“போர் எனும் மூடத்தனம் உலகைச் சூழ்ந்துள்ள இக்காலத்தில், கரு உருவானது முதல் அதன் இயற்கையான முடிவுவரை மனித வாழ்வைப் பாதுகாப்பது மிக அவசியமானது” என்று திருத்தந்தை லியோ வலியுறுத்தியுள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற பொதுமறை உரையின்போது போலந்து நாட்டின் ‘வாழ்வின் புனித நாள்’ (Day for the Sanctity of Life) மற்றும் மங்கள வார்த்தைத் திருவிழாவை முன்னிட்டு உரையாற்றிய அவர், “வன்முறையும் இறப்பும் மலிந்துவிட்ட தற்போதைய சூழலில், ஒவ்வொரு மனித உயிரும் புனிதமானது என்பதை உலகம் உணரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். பிரெஞ்சு மற்றும் அரபு மொழி பேசும் நம்பிக்கையாளர்களிடம் பேசுகையில், “அமைதியான உலகைக் கட்டியெழுப்பக் கிறித்தவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கவேண்டும்; நற்செய்தியின் துணிச்சலான தூதுவர்களாக மாறி அன்பைப் பரப்பவேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.