திருப்பலி முன்னுரை
உயிர்த்த
இயேசு கொண்டு வந்த அமைதியைப் பெற்று, நற்செய்தியின் தூதுவர்களாக வாழ உயிர்ப்புப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. ‘சென்றார், கண்டார், நம்பினார்’-இந்த மூன்று வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியின் மையமாக அமைகின்றன. சீடர் ஆர்வத்தோடும் அச்சத்தோடும் இயேசுவைத் தேடிச் சென்றபோது அவர்களுக்குக் காட்டப்பட்டது வெறுமையான கல்லறை. ஆனால், அக்கல்லறையில் இயேசு விட்டுச் சென்ற அந்தத் துணிகள் அவர்களுக்குச் சான்றாக அமைந்தன. அதைப் பார்த்த பிறகு அவர்கள் கண்டார்கள், நம்பினார்கள் என்பதை நற்செய்தி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
கிறிஸ்துவின்
உயிர்த்தெழுதல்தான் கிறித்தவத்தின் தொடக்கமாக இருக்கிறது. கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால், கிறித்தவ நம்பிக்கை இல்லாமல் போயிருக்கும். வாழ்வின் வெறுமைகளை எல்லாம் நிரப்புகிறவர் இயேசு மட்டுமே. உயிர்த்த ஆண்டவர் நம்முடைய வாழ்வில் உள்ள வெறுமைகளை எல்லாம் தம்முடைய அருள்வரங்களால் நிரப்பி அமைதியை அருள்வார். உயிர்த்த ஆண்டவரின் மக்களாகிய நாம் அவர் கொண்டு வந்த அமைதியை அனுபவித்து, உடன் வாழும் சகோதர-சகோதரிகளின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்துவோம்.
இயேசுவைத்
தேடிச்சென்று, அவரைக் கண்டு, அவரை அனுபவித்து, இந்த அகிலத்திற்கே இயேசுவைப் பறைசாற்றிய சீடரைப் போல் நாமும் நற்செய்தியை வாழ்க்கையால் விதைப்போம். நமது பாவ வாழ்க்கையை விட்டொழித்து, நமக்காக உயிர்த்தெழுந்த இயேசுவோடு நாமும் உயிர்ப்போம். அவரோடு அவரில் அவருக்காக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இயேசு
சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்தார். அலகையின் கொடுமையை அகற்றி வல்லமையோடு செயல்பட்டார். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து வாழவும், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் தாராள மனதும், அனைவருக்கும் தஞ்சம் கொடுக்கும் நல்ல இதயமும் கொண்டு உயிர்த்த இயேசுவின் உயிருள்ள சாட்சிகளாய் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
இந்த
உலகில் உள்ள அனைவரும் வாழ்வுபெற வேண்டும் என்பதற்காகக் கிறிஸ்து பலியானார். தமது உயிர்ப்பின் வழியாக நமக்கு அமைதியையும் உடனிருப்பையும் தருகின்றார். பொய்மை மலிந்து கிடக்கும் இந்த உலகில் உண்மையோடு வாழவும், நீதி தழைத்தோங்கவும், உண்மைக் கடவுளாகிய இயேசுவின் வழியில் அச்சமின்றிப் பயணிக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. ‘பணிவிடை புரியவே
வந்தேன்’ என்று
கூறிய இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் உடல்-உள்ள-ஆன்ம நலன் பெற்று மகிழ்ச்சியோடு இறையரசின் மதிப்பீடுகளை விதைக்கத் தேவையான அருள்வரங்களைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ‘நான் உங்களோடு
இருக்கிறேன்’ என்று
கூறிய ஆண்டவரே! எம் நாட்டையும் மக்களையும் பேணிக்காக்கும் தலைவரை நாங்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கவும், வரும் தேர்தலில் பொறுப்போடு நாங்கள் செயல்படவும் தேவையான ஞானத்தையும் விழிப்புணர்வையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ‘உங்களுக்கு அமைதி
உரித்தாகுக’ என்று
மொழிந்த ஆண்டவரே! நீர் எங்களுக்கு உமது உயிர்ப்பின் வழியாகக் கொடுத்த அமைதியை அனுபவித்து வாழவும், உடன் வாழும் அனைவருக்கும் அமைதியைக் கொடுத்திடவும், உறவுகளை வளர்த்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எம்மோடு
வாழும் ஆண்டவரே! ‘கிறித்தவர்கள்’ என்ற
முகவரியைப் பெற்ற நாங்கள் அனைவரும் அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், உண்மை, நீதி போன்ற விழுமியங்களை நாங்கள் வாழும் சமூகத்தில் விதைத்திடவும், இறைநம்பிக்கையில் நிலைத்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.