ஐரோப்பாவில் அதிகரித்து வரும் வறுமை, தனிமை மற்றும் சுகாதாரத்துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து திருத்தந்தை லியோ தனது கவலையை வெளியிட்டுள்ளார். “அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு என்பது வெறும் தொழில்நுட்ப இலக்கு மட்டுமல்ல; அது ஒரு நீதியான சமூகத்தின் தார்மிகக் கடமையாகும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற ‘இன்று எனது அயலான் யார்?’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய திருத்தந்தை, உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசினார். ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏழை மற்றும் நலிவடைந்த மக்கள் மருத்துவ வசதியின்றித் தவிப்பதையும் குறிப்பாக, இளைஞர்களின் மனநலம் புறக்கணிக்கப்படுவதையும் பிறரின் துன்பங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் ‘உதாசீனக் கலாச்சாரத்தை’ கைவிட்டு, நல்ல சமாரியன் மனப்பான்மையுடன் நலிவடைந்தவர்களுக்குக் கைகொடுக்கவேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.