நாடே!... காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள் (எசா 9:1) என்று இறைவாக்கினர் எசாயா கூறியுள்ள இறைவாக்குகள் இயேசுவில் நிறைவேறுகின்றதாக மத்தேயு காட்டுகின்றார் (மத் 4:15). இயேசு யூத மக்களுக்கு மட்டுமே நன்மைதரும் விதத்தில் எருசலேம் ஆலயத்தில் தமது நற்செய்திப் பணியைத் தொடங்காமல், எல்லா நாடுகள் மற்றும் இன மக்களைச் சென்றடையும் வகையில், “மனம் மாறுங்கள்; ஏனெனில், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது (மத் 4:17) என்று முழக்கமிட்டுத் தமது பொதுவாழ்வுப் பணியை எல்லா இனத்தவரும் வாழும் செபுலோன், நப்தலி நாடுகளின் பகுதியில் தொடங்குகின்றார்.

இயேசுவின் பணிவாழ்வைக் குறித்து ஏற்கெனவே சிமியோன் இவ்வாறு சான்று பகர்கின்றார்: “இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை (லூக் 2:32). நற்செய்தியாளர் யோவானும் இயேசுவை ஒளியாகக் காண்கிறார் (யோவா 1:9). மேலும், ‘இயேசுவே உலகின் ஒளிஎன்கிறார் (8:12). இருளைப் போக்கும் ஒளியாக இயேசுவைக் கடவுள் இவ்வுலகிற்கு அனுப்பியதுபோல, நாமும் அனைவருக்கும் பணியாற்றிட கடவுள் இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளார். நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் இயேசுவில்தாம் முழுமைபெறுகிறது. ஆகவே, இயேசுவின் பணியை நாம் தொடரவேண்டும் என்பதுதான் இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு நமக்குத் தரும் அழைப்பு.

இறையாட்சிப் பணியில் நம்மையே நாம் இணைத்துக்கொள்ளும்போது, சமூகத்தில் நிகழும் நிகழ்வுகள் பற்றிய பகுப்பாய்வு நமக்குத் தேவை. இயேசு தம் சமூக மக்களின் வாழ்வுநிலையையும், மக்களை அடிமைப்படுத்திய உயர்குடியினரின் அரசியல் மற்றும் சமய ஆதிக்கத்தையும் நன்கு அறிந்திருந்தார். அடக்குமுறையால் வசூலிக்கப்பட்ட ஆலய வரியும் மக்கள் வறுமையில் வாட சிலர் மட்டும் வளமையில் வாழ்வதன் பின்னணியைத் தெரிந்திருந்தார். தம் சமூகத்தில் அரசியலும் ஆன்மிகமும் எவ்வாறு மக்களை ஏய்ப்பதிலும் ஏமாற்றுவதிலும் கைகோர்த்துச் சென்றன என்பதை அவர் அறியாமல் இல்லை. தம் சமூகத்தைப் பற்றிய ஆய்வும், சமூகத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய விழிப்புணர்வுமே இயேசுவின் இறையாட்சிப் பணிக்குக் கூர்மை தந்தன எனலாம். இயேசு தாம் வாழ்ந்த சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்ததோடு நின்றுவிடாமல் அல்லது போதனையோடு விட்டுவிடாமல் தம் மக்கள்மீது கொண்ட மட்டற்ற அன்பினாலும் கரிசனையினாலும் ஆர்வத்தோடு பணிசெய்ய முன்வருகிறார்.

ஆன்மிகம் என்ற போர்வையில் தங்கள் போலித் தன்மையை மறைத்து, மக்களைத் தவறான வழியில் நடத்திய சமயத் தலைவர்களை எதிர்ப்பதன் விளைவுகளையும் அவர் தெரிந்திருந்தார். இருப்பினும், இறையாட்சிப் பணி என்பது இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்பதால், வேறுபாடு பாராமல் அனைவரும் வாழ்வு பெற உழைக்க முன்வருகிறார். வறுமையும் ஏழ்மையும் அகன்று, நீதியும் உண்மையும் உயர்ந்து, எங்கும் சமத்துவம் ஓங்கச் செய்வதே இயேசுவின் இறையாட்சிக் கனவு. தாம் சுமக்கும் கனவைத் தனித்து ஆற்றிட விரும்பாமல், பாதிக்கப்பட்ட மக்கள் நடுவிலிருந்து கரம்கோர்க்க சிலரை இப்பணிக்கென அழைக்கிறார். அவருடைய அழைப்பில் ஆடம்பரம் இல்லை; ஆர்ப்பாட்டம் இல்லை. சமூகத்தின் கடைநிலையிலிருந்து அழைக்கப்பட்டவர்கள் அவர்களைப்போலக் கடைநிலையில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை உணர்ந்து, அவர்கள் உயர்வுக்காக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை இயேசுவுக்கு இருந்தது. இயேசுவின் இறையாட்சிப் பணிக்காக அழைக்கப்பட்டவர்களும் தியாகத்தோடு உழைத்தனர்.

இன்று நாம் எவ்வாறு இறையாட்சிப் பணியைத் தொடர முடியும்? கிறித்தவ வாழ்வின் இரு முக்கியக் கூறுகள்: 1. மனமாற்றம், 2. இயேசுவைப் பின்தொடர்தல். இயேசுவின் மீது கொண்ட அளவற்ற அன்பால் நாம் அவரைப் பின்செல்ல ஆரம்பித்தால் நம் வாழ்வில் அடிப்படை மாற்றங்கள் எளிதில் உருவாகும். இயேசுவின் இறையாட்சிக் கனவின் இலட்சியமே பிளவுகள் நீக்கி, பிரிவினை களைந்து, ஒன்றிணைந்து வாழ்வதுதான். ஆனால், இன்று சாதி, மதம், இனம், மொழி, வசதி, படிப்பு எனப் பல்வேறு காரணிகளால் பிளவுபட்டு வாழ்கிறோம். திரு அவைக்குள் இருக்கும் சாதியப் பிளவுகளையும் மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகவே இன்றைய இரண்டாம் வாசகத்தில், இயேசுவின் பெயரால் ஒன்றாய் வாழக் கேட்டுக்கொள்கிறார் பவுல். கிறிஸ்துவின் மனநிலையை (பிலி 2:5) எல்லாரும் கொண்டிருந்து, அவரில் ஒன்றாய் வாழ்வதால் (2கொரி 5:17) ஒற்றுமை நிலைக்கும் என்கிறார். கிறித்தவ ஒன்றிப்பும் மதநல்லிணக்கமும் காலத்தின் கட்டாயம்.

பிளவை ஏற்படுத்துபவன் அலகை; நம்மை இணைத்து வைப்பவர் கடவுள். பிளவுபட்டால் நாம் பலவீனர்கள்; ஒன்றுபட்டால் நாம் அசைக்க முடியாதவர்கள். இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஒத்தக் கருத்துடையவர்களாய் ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டவர்களாக இயேசுவைப் பின்தொடர முயல்வோம். இறைவார்த்தை ஞாயிறைக் கொண்டாடும் இன்று, இறைவார்த்தை என்பது வாசிக்கப்படுவதற்காக அல்ல; வாழப்படுவதற்காக என்பதை உணர்ந்து இறையாட்சியின் நிறைசாட்சியாக நித்தமும் வாழ்ந்து இயேசுவின் பணியாளர்களாய் மாறுவோம்.