இத்தாலியக் குழந்தைகளின் வார இதழான ‘பொப்போட்டஸ்’ (Popotus) தனது 30-வது ஆண்டைத் தொடங்குவதையொட்டி, அதன் வாசகர்களுக்குத் திருத்தந்தை லியோ மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
“போர் மேகங்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் இக்காலத்தில், போரின் கொடூரங்களைக் கண்டு திகைத்து நிற்கும் குழந்தைகளின் கண்களை நாம் உற்றுநோக்க வேண்டும். அந்தத் தொலைந்துபோன கண்கள் நம்மிடம் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். எண்ணிம (டிஜிட்டல்) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில்
குழந்தைகள் தங்களின் சிந்திக்கும் ஆற்றலையும் உறவுகளையும் வளர்க்கும் திறனையும் இழந்துவிடாமல் பாதுகாக்கவேண்டியது பெற்றோரின் கடமை. செயற்கை நுண்ணறிவைச் சிறந்த நண்பனாகவோ அல்லது அறிவின் ஊற்றாகவோ குழந்தைகள் கருதுவது அவர்களின் படைப்பாற்றலை முடக்கிவிடும்; மாறாக, குழந்தைகளின் ‘தூய கண்கள்’ உலகைப் பார்க்கப் பெரியவர்களுக்கு உதவவேண்டும். மன்னிப்புக் கேட்கும் துணிவு, புன்னகையின் ஆற்றல் மற்றும் சமாதானம் செய்யும் அழகு ஆகியவற்றை ஒருபோதும் கைவிடாதீர்கள்” எனத்
திருத்தந்தை அறிவுறுத்தினார். குழந்தைகளின் தனித்துவத்தைப் போற்றி, அவர்களைப் புதிய உலகின் நாயகர்களாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் எனத் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.