அன்றாடம் ஆலய மணியின் ஓசையைக் கேட்க வேண்டும்; அனுதினமும் திருப்பலியில் பங்கேற்று இறைவனின் திருவுடலாம் திவ்விய நற்கருணையை உட்கொள்ள வேண்டும் என்பதில் வெகு ஆர்வம் கொண்டு மதராசில் தாங்கள் வசித்த எறையூரை விட்டு, கீழச்சேரிக்கு இடம்பெயர்ந்த கைம்பெண் தாதிபத்ரி ஞானம்மாவுக்கு அவர் எதிர்பார்த்தபடியே கீழச்சேரியில் அதற்கான வாய்ப்பு அமைந்திருந்ததால் ஆன்மிகக் காரியங்களில் நிறைவு கண்டார்.
ஆலய
மணியோசை கேட்கும் தூரத்தில் குடியிருந்த அவரைச் சில காலங்களில் மற்றொரு மணியோசை பாதிக்கத்
தொடங்கியது. தினந்தோறும் கேட்கும் ஓசைதான் அது என்றாலும், காலைதோறும் அவர் கண்கள் கண்ட காட்சி அவர் மனத்தை வருத்தியது. ஒருபக்கம், ஆண் பிள்ளைகள் புத்தகப் பைகளைத் தம் தோள்களில் மாட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் நோக்கிச் சிட்டாய்ப் பறக்க, மற்றொரு பக்கம் அழுக்குப் படிந்த ஆடைகளோடு இளம்சிறுமிகள் வயல் வேலைக்குச் சென்ற காட்சி இதயத்தை இன்னலுக்குள்ளாக்கியது. ஆம், அவர் மனத்தை பாதித்தது பள்ளிக்கூட மணியின் ஓசைதான்.
தாட்டிபத்ரி
ஞானம்மாவின் தந்தை இராயண்ணா தான் பிறந்த ஊரான ஆந்திர மாநிலத்துப் பிரங்கிபுரத்தில் ஆலய வேதியராகப் பணியாற்றியவர். ஞானம்மாவுக்கு வாய்த்த கணவர் இன்னையாவும் ஒரு வேதியர். அதே பிரங்கிபுரத்தைச் சார்ந்தவர். குருத்துவப் பயிற்சி இல்லத்தில் சேர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்று வேதியர் பள்ளியில் கற்பிக்கும் திறன் கொண்டவர். தன் சொந்த ஊராம் ஆந்திராவிலுள்ள பிரங்கிபுரத்தில் குருக்களுக்கும் இறைமக்களுக்கும் பாலமாக இருந்து பணியாற்றிய இன்னையா, மறைபரப்புப் பணிக்கென பாண்டிச்சேரி சென்று அங்கு பணிசெய்த பிரெஞ்சு குருக்களுக்கு தெலுங்கு மொழியைக் கற்பிப்பதிலும், பிரெஞ்சு, ஆங்கிலம், இலத்தீன் ஆகிய மொழிகளில் இருந்த செபங்கள், நூல்களை தெலுங்கில் மொழிபெயர்ப்பதிலும் ஈடுபட்டார். மீண்டும் பிரங்கி புரத்துக்குத் திரும்பிய இன்னையா அங்கே ஞானம்மாவை மணமுடித்தார்.
இல்லற
வாழ்வின் சான்றாக அவர்களுக்கு ஐந்து ஆண்மக்கள் பிறந்தனர். தன்னுடைய ஆன்மிகப் பற்றாலும் திறமையாலும் எல்லாரின் மனம் கவர்ந்த இன்னையாவைப் பிரங்கிபுரம் பங்குக்குருவும் மதித்து நேசித்தார். அக்குருவானவர் மதராசிலுள்ள அப்போஸ்தலிக்க முதன்மைக்குருவாக இருந்த அருள்தந்தை ஜான்பென்னலி என்பவரைப் பணியின் நிமித்தம் சந்திக்க வரும்போதெல்லாம் இன்னையாவையும் உடன் அழைத்துக்கொண்டு மதராஸ் வருவார்.
இப்படி
1858-ஆம் ஆண்டில் ஒரு நாள் இருவரும் மதராசுக்குப் பயணித்த போதுதான் வழியில் ரேணிகுண்டாவில் காலரா நோயினால் பாதிக்கப்பட்டு இன்னையா இறந்துபோனார். பதினைந்து
வயதில் மணம் முடித்த ஞானம்மா, தன் முப்பத்தியேழாவது வயதில் கைம்பெண்ணானார்.
ஞானம்மாவின்
மூன்று பிள்ளைகள் மதராசிலும் செங்கல்பட்டிலும் குருத்துவப் பயிற்சியில் இணைய, அவர்களைச் சந்திப்பதின் பொருட்டு அடிக்கடி ஆந்திராவிலிருந்து மதராசுக்கு வர, ஒவ்வொரு முறையும் இருபது தினங்கள் பயணிக்க வேண்டியதில் இருந்த சிரமம், பணக்கஷ்டங்கள் ஆகியவற்றால் அருள்தந்தை ஜான் பென்னலியின் அறிவுரைப்படி 1859-ஆம் ஆண்டு தன் இரு மகன்களோடு மதராசுக்கு இருபத்தைந்து மைல் தொலைவிலுள்ள எறையூர் கிராமத்தில் குடியேறினார். மற்ற இரு பிள்ளைகளும்கூட குருமடத்தில் இணைந்தனர்.
பிரங்கிபுரத்தில்
தினமும் திருப்பலி கண்டுபழக்கப்பட்ட ஞானம்மா, எறையூரில் அன்றாடத் திருப்பலி இல்லாமையாலும், மற்ற அருள்சாதனக் கொண்டாட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போனதாலும் கீழச்சேரிக்கு வந்து குடியேறினார். இங்கே விரும்பியபடியே ஆலயத்தின் திருப்பீடம் கண்ணுக்குத் தெரியும் தூரத்திலும், ஆலய மணியோசை வெகு அருகே கேட்கும் தொலைவிலும் வசித்து வந்த ஞானம்மாவை தொந்தரவுக்குள்ளாக்கியது அமல அன்னை பிரான்சிஸ்கன் சபை துறவியர் நடத்திய ஆண் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடத்தின் மணியோசை.
முன்னேற்றம்
என்பதே வாழ்வில் இல்லாத அந்தக் கிராமத்துப் பெண் பிள்ளைகள் குறித்துக் கவலைப்படத் தொடங்கினார். கடவுளின் படைப்பான பெண் பிள்ளைகளுக்குள்ள வேதனைகள் நீங்கி வாழ்வில் தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்க கல்வியறிவு அவசியம் என்பதைத் தீர்மானித்தார். பெண் பிள்ளைகளும் படிப்பறிவு பெறவேண்டும் என்ற ஆதங்கம் உள்ளத்துள் நெருப்பாகக் கனன்றுக் கொண்டிருந்தது. இந்த நெருப்பிலிருந்து பெண் பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றத் தூண்டுகோலாக விளங்கியது பிரான்சிஸ்கன் சபை துறவியர் நடத்திய ஆரம்பப் பள்ளிக்கூடம்தான்.
தன்னுடைய
தொடர் செபங்களிலும் தியானங்களிலும் இறைவேண்டுதல் புரிந்தார். பெண் கல்வி என்ற அவருடைய கனவு நனவாக பொருள் பலமும், மனித பலமும் தேவைப்பட்டது. ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையோடு அடுத்தக் காரியத்தில் இறங்கினார்.
முதல்
வேலையாக தன் சொந்த ஊரான பிரங்கிபுரம் சென்றவர், அங்கே சில நாள்கள் தங்கி தன் சொத்துகளை விற்றுப் பணம் திரட்டினார். பணத்தோடு கீழச்சேரி திரும்பியவர், ஆலயத்திற்கு அருகாமையிலேயே நிலம் வாங்கினார். அமல அன்னை பிரான்சிஸ்கன் சபைத் துறவியர் உதவியுடன் ஆந்திராவிலுள்ள கிறித்தவ மையங்களுக்கெல்லாம் சென்று நிதி திரட்டினார். தன் நிலபுலன்களையெல்லாம் விற்று அவர் வாங்கிப் போட்ட நிலத்தில் 03-05-1863 அன்று புனித கிளாரம்மாள் பெண்கள் ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது.
‘பெண்களுக்குக் கல்வியா? பெண்களுக்குப் பள்ளிக்கூடமா?’ என்று அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் கேள்விகள் எழும்பின. தடைகளைப் பொருட்படுத்தாத ஞானம்மாவின் நல்லொழுக்கத்தை, ஆன்மிக வாழ்வை, நல்ல உள்ளத்தை உணர்ந்திருந்த மக்கள் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்பி வைத்தனர். அக்கம்பக்கத்திலுள்ள ஊர்களிலெல்லாம் இந்தச் செய்தி பரவிற்று. சுற்று வட்டாரக் கிராமங்களிலுள்ள பெண் குழந்தைகளும் அப்பள்ளியில் வந்துசேர, அவர்கள் தங்கிப் படிக்க விடுதியொன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
பெண்
கல்விக்காகப் பாடுபட்டபோதும் அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது சமுதாயத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது. ‘வீட்டில் அடைந்து கிடக்க வேண்டிய பெண்ணுக்குப் படிப்பா?’ என்று முணுமுணுத்த ஆண்கள், தங்கள் பெண் பிள்ளைகளை வகுப்பறையிலிருந்து இழுத்துச் சென்றனர். கிராமத்துப் பெரியவர்கள் ஞானம்மாவை ஊரைவிட்டே விரட்டவும் திட்டமிட்டனர். வயதானவர்களையும் பிள்ளைகளையும் தவிர அவ்வூரில் ஞானம்மாவுக்கு ஒத்துழைப்பு என்பது கிடைக்கவில்லை. தனித்துப்போன தன்னுடைய நிலை, பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய நிலை, தனக்குப் பின் யார் இந்த முயற்சியை முன்னெடுத்து நடத்துவது? என்ற கேள்வி... இந்த முயற்சிக்கான கடினமான பயணங்கள் எல்லாம் அவருக்கு மன உளைச்சலைக் கொடுக்க
உடல் நலம் கெட்டது. இவையெல்லாம் குறித்து இறைவனிடம் விடாப்பிடியாக வேண்டினார்.
சில
காலங்களில் நிலைமை மாற்றம் காணலாயிற்று. பள்ளிகளில் பிள்ளைகள் எண்ணிக்கை பெருகிற்று. அங்கே பயின்ற பெண் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல, ஆன்மிகத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க அந்தக் கிராமமே வாயடைத்துப் போனது
அப்பள்ளியில்
கல்வி பயின்ற குண்டப்பு மரியம்மா, இல்லூர் ஆகத்தம்மா, அருளம்மா என்ற மூன்று மாணவியர், ஞானம்மாவை தங்கள் வாழ்வின் முன்மாதிரியாகக் கொண்டிருந்தாலும், அதில் ஆகத்தம்மா, அருளம்மா இருவரும் துறவு நிலை ஏற்று அவருடைய கல்விப்பணியை தொடர்ந்து ஆற்ற முன்வந்தனர். நிம்மதிப்
பெரு மூச்சுவிட்டார் ஞானம்மா. பங்குத்தந்தை ஆரோக்கிய நாதரிடம் கலந்தாலோசித்து, அவர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கீழச்சேரியில் புனித அன்னாள் சபை துவக்கப்பட்டது. அப்புதிய துறவற சபையில் அருளம்மா, ஆகத்தம்மா இருவரையும் துறவுநிலைக்குத் தயார் செய்தார். பெல்லாரியிலுள்ள பெங்களூர் புனித அன்னாள் சபையில் சேர்ந்து இருவரும் பயிற்சி பெற்றனர். கீழச்சேரியில் புனித அன்னாள் சபை துவக்கப்பட்டு, அப்பள்ளிக்கூடம் சபையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு புனித அன்னாள் ஆரம்பப் பள்ளிக்கூடமாகப் பெயர் மாற்றம் பெற்றது. பயிற்சி முடித்துத் திரும்பிய அருள்சகோதரிகள் இருவரும் ஞானம்மாவோடு பள்ளியின் பராமரிப்பில் பங்கேற்றனர்.
இடைவிடாத
உழைப்பு, இருபது ஆண்டு கால ஆஸ்துமா நோயின் பாதிப்பு, அடிக்கடி நீண்ட பயணங்கள்... எல்லாம் ஞானம்மாவைப் படுத்த படுக்கையாக்கின. கீழச்சேரியில் தான் முன்நின்று துவக்கிய புனித அன்னாள் சபை வளர்ச்சி கண்டு மகிழ்ந்தவராய், தன் இறுதிப்படுக்கையில், பெண் பிள்ளைகளின் கல்விக்காகப் பாடுபடுவது குறித்து சபையின் சகோதரிகளுக்கு அறிவுரை வழங்கிய ஞானம்மா, நோயில்பூசுதல் பெற்றவராய் 21.12.1874 அன்று இறைவனில் சங்கமித்தார்.
அனுதினமும்
ஆலய மணியின் ஓசையைக் கேட்டுக்கொண்டே உயிர்வாழ ஆசித்த ஞானம்மா என்கிற ஓர் எளிய விதவைப் பெண்மணியின் செவிகளில் ஒலித்த ஆண் பிள்ளைகளுக்கான ஆரம்பப் பள்ளிக்கூட
மணியின் ஓசை, தொலைநோக்குப் பார்வையோடு பெண்களுக்கும் கல்வியில் சம உரிமை என வரலாற்றையே
புரட்டிப்போட்டு ஒரு
யுகப்புரட்சிக்கு வித்திட வைத்தது.
கீழச்சேரியிலுள்ள
தூய இருதய ஆண்டவர் ஆலய மணியோசை இறைப்பெருமையை ஒலித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அன்னை ஞானம்மா ஆரம்பித்து வைத்த புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளிக்கூட
மணியின் ஓசை இறைஊழியர் ஞானம்மாவின் பெயரைத்தான் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.