news-details
ஞாயிறு தோழன்
திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (29-03-2026) எசா 50:4-7; பிலி 2:6-11; லூக் 22:14-23:56

திருப்பலி முன்னுரை

இயேசுவோடு பயணிக்கஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மூன்றாண்டுப் பணிகளின் இறுதியில் இயேசு எருசலேம் நோக்கிப் பவனி செல்கின்றார். இது அவரது இறுதிப் பயணம் என்பது அவருக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. அவரது போதனை, புதுமை, பிறரன்புச் செயல்கள், எளியோர் சார்பு, ஆதிக்கத்தை எதிர்த்தல், அடிமை வாழ்வை ஒழித்தல்வேறுபாடுகளை வேரறுத்தல் இவற்றை எல்லாம் பார்த்து மலைத்துப் போன மக்கள் இயேசுவை அரசராகக் கண்டு எதிர்கொண்டுஓசன்னாஎன்று ஆரவாரமிட்டனர்.

இப்பவனியில் பயன்படுத்தும் குருத்து, கழுதைகள், ‘ஓசன்னாஆரவாரம் ஆகியவை யூதர்கள் பார்வையில் வெற்றியின் சின்னமாக இருப்பினும் இப்பவனி பாடுகளின் பயணம் என்பதை இயேசு முழுமையாக அறிந்தே நடந்தார். மக்கள் மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கே என்பதும், தந்தையின் விருப்பம் அதுவே என்றும் அறிந்தவராய்  பவனியில் வந்தார். போற்றுதலும் தூற்றுதலும் மத்தியில் துணிந்து தீர்க்கமுடன் இயேசு பயணித்ததை நம் மனத்தில் நிறுத்தி, நாமும் நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். நமது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் இயேசு நம்மோடு பயணிக்கிறார் என்ற நம்பிக்கையோடு இயேசுவோடு பயணிப்போம்.

முதல் வாசக முன்னுரை

துன்பங்கள், அவமானங்கள், இழப்புகள், தோல்விகள், சுகவீனங்கள், துயரங்கள் வரும்போது  ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற ஆழமான நம்பிக்கையில் அனைத்தையும் எதிர்கொள்ளவேண்டும். ஆண்டவர் அவருடைய ஊழியர்களாகிய நமக்குத் துணையாக இருக்கிறார், நாம் அவமானம் அடைய மாட்டோம் என்று கூறி, ஆண்டவரின் உடனிருப்பை  உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம்முடைய வாழ்க்கையில்நான், ‘எனது, பணம், பட்டம், பதவி, இனம் எனப் பலவற்றைப் பற்றிக்கொண்டு உலகப் போக்கின்படி நம்மைப் பெரியவர்கள் எனக் காட்டிக்கொள்ள பெரும் முயற்சி எடுக்கிறோம். ஆனால், இறைமகனான இயேசு இந்த உலகில் எதையும் பற்றிக்கொண்டு வாழாமல், இறைவனின் விருப்பம் நிறைவேற்ற சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குத் தம்மையே தாழ்த்திக் கொண்டார் என்று கூறி, தாழ்ச்சி என்ற புண்ணியத்தில் வளர அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர் அனைவரும் இந்த அறிவியல் உலகில் ஞானத்தோடு உமது பணியை ஆற்றிடத் தேவையான உடல் மற்றும் மன வலிமையைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாசமுள்ள ஆண்டவரே! இப்புனித வார நாள்களில் நாங்கள் எங்கள் பாவங்களையும் பலவீனத்தையும் குற்றங்குறைகளையும் களைந்து உம்மை அணுகி வரவும், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உதவிடவும் தேவையான உள்ளத்தெளிவைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. கருணையுள்ள ஆண்டவரே! எம்மீது கொண்ட பாசத்தால் பல அவமானங்களையும் பாடுகளையும் அனுபவித்தீர் என்று உணரும் நாங்கள், நீர் எமக்குக் கற்றுக்கொடுத்த அன்பு, தாழ்ச்சி, மன்னிப்பு, இரக்கம் போன்ற மதிப்பீடுகளை வாழ்வாக்கி, உம்மையே பற்றிக் கொண்டு வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உடன் வாழும் ஆண்டவரே! நாடுகளுக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் போர்கள் முற்றுப் பெறவும், அமைதி நிலவிடவும், மக்களைப் பிரிக்கும் ஆற்றல்கள் ஒழிந்திடவும், பயங்கரவாதங்கள் அழிந்திடவும், நீர் கொண்டு வந்த அமைதி எங்கும் நிலவிடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.