வீட்டிற்குள் பழம், பூந்தட்டுகளுடன் நுழைந்தவர்களைப் பார்த்ததும் கருணாகரனுக்கும் இந்திராதேவிக்கும் ஒன்றும் புரியவில்லை.
“வணக்கம், வணக்கம்...” என்றபடி உள்ளே வந்தார்கள் கலையரசனும் சுந்தரியும்.
“வாங்க, நீங்க யாரு? என்ன விசயமாய் வந்திருக்கீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார் கருணாகரன்.
“என் பேரு கலையரசன். சிட்டியில் பெரிய ரியல் எஸ்டேட் ஓனர். இவளோட பேரு சுந்தரி, என் மனைவி. நாங்க டாக்டர் சகாதேவனுடைய பெற்றோர். இப்ப உங்க மகள் டாக்டர் யாழினியை சகாதேவனுக்குப் பெண் கேட்கத்தான் வந்திருக்கோம்” என்றார்
கலையரசன்.
“அப்படி விளக்கமாகச் சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும்! டாக்டர் சகாதேவன் யாழினியோட வேலை செய்ற டாக்டர். அது எங்களுக்கு யாழினி சொல்லியிருக்காள்” என்றாள்
இந்திராதேவி.
“நான் ஆளுங்கட்சியிலே முக்கியப் பதவியிலே இருக்கேன். எங்கிட்டே ஏகப்பட்டோர் வேலை செய்றாங்க. உங்க மகளை என்னோட பையனுக்கு கல்யாணம் முடிக்க விரும்புறோம். அதுதான் இங்கே இப்ப பெண் கேட்டு வந்திருக்கோம்” என்றார்
கலையரசன்.
“நீங்க பெண் கேட்டு வருவது சரிதான். இதை முன்னாடியே சொல்லி இருந்தால் நாங்களும் தயாராய் இருந்திருப்போம். வேற ஒன்றுமில்லே” என்றாள்
இந்திரா.
“அதனாலென்ன, அவங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை செய்றவங்க. ஒருத்தரை ஒருத்தர் நல்லாத் தெரிஞ்சவங்க. இதிலே புதுசா ஒண்ணும் அவங்க அறிமுகம் தேவையில்லே! அதுதான் கிளம்பி வந்திட்டோம்” என்றாள்
சுந்தரி.
“அதெல்லாம் சரிதான். பெண்ணுக்குப் பலர் கேட்டு வரத்தான் செய்வாங்க. அது வழக்கமானதுதான். சரி, உங்களோட விவரத்தைப் பேசுங்க” என்றார் கருணாகரன்.
“விவரம் ஒண்ணும் விரிவாச் சொல்ல வேண்டியதில்லே. அதோ உங்க பெண் படத்தைப் பார்த்திட்டோம். நல்ல அழகான டாக்டர்தான். உங்க சம்மதம் தேவைதான். சரின்னா அடுத்த வாரம் நிச்சயம், அடுத்த மாதம் உடனே கல்யாணம் நடந்திடும்” என்றார்
கலையரசன்.
“எங்க யாழினிக்கிட்டே பேசி, நாங்க அவளோட எண்ணத்தைத் தெரிஞ்சுக்க வேண்டாமா? உடனே எப்படிப் பதில் சொல்ல முடியும்?” என்றாள் இந்திரா.
“நல்லா கேளுங்க. நாங்க இருக்கும்போதே வரச் சொல்லுங்க. போனில் யாழினியோட கருத்தைத் தெரிஞ்சு சொல்லுங்க”
என்றார் கலையரசன்.
“அது சரியானதில்லே. நாங்க மகளோட உட்கார்ந்து பேசணும். அவளோட கருத்தைத் தெரிஞ்சு, பதில் சொல்றோம்”
என்றார் கருணாகரன்.
“அதுவும் சரிதான். எதையும் அவசர அவசரமாய் பேசி முடிவெடுக்கக்கூடாது. நீங்க நல்லா பேசி, கலந்துரையாடி மகளோட விருப்பம் தெரிஞ்சு சொல்லுங்க. நாங்க போயிட்டு வாரோம். நீங்க நல்ல பதிலாய் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறோம்” என்று
சிரித்தபடி எழுந்தார் கலையரசன்.
“நல்ல பதில்னா எப்படிங்க?” என்றார் கருணாகரன்.
“அவங்க நாம் சம்மதம் சொல்வோம்னு சொல்றாங்க, அதைத்தான் எதிர்பார்க்கிறாங்க. நான் சொல்றது கரெக்ட்தானே” என்று
சிரித்தாள் இந்திரா.
“அதேதான்! சம்மதிச்சா எதிர்காலம் அவங்களுக்கு நல்லா இருக்கும். ரெண்டு பேரும் டாக்டர் இல்லையா? அதைத்தான் நாங்க ஆவலாய் எதிர்பார்க்கிறோம்” என்றாள்
சுந்தரி.
“யாழினிட்டே பேசிட்டு, கட்டாயம் முடிவு சொல்லிட்றோம்” என்றாள்
இந்திரா. வந்தவர்கள் கிளம்பிப் போய்விட்டார்கள்.
(தொடரும்)