news-details
கவிதை
சிலுவைப் பாடுகள்!

என்ன குற்றத்திற்கு இந்தத் தீர்ப்பு?

தீர்ப்பை வழங்கியவனும் தீர்ப்புக்குள்ளானான்!

 

சுமக்க முடியாமல் அவர் தோளில் சிலுவை

நம் பாவங்களால் ஆனது அந்தப் பாரச் சிலுவை!

 

முதல்முறை விழுகிறார் மண்ணில்

ஆதவனும் அழுகிறான் விண்ணில்!

 

அன்னையும் மகனைச் சந்திக்கிறார்

மகனுக்கா இவ்வேதனை சிந்திக்கிறார்!

 

நண்பர் சீமோன் உதவுகிறார் - சிலுவையைச்

சுமக்க முடியாமல் அவரும் விலகுகிறார்!

 

துடைத்த துணியில் தூயவரின் முகம்

துயருற்று அழுகிறது இந்த யுகம்!

 

இரண்டாம் முறை விழுகிறார்

இன்னல்கள் சுமந்து எழுகிறார்!

 

எருசலேம் மகளிருக்கு ஆறுதல்

நீங்கள் அழாதீர்கள்!’ - வரும் ஒரு மாறுதல்!

 

மூன்றாம் முறை விழுகிறார் - விழுவது

வீழ்வதற்கல்ல; மீண்டும் எழுவதற்கு!

 

ஆடையில் முழுவதும் இரத்தம் - அதையும்

உரிகிறார்கள். இது ஆண்டவரின் சித்தம்!

 

பிறக்கும் போது வந்தனர் மூன்று ஞானியர்

இறக்கும்போது அறைந்தனர் மூன்று ஆணிகள்!

 

எல்லாம் முடிந்ததுஎன உயிர்விடுகிறார்

இரக்கமில்லாக் கயவர் மனத்தையும் தொடுகிறார்!

 

உயிரற்ற உடலோ அன்னையின் மடியில்

துயருற்ற அன்னையோ வியாகுலத்தின் பிடியில்!

 

இயேசுவின் உடலோ கல்லறையில் அடக்கம்

முடிவல்ல.... இது மீட்பின் தொடக்கம்!