news-details
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 05, 2026, ஆண்டவருடைய உயிர்ப்பின் பெருவிழா - திப 10:34, 37-43; கொலோ 3:1-4 யோவா 20:1-9 (ஆண்டவர் உயிர்த்து விட்டார்! கலிலேயாவுக்குச் செல்வோம்!)

“கிறிஸ்து உயிர்த்து விட்டார்! அல்லேலூயா!” இச்செய்தியை அறிவிப்பதில் எத்துணை மகிழ்ச்சி! கிறித்தவம் கொண்டாடுகின்ற திருவிழாக்களிலெல்லாம் முதன்மையானதும் தலைசிறந்ததுமான இவ்விழா, நமது நம்பிக்கையின் ஆணிவேர், வாழ்வின் அசைக்க முடியாத அடித்தளம். இறைமகன் மனிதராகப் பிறந்து, தாழ்ச்சியின் உச்சமாகத் தம்மைத் தாமே சிலுவையில் ‘வெறுமையாக்கி இறந்தார். ஆனால், அந்த இறப்பு ஒரு முடிவல்ல; சாவை வென்ற வெற்றியே உயிர்ப்பு! அவரைப்போலவே நாமும் நமது பழைய பாவ இயல்புகளுக்கு இறக்கவும், அருளின் ஒளியில் புதிய மனிதர்களாக வெற்றியோடு உயிர்க்கவும் இன்று அழைக்கப்படுகின்றோம்.

உயிர்ப்பே நற்செய்தியின் உச்சக்கட்ட உண்மை மற்றும் புதிய ஏற்பாட்டின் மையச்செய்தி. கிறிஸ்துவின் உயிர்ப்பு இல்லாவிடில் இன்று கிறித்தவமும் இல்லை, நமது நம்பிக்கையும் இல்லை. எனவேதான், இது சாதாரண ஒருநாள் கொண்டாட்டமாக அன்றி, உயிர்ப்பு முதல் பெந்தகோஸ்து வரை நீளும் 50 நாள்களின் ஈடு இணையற்ற ‘நட்சத்திரக் கொண்டாட்டமாக (க.தி.ம. ஏடு 1169) அமைகிறது. திருத்தந்தை முதலாம் லியோ இவ்விழாவைத் திருவழிபாட்டு ஆண்டின் ‘மிகப்பெரிய விழா (Festum Festorum) என்று போற்றுகிறார். இந்த வெற்றியின் கொண்டாட்டம், நம் வாழ்வை மாற்றியமைக்கும் ஒரு மகா சக்தியாகும்.

இந்த மாபெரும் வெற்றியின் விழாவில் பெண்களே இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை முதலில் பெற்று, சீடர்களுக்கு அறிவிக்கும் முதற்சாட்சியராக மாறுகின்றனர். இன்றைய நற்செய்தியில் (மத் 28:1-10), பெண்கள் சிலர் இறந்த இயேசுவின் உடலில் நறுமணத் தைலம் பூசச் சென்றபோது அவர்கள் கண்டது ‘காலியான கல்லறை.’ அழுது புலம்பச் சென்ற அவர்களுக்கு, வாழ்வின் மாபெரும் செய்தி அங்கே பறைசாற்றப்பட்டது. “திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார் (மாற் 16:6) என்ற வான தூதரின் அறிவிப்பு, அவர்களின் அச்சத்தை வியப்பாக மாற்றியது. “அவர் உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார் (மத் 28:7) என்ற அழைப்பினை ஏற்று, உயிர்ப்பின் சாட்சிகளாக நாமும் இன்று கலிலேயாவுக்குச் செல்வோம்.

இயேசுவின் முப்பதாண்டு கால மறைவாழ்விற்கும், அவரது இறையாட்சிப் பணிக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது கலிலேயா. நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுவதுபோல, தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய முதல் அரும் அடையாளமும் (2:11), அரச அலுவலரின் மகனை நலமாக்கிய இரண்டாம் அரும் அடையாளமும் (4:54) நிகழ்ந்த இடம் இதுவே. தமது பொதுப்பணியின் களமாகத் தேர்ந்தெடுத்த இக்கலிலேயாவையே, உயிர்ப்பிற்குப் பின்னும் நற்செய்தியை உலகெங்கும் பரவுவதற்கான மையப்புள்ளியாக இயேசு நிலைநிறுத்துகிறார். அதனால்தான் தாம் உயிருடன் எழுப்பப்பட்ட பிறகு சீடர்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குச் செல்வேன் என்பதைப் பாஸ்கா விருந்தின் போதே அவர் முன்னறிவித்தார் (மத் 26:32; மாற் 14:28).

யூதேயாவிலிருந்து சமாரியா வழியாக இயேசு மீண்டும் கலிலேயாவில் கால்பதித்தபோது, எருசலேம் திருவிழாவில் அவர் ஆற்றிய வல்ல செயல்களைக் கண்டிருந்த மக்கள் அவரைப் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர் (யோவா 4:45). ‘பிற இனத்தாரின் கலிலேயா என்று யூதர்களால் இகழ்ந்து ஒதுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்கள் வாழ்ந்த இப்பகுதியில்தான் இயேசுவின் அருள்பணி தீர், சீதோன் போன்ற எல்லைப் பரப்புகள் வரை விரிந்தது. புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், நம்பிக்கையோடு தேடி வந்தவர்களுக்கும் வாழ்வளிக்கும் புகலிடமாக இயேசுவின் வாழ்வில் கலிலேயா ஒரு மைய அடையாளமாகத் திகழ்ந்தது. உயிர்த்த ஆண்டவர் மீண்டும் கலிலேயாவையே தேர்ந்தெடுத்தது, சமூக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மற்றும் தள்ளப்பட்ட மக்களைக்கொண்டே தம் மீட்புச் செயலை நிறைவேற்ற விரும்புகிறார் என்பதையே பறைசாற்றுகிறது.

கலிலேயா நோக்கிய பயணம் என்பது வெறும் இடமாற்றம் அல்ல; அது ஒரு மகத்தான வாழ்வியல் மாற்றம். உயிர்த்த ஆண்டவரைச் சந்திக்க நாம் மேற்கொள்ள வேண்டிய இந்த வாழ்வியல் மாற்றத்தைப் பின்வரும் மூன்று நிலைகளில் சிந்திக்கலாம்.

முதலில், கலிலேயாவுக்குச் செல்வது என்பது, வாழ்வை மீண்டும் புதிய உத்வேகத்துடன் தொடங்குவதைக் குறிக்கிறது. சீடர்கள் ஆண்டவரை முதன் முதலில் சந்தித்து உறவைத் தொடங்கிய அதே கலிலேய மண்ணிற்கு அவர்களை மீண்டும் அழைப்பதன் மூலம், அவர்களது தார்மிகத் தோல்விகளைத் தாண்டிய ஒரு புதிய தொடக்கத்தை இயேசு உருவாக்குகிறார்.

இயேசுவின் உயிர்ப்பு என்பது மாட்சிமைப்படுத்தப்பட்ட ஒரு புதிய வாழ்வு என்பதால், கலிலேயாவிற்குத் திரும்பிய சீடர்களும் பழைய பயம் நீங்கி ‘புதிய படைப்பாக உருமாறி, உலகையே மாற்றும் துணிவைப் பெறுகிறார்கள். இது பேதுருவைப்போல மனம் மாறித் தம்மிடம் வர அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் இரண்டாவது வாய்ப்பு ஆகும். இறைவன் எல்லாவற்றையும் புதிதாக்குகின்றார்; நம்மை விடுதலையின் பாதையில் நடக்கச் செய்வார்; நம் தோல்விகளால் சிதைந்துபோன உள்ளங்களையும், புதியதொரு கலைப்படைப்பாக மாற்ற உயிர்த்த இறைவனால் முடியும் என்பதே உயிர்ப்பு நமக்குத் தரும் முதல் மாபெரும் செய்தியாகும்.

இரண்டாவதாக, கலிலேயாவுக்குச் செல்வது என்பது கல்லறையிலிருந்து தூரமாகச் செல்வதைக் குறிக்கிறது. இது இயேசுவைப் பற்றிய இறந்த கால நினைவுகளில் மட்டும் மூழ்கியிருப்பதை விடுத்து, நிகழ்கால நம்பிக்கையின் உயிரோட்டமான நினைவுகளில் வாழ விடுக்கப்படும் அழைப்பாகும். நமது கடவுள் இறந்த காலத்திற்குச் சொந்தமானவர் அல்லர்; அவர் என்றென்றும் நம்மோடு வாழ்கிறார் என்ற அனுபவத்தை உயிர்ப்பு நமக்குத் தெளிவுபடுத்துகிறது. சில நேரங்களில் ஏமாற்றம், கசப்பு அல்லது நிச்சயமற்ற எதிர்காலம் போன்ற காரணங்களால் நமது நம்பிக்கையின் ஊற்று வற்றிப் போகலாம்; எதையும் மாற்ற முடியாது என்ற சோகத்தில் நாம் முடங்கிவிடலாம். ஆனால், உயிர்த்த ஆண்டவர் நம் நம்பிக்கையைச் சிறைப்பிடித்திருக்கும் அந்தப் பாரமான கல்லறைக் கற்களை அகற்றி, எதிர்காலத்தை நோக்கி நம்மைத் துணிவுடன் முன்னேறத் தூண்டுகிறார்.

மூன்றாவதாக, கலிலேயாவுக்குச் செல்வது என்பது விளிம்புநிலை மக்களை நோக்கிப் பயணிப்பதாகும். எருசலேம் என்பது அதிகாரம், செல்வாக்கு மற்றும் சடங்குகளின் மையமாகத் திகழ்ந்தது. ஆனால், கலிலேயாவோ உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட யூதர்களால் ஒதுக்கப்பட்ட எளிய மக்கள் வாழ்ந்த பகுதி. இயேசு அங்கேதான் இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். உயிர்த்த பின்னும் மீண்டும் அங்கேயே செல்கிறார். இதன் மூலம், சமூகத்தின் விளிம்பில் வாழும் சிறியோர் மற்றும் எளியோரின் முகங்களில் உயிர்த்த ஆண்டவரைக் கண்டுகொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறார். நமது தினசரி வாழ்வில், வன்முறையாலும் உணவுப் பாதுகாப்பின்மையாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளாலும் துயருறும் மக்களைத் தேடிச்செல்வதே உண்மையான உயிர்ப்பு அனுபவம். புலம்பெயர்ந்தோர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் நலிந்திருப்போர்மீது உயிர்த்த இயேசுவின் ஒளி பிரதிபலிக்கவும், ஏழைக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர்களோடு இணைந்து தீர்வுகாணவும் நாம் முன்வர வேண்டும்.

நிறைவாக, இறைமகனின் உயிர்ப்பு நமக்கு வழங்கியுள்ள விலைமதிப்பற்ற வாழ்வைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், நம் மீதான கடவுளின் முடிவற்ற அன்பை நன்றியுடன் நினைவுகூர்வோம். இந்த அன்பு எல்லாப் பலவீனங்களையும், மரணத்தின் பிடியையும் வெல்லக்கூடிய வல்லமை கொண்டது. இருப்பினும், கடவுள் தந்த இந்த உன்னத வாழ்வு இன்று எத்துணை இகழ்ச்சியாகவும் அவமதிப்பாகவும் நடத்தப்படுகிறது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். தூக்கியெறியும் கலாச்சாரத்திற்குப் பழகிவிட்ட நாம், பலவற்றைத் தூக்கியெறிகிறோம். துன்பமும் கொடுமையும் சூழ்ந்த இவ்வுலகில், சிறு சிறு கற்களாக இருக்கும் நாம் அனைவருமே மதிப்புப் பெற்றவர்கள். யாரையும் தூக்கியெறிய இயலாது. பிறப்பையே காண முடியாத நிலையில் கருவிலேயே அழிக்கப்படும் குழந்தையர், பசியால் மடியும் வறியோர், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வன்முறைக்கு ஆளாகும் ஏழையர் என வாழ்வின் மாண்பு சிதைக்கப்படுவது உயிர்ப்பின் செய்திக்கு எதிரானது. குறிப்பாக, மனிதரை வெறும் வியாபாரப் பொருள்களாக நடத்தும் நவீன அடிமைத்தனமும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

எனவே, இத்தகைய அநீதிகளையும் மனித உரிமை மீறல்களையும் தடுத்து நிறுத்தவும், ஒவ்வொரு மனித உயிரையும் புனிதமாகப் போற்றிப் பாதுகாக்கவும் நாம் எடுக்கும் துணிச்சலான முயற்சிகளே, உயிர்த்த ஆண்டவருக்கு நாம் அளிக்கும் உண்மையான சாட்சியமாகும். வெறும் சடங்குகளோடு நின்றுவிடாமல், வாருங்கள், புதிய நம்பிக்கையுடன் நாம் கலிலேயாவுக்குச் செல்வோம்!

அனைவருக்கும் இனிய உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துகள்!