சிறுவர் பாதுகாப்பிற்கான பாப்பிறை ஆணையத்தின் (Pontifical Commission for the Protection of Minors) பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை 14-ஆம் லியோ, “திரு அவையில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல; மாறாக, அது திரு அவையின் வாழ்வோடு இணைந்த கடமை” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், “பாதுகாப்பு என்பது வெறும் நெறிமுறைகளோ அல்லது நடைமுறைகளோ மட்டும் அல்ல; அது ஒரு ‘கவனிப்புக் கலாச்சாரத்தை’ (Culture of Care) உருவாக்குவதாகும். சிறுவர்கள் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களைப் பாதுகாப்பது வெளியில் இருந்து திணிக்கப்படும் சுமையாக இல்லாமல், நமது நம்பிக்கையின் இயல்பான வெளிப்பாடாக இருக்க வேண்டும்” என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களைக் கேட்டறிவது வேதனையானது என்றாலும், அது உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்றும், மனத்தாழ்மையைக் கற்றுத்தரும் என்றும் டிஜிட்டல் தளங்களில் சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுப்பதிலும், உலகளாவிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்குவதிலும் ஆணையம் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.