மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “போர் என்பது தீர்வாகாது; தூதரகப் பேச்சு வார்த்தைகளே சிக்கல்களைத் தீர்க்கும்” என்று பாக்தாத் கல்தேய கத்தோலிக்கத் திரு அவையின் தலைவரான கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ தெரிவித்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த படையெடுப்பிற்குப் பிந்தைய குழப்பங்களை ஈராக் ஏற்கெனவே அனுபவித்துள்ளதை நினைவுகூர்ந்த இவர், தற்போதைய சூழல் மீண்டும் மக்களைப் பேரழிவிற்கு இட்டுச்செல்லும் என எச்சரித்துள்ளார். அமைதிக்காகத் திருத்தந்தை லியோ மற்றும் மகா அயதுல்லா அல்-சிஸ்தானி ஆகியோர் காட்டிய சகோதரத்துவப் பாதையைப் பின்பற்றுமாறு அனைத்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள இவர், கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறு திருப்பலியிலும் அமைதிக்காகச் செபிக்க வேண்டுமென்றும், முசுலிம் தலைவர்கள் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.