இந்திய நாடு அடிமை நுகத்தடியிலிருந்து விடுபட்டு, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி எண்பது ஆண்டுகளை எட்டுகிறது. இந்த நீண்ட நெடிய பயணத்தில், ‘அரசியல் என்றால் என்ன?’ என்ற வினாவை ஒரு பாமரனிடம் முன்வைத்தால், அவரிடமிருந்து வரும் எதிர்வினை பெரும்பாலும் ஏளனமாகவோ அல்லது ஒவ்வாமை நிறைந்ததாகவோதான் இருக்கும். ‘அரசியல் நமக்கு எதுக்குப்பா?’ என்ற ஒற்றைவரி பதிலுக்குள், சராசரி இந்தியனின் அரசியல் குறித்த விரக்தியும் அறியாமையும் புதைந்து கிடக்கின்றன.
கற்றறிந்தோரையும்
சாமானியரையும் ஓரிடத்தில் அமர வைத்து ஒரு குழு விவாதத்தை நடத்தினால், அங்கே அரசியல் என்பது சாக்கடை என்றும், ஊழலின் உறைவிடம் என்றும் வர்ணிக்கப்படுமேயன்றி, அது நம் வாழ்வியலைத் தீர்மானிக்கும் ஆணிவேர் என்ற புரிதல் மிகச் சிலரிடம் மட்டுமே இருக்கும்.
அரசியல்
என்பது ஏதோ சட்டசபைகளிலும் நாடாளுமன்றங்களிலும் நடக்கும் வெற்று விவாதங்களோ அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் திருவிழாவோ அன்று; அது மானுட வாழ்விற்கான நெறிமுறைகளை வகுக்கும் ஓர் உன்னத அமைப்பு. சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பை எவர் கையில் ஒப்படைப்பது? என்ற தெளியும், நாட்டின் வளங்களை எவ்வாறு மேம்படுத்துவது? குடிமக்களை எவ்வாறு சமூக - பொருளாதார வாழ்வில் ஏற்றம் காணச் செய்வது? வளங்களை எல்லாருக்கும் எவ்வாறு பகிர்ந்தளிப்பது? எனும் கேள்விகளுக்கு விடைதேடும் களம் அது. புரிதலுடன் எடுக்கப்படும் முடிவுகளின் பலன்கள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைகின்றனவா? என்பதையும் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் செயல்முறைதான் அரசியல்.
அரசியல்
என்பது நமது வாழ்வின் ஒவ்வோர் அங்கத்திலும் இரண்டறக் கலந்திருப்பது. அரசியலை நமது வாழ்விலிருந்து விலக்கிப் பார்ப்பது அறியாமை. நாம் உண்ணும் உணவின் தரம், குடிக்கக் கிடைக்கும் நீரின் தூய்மை, சுவாசிக்கும் காற்றின் ஆரோக்கியம் என அனைத்தும் அரசியலால்
தீர்மானிக்கப்படுகிறது
என்றால் நம்பமுடிகிறதா?
ஒரு
சாமானியன் வாங்கும் தக்காளி முதல் தங்கம் வரை அனைத்துப் பொருள்களின் விலை உயர்விற்கும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. எனவே, “அரசியல் என்பது நாம் உண்ணும் உணவிலும், உடுத்தும் உடையிலும், உறங்கும் உறைவிடத்திலும் நிறைந்திருப்பது” என்பதை
நாம் உணர்ந்தாகவேண்டும். எங்கோ நடக்கும் போரால், இன்று நமது சமையலறையில் ‘அக்கப்போரு’ (பிரச்சினை)
நடக்கிறது.
கல்வியும்
மருத்துவமும் இன்று வியாபாரமாகிப்போன சூழலில், ‘எல்லாருக்கும் சமமான கல்வி, எல்லாருக்கும் சரியான மருத்துவம்’ என்ற
உன்னத இலட்சியம் அரசியலின் செயல்திட்டமாக இருக்கவேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதும் ஒரு சிறந்த சனநாயக நாட்டின் அரசியல் கடமையாகும். சுருக்கமாகக் கூறினால், அரசியல் என்பது நம் உடைமை; நமது அடிப்படை உரிமை!
ஆட்சி,
அதிகாரம், ஆளுகை என்ற பெயரில் முன்னுக்கு வருபவர்களையே நாம் அரசியல்வாதிகள் என்கிறோம். ஆனால், இன்றைய கள நிலவரம் முற்றிலும்
மாறுபட்டு நிற்கிறது. அரசியல்வாதிகளில் ஒரு பெரும் பகுதியினர் கடவுளையும் பக்தியையும் அரசியலின் மைய நீரோட்டத்திற்குள் வலிந்து திணிக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பற்றி விவாதிக்க வேண்டிய மேடைகளில், இன்று மதவாத முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
ஒன்றிய,
பாசிச பா.ச.க.
அரசும் கட்சியும் இந்திய அரசியலின் திசையை ‘இந்துத்துவா’ என்ற
கருத்தியலை நோக்கித் தீவிரமாகத் திருப்பிக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் இயங்கும் இக்கட்சி, இந்தியக் கலாச்சாரத்தை ‘இந்து கலாச்சாரத்தோடு’ மட்டுமே
அடையாளப்படுத்தி,
1922-இல் சாவர்க்கர் வகுத்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த, அவற்றை அரசியலுக்குள் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, முந்தைய அரசுகளின் மதச்சார்பின்மையை ‘போலி மதச்சார்பின்மை’ என்று
முத்திரை குத்தி, மதவாத அரசியலை - மதவாத வாழ்வியலை மக்கள் மத்தியில் இன்று விதைத்து வருகிறது.
மதத்தைப்
பயன்படுத்தி வாக்குகளைச் சேகரிக்கும் இந்த உத்தி, மக்களைப் பிளவுபடுத்திச் சமூகத்தில் ஒரு பதற்றமான சூழலை உருவாக்குகிறது. இந்தப் பதற்றம் கலவரங்களாக உருவெடுக்கும்போது, மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேச மறந்து, உணர்ச்சிவசப்பட்ட அடிமைகளாக மாறுகிறார்கள். ‘கடவுளைக் காப்போம், மதத்தை மீட்போம்’
என்ற முழக்கங்களுக்கு முன்னால், ‘எங்களுக்கு உணவு வேண்டும், வேலை வேண்டும்’
என்ற முழக்கங்கள் மங்கிப் போகின்றன. திருப்பரங்குன்றம் நிகழ்வு உணர்த்தும் பாடம் இதுதான்.
இந்தியச்
சனநாயகத்தின் அடித்தளமே பன்முகத்தன்மைதான். ஆனால், இன்றைய சூழலில் ‘சனநாயகமும் தேசியமும் முரண்பட்டு நிற்கும் பிம்பம் உருவாக்கப்படுகிறது’ என்று
அரசியல் ஆய்வாளர் சுஹாஸ் பாலிஷ்கர் குறிப்பிடுகிறார். தேசியம் என்பது பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். ஆனால், இன்று பா.ச.க.
கட்டமைக்கும் புதிய மேலாதிக்கம், மாற்றுக்கருத்துகளுக்கு இடமளிக்காத ஓர் ஒற்றைத் தன்மையை நோக்கி நகர்கிறது; இது சனநாயகத்தின் ஆன்மாவையே சிதைக்கும் செயலாகும்.
‘இராம இராஜ்ஜியம்’ எனும்
கருத்தியல் தலித்துகள், மலைவாழ் மக்கள், ஆதிக்குடிகள் மற்றும் மதச் சிறுபான்மையினரை ஒதுக்கி வைக்கும் ஒரு கட்டமைப்பாகவே அரசியல் கருத்தாளர்கள் கருதுகின்றனர். பள்ளிப் பாடத்திட்டங்களில் இராமாயணத்தைப் புகுத்துவதும், மத அடையாளங்களை முன்னிறுத்துவதும்
ஒரு சனநாயக நாட்டிற்கு அழகல்ல.
மேலும்,
‘வெறுப்பு அரசியல்’ என்பது ஆளும் வர்க்கத்தின் நிர்வாக, பொருளாதாரத் தோல்விகளை மூடி மறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு திரை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ‘தேசியப் பெருமிதம்’
என்ற பெயரில் தனி முதலாளிகள் பணக்காரர் பட்டியலில் இடம்பெற, ஏழைகள் மேலும் ஏழைகளாக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் உடைமைகளும் பறிக்கப்படுகின்றன.
இன்று
எங்கெல்லாம் மதவாதம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் தனியார்மயம் துரிதப்படுத்தப்படுகிறது. இது வருவாய் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து, சமூகத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தும். வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களிடம், ‘உங்களுக்கு வேலை கிடைக்காததற்குப் பிற மதத்தினரோ அல்லது இடஒதுக்கீடோதான் காரணம்’ எனும் நஞ்சு
விதைக்கப்பட்டு, அது ஏற்கெனவே எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறது.
அண்மைக்காலங்களில்,
ஒன்றிய - தமிழ்நாட்டு அரசியல் சூழல் கொதிகலன்போல வெப்பம் கொண்டிருக்கிறது; எரிமலைபோல வெப்பம் உமிழ்கிறது; அது நஞ்சாக இருக்கிறது. இந்த நச்சுத்தன்மை வாய்ந்த அரசியல் சூழலில், இளைஞர்கள் தங்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்திக்கொள்வது காலத்தின் கட்டாயம். அரசியல் புரிதல் என்பது வெறும் கட்சி அரசியலைப் புரிந்துகொள்வது மட்டுமல்ல; மாறாக, அது அரசியல்-பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வது; நம் வாழ்வியலைப் புரிந்துகொள்வது. நம் வாழ்வைத் தீர்மானிக்கும் அரசியலை நாம் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையோடு பார்க்கிறோம் என்பதில்தான் நம் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
மதம்
என்பது ‘நம்பிக்கை’
எனவும், அரசியல் என்பது ‘உரிமை’ எனவும் நாம் தெளிவு கொண்டிருக்கவேண்டும். எவர் ஒருவர் மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், மதத்தையும் இனத்தையும் பேசி வாக்குகளைச் சேகரிக்கிறாரோ, அவரைப் ‘போலி அரசியல்வாதி’ என்று
வெளிப்படையாகவே நாம் நிராகரிக்கவேண்டும். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பரப்புரைகளையும், கலகக்காரர்களின் பொய்களையும் பகுத்தறிவு கொண்டு ஆராய வேண்டும்.
பன்முகத்தன்மையே
இந்தியாவின் களம்; அதுவே நம் பலம். பிற மதத்தவரை எதிரியாகச் சித்தரிக்கும் அரசியலைப் புறந்தள்ளி, சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் முன்னிறுத்தும் அரசியலைக் கொண்டாடுவோம்.
அரசியல்
மதவாதமானால், மக்கள் தங்களை அறியாமலேயே அடிமைகளாகி விடுவார்கள். ஒரு சனநாயக நாட்டில் அரசியல் என்பது மக்களின் குரலாக இருக்கவேண்டும்; அது மதத்தின் முகமூடியாக இருக்கக்கூடாது. பா.ச.க.
முன்னெடுக்கும் இந்தத் தீவிரமான இந்துத்துவக் கருத்தியல், இந்தியாவின் மதச்சார்பற்ற அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டது.
விடுதலை
என்பது வெறும் அந்நியரிடமிருந்து பெற்ற அதிகாரம் மட்டுமல்ல; அது ஒவ்வொரு குடிமகனும் அச்சமின்றி வாழும் உரிமை; கேள்வி கேட்கும் உரிமை; சமமாக நடத்தப்படும் உரிமை. இந்த உண்மைகளை உணர்ந்து, அரசியலை நமது வாழ்வின் அங்கமாக ஏற்று, பொறுப்புள்ள குடிமக்களாக நாம் மாறவேண்டும்.
மதம்
என்பது ஆன்மா தொடர்பானது; அரசியல் என்பது வாழ்வாதாரம் தொடர்பானது. இவை இரண்டும் கலக்கும்போது பிறக்கும் நச்சு, வரும் தலைமுறையையே அழித்துவிடும். ஆகவே, விழிப்படைவோம்! அரசியலில் மதத்தைக் கலப்பவர்களைப் புறக்கணிப்போம்! உண்மையான சனநாயகத்தை நிலைநாட்ட ஒன்றுபடுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்