news-details
கவிதை
தாயின் மடியில் இயேசு - கவிதையாக...

உலகத்திற்கு இறைமகன்,

மெசியா, அரசர்

என்ன சொல்லிப் புகழ்ந்தாலும்

எனக்கு நா பெத்த பிள்ளை

தல பிள்ளை, ஒரே பிள்ளை

பத்து மாசம் சுமந்த பிள்ளை!

 

பத்து மாசம் சுமந்தத நா

சொல்லிக் காட்டல

என் மடில உசுரு இல்லாம

இருப்பனு நினைச்சி பாக்கல...

ஏரோதுகிட்ட இருந்து தப்பிச்சது

மக்களுக்காகவா உசுர குடுக்கவா...!

 

பாத்து பாத்து வளத்த பிள்ளைய

மக்கள் கிட்ட குடுத்துபுட்டேன்

பாலூட்டி வளத்த பிள்ளைய

இரத்தத்துல பாத்துப் புட்டேன்...

தலைக்குக் குளிச்ச உன்னோட

தல முடிய துவட்டும் போது

கலச்சி விட்டு அழகு பாத்தேன்!

அழகு பாத்த இடத்துல

முள் செடிய இறக்கி

வச்சத பாத்து நொந்து போனேன்...!

 

சின்ன வயசுல உங்க அப்பாக்குத்

தச்சு வேலைல உதவி செஞ்ச

பிஞ்சு கைகள

ஒரு பக்கம் பாய்ந்து மறு பக்கம்

வெளிய தெரியுற மாதிரி

ஆணி அடிச்சி வச்சிருக்காங்க...!

நீ எப்படித்தான் வலிய தாங்கினியோ

மகனே... வாரிசே... செல்லமே...!

 

உசிரில்லா உன் உடல கூட

தொட யோசிக்கிறேன்

உன் காயத்துல என் விரல் பட்டு

திரும்பவும் வலில

துடிப்பியோனு அழுகுறேன்...

என் கண்ணீர உன் காயத்துக்கு

மருந்தா தாறேன்

விழுந்த கண்ணீர வச்சே உன்னோட

மொத்த காயத்தையும் தொடைக்கிறேன்...!

 

குழந்தைல உன்ன தலைக்கு மேல

தூக்கிக் கொஞ்சும் போது உன்னோட

அடி வயித்துல குடுத்த முத்தத்தால நீ சிரிப்ப...

நா முத்தம் குடுத்த இடத்த

கிழிச்சி வச்சிருக்காங்க...

மனிதாபிமானம் இல்லாதவங்க!

 

நாம மூணு பேரும் இரவு தூங்கும்போது

உன்னோட வலது பாதத்த

என்னோட கன்னத்துலையும்

இடது பாதத்த உங்க அப்பா கன்னத்துலையும்

வச்சி அழகு பாத்தோம்...

மிருகக் குணம் பிடிச்சவங்க...

பாதத்துல துளை போட்டு வச்சிருக்காங்க...

ஐயா... என்னைப் பெத்த ராசாவே...!

 

நா செத்து என் கல்லறையில நீ

மண் அள்ளி போடுவனு பாத்தேன்...

இங்க நீ செத்து நா மண் அள்ளி போட வச்சிட்டாங்க...!

என்னையும் உன் கூடவே

கூட்டிட்டு போயிடு ஐயா!

ஊருக்குலாம் பதில் சொல்லிட்டுப் போயிட்ட...

நா மட்டும்தான் நாதி இல்லாம

புலம்பிட்டு இருக்கேன்...

பெத்த மனம் பித்தாச்சு

பிள்ளை மனம் கல்லாச்சு...!