உண்மையிலேயே திருவருகைக் காலம் அருள்மிகு காலம். கிறிஸ்து பிறப்பு விழாவை மிகவும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிட இந்தத் திருவருகைக் காலம் உதவியாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வழியாக அருளும் உண்மையும் நமக்கு வழங்கப்பட்டன (யோவா 1:16-17). மேலும், மானிட மகனின் இரண்டாம் வருகையை நமக்கு நினைவுபடுத்துகின்ற காலமாகவும் இருக்கின்றது. ‘வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்’ என்ற மாபெரும் நிகழ்வைக் கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாட இருக்கிறோம்.
திருவருகைக்
காலத்தின் நான்கு வாரங்களையும் ‘எதிர்நோக்கு, அமைதி, மகிழ்ச்சி, அன்பு’ எனும் கருப்பொருள்களால் அணிசெய்து, இக்காலத்தின் ஆழமான பொருளுக்குத் திரு அவை நம்மை அழைத்துச்செல்கிறது. டிசம்பர் 17-லிருந்து கிறிஸ்து பிறப்பு விழாவின் நவநாள்களைத் தொடங்குகின்றோம். இந்த நவநாள்களிலே இயேசுவின் பிறப்போடு நெருக்கமாக இருக்கின்ற நிகழ்வுகளை நற்செய்தியாகத் திருவிருந்து கொண்டாட்டங்களிலே திரு அவை நமக்கு வழங்குகின்றது.
அன்னை
மரியாவை இந்த நாள்களிலே நினைத்துப் பெருமைப்படுகின்றோம். இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பையும், இறைவனுடைய திருவுளத்தை நிறைவேற்றிய அவருடைய அர்ப்பண வாழ்வையும் நினைவு கூர்கின்றோம். இயேசுவின் வழியாகத் தொடர்ந்து நிகழ்ந்திடும் மீட்பின் வரலாற்றிலே இவர்கள் எவ்வளவு முக்கியமான பங்களித்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆண்டவருக்கு நன்றிகூறி, அவர்களோடு இணைந்து கிறிஸ்துவின் பிறப்பிற்காக நம்மையே தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.
மீட்பின்
வரலாற்றிலே பெண்களின் பங்களிப்பை இன்னும் குறிப்பாக, கன்னிமை குன்றாத நிலையிலே கடவுளின் தாயாக மரியா வாழ்ந்திட அழைக்கப்பட்டதால் அவரும், அவருடைய துணைவருமான யோசேப்பும் அனுபவித்த அவமானங்கள், அவதூறுகள், வேதனைகள், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ஓரங்கட்டப்பட்ட அனுபவங்கள் போன்றவற்றை நினைவுகூரப் பெரும்பாலும் தவறி விடுகின்றோம். இயேசுவின் மனுவுரு எடுத்தலின் இந்த இரண்டு முக்கியச் சவால்களையும் பார்வைகளையும் நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
மீட்பின் வரலாற்றில்
இடம்பெறும்
பெண்கள்
லூக்கா
நற்செய்தியில் இயேசுவினுடைய தலைமுறைப் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது
(3:22-38). இது முழுக்க ‘ஆண் மையம்’ நிறைந்த ஒன்றாக இருக்கிறது. ஆனால், மத்தேயு நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தலைமுறைப் பட்டியலிலே (1:1-16) தாமார், இராகாபு, உரியாவின் மனைவி பத்சேபா, ரூத், மரியா போன்ற ஐந்து பெண்கள் இடம் பெறுகிறார்கள். இவர்களில் தாமாரும் மரியாவும்தான் இஸ்ரயேல் இனத்தைச் சார்ந்தவர்கள். மாறாக, இராகாபு (கனானியப் பெண்), பத்சேபா (இத்தியப் பெண்), ரூத் (மோவாபியப் பெண்) இவர்கள் எல்லாரும் இஸ்ரயேல் இனத்தைச் சாராத பிற இனத்துப் பெண்களாக உள்ளனர். இப்பெண்களும் இந்தத் தலைமுறைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, வரவிருக்கின்ற மீட்பராகிய இயேசு எல்லாருக்கும் மீட்பர் என்பதை அறிவிப்பதாக இருக்கின்றது.
இயேசு
யூதர்களுக்காக மட்டும் அனுப்பப்பட்டவர் அல்லர்; அவருடைய பிறப்பானது எல்லா மக்களையும் இனங்களையும் நாடுகளையும் அரவணைக்கின்ற பிறப்பாக அமையப்போகின்றது என்பதற்கு முன்னடையாளமே இஸ்ரயேல் அல்லாத பெண்களும் இயேசுவின் தலைமுறைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது.
தாழ்த்தப்பட்டோரை
உயர்த்திடும்
இயேசுவின்
தலைமுறைப்
பட்டியல்
மத்தேயுவின்
தலைமுறைப் பட்டியலிலே பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து பெண்களும் இஸ்ரயேல் சமுதாயத்திலே தரக்குறைவாகப் பார்க்கப்பட்டவர்கள்.
• யூதாவின் மருமகளான தாமார், யூதாவின் வம்சாவளியில் வாழ்வதற்குத் தனக்கு உரிமை இருக்கின்றது என்பதை நிரூபிக்க தன் மாமனார் யூதாவோடு உடலுறவு கொண்டு குழந்தை
பெற்றெடுத்தார்.
• இராகாபு எனும் பெண்மணி விலைமாதாக இருந்தார். ஆனால், எரிக்கோவை வேவுபார்க்கச் சென்ற இஸ்ரயேலரை இவர் காப்பாற்றியதால் இன்று இஸ்ரயேல் சமுதாயத்திலும் இறைவனால்
போற்றப்படுகின்ற பெண்மணியாகின்றார்.
• பத்சேபா எனும் இத்திய இனப்பெண் தாவீதின் காமவேட்கைக்கு முதலில் பலியானாலும், பிறகு முறையாகத் தாவீது அரசனின் மனைவியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். சாலமோனைப் பெற்றெடுக்கும் பேறுபெறுகின்றார்.
• மோவாபு நாட்டைச் சேர்ந்த ரூத் என்பவர் இஸ்ரயேலரான போவாசின் மனைவியாகி இஸ்ரயேல் குடிமகளாக மாறுகின்றார்.
• திருமணம் ஆவதற்கு முன்பே கருவுற்றிருந்ததால் மரியாவும் மரியாதை குறைவாகப் பார்க்கப்பட்ட பெண்மணி ஆவார்.
இப்படிப்பட்டப்
பெண்மணிகளை மூதாதையர் தலைமுறைப் பட்டியலிலே இணைத்திருப்பது யூதச் சமுதாயத்திற்கு வியப்பாகவும் இடறலாகவும் இருந்திருக்கும். ஆனால், அடக்குமுறைப் பார்வையோடும் அவமானப்படுத்தும் பார்வையோடும் செயல்படும் தூய்மை-தீட்டு எனும் கருத்தியலை உள்வாங்கிய யூதச் சமுதாயத்திற்கு இது ஒரு சவால்.
மீட்பின்
வரலாற்றிலே பெண்களும் குறிப்பாக, ஒடுக்கப்பட்ட பெண்களும் முன்னிலைப்படுத்தப்படுவது, எல்லாரும் சமத்துவத்திலும் மாண்பிலும் சகோதரத்துவத்திலும் வாழ்ந்திட அழைக்கப்பட்ட சமுதாயத்தினர் என்பதை உறுதி செய்வதாக உள்ளது.
அன்னை மரியா
அனுபவித்த
அவமானம்
இஸ்ரயேலின்
சமய-பண்பாட்டு பின்புலத்தில் திருமண ஒப்பந்தம் என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஏன், திருமணத்திற்கு இணையாகவே பார்க்கப்பட்டது. இவ்வாறு திருமண ஒப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கும் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாகவே அவருக்கு ஒப்பந்தமாக இருந்த ஒருவரோடோ அல்லது வேறு வழியிலோ அவர் கருவுற்றிருந்தால் அது விபச்சாரமாகப் பார்க்கப்பட்டது. இதற்காக அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்லக்கூடிய ஒழுங்குமுறையையும் இஸ்ரயேல் சமுதாயம் பின்பற்றியது.
மரியா
எலிசபெத்தோடு மூன்று மாதங்கள் தங்கி விட்டு வீடு திரும்பியதாக லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்கிறார் (1:56). தூய ஆவியாரின் வல்லமையால் கடவுளின் தாயாகும் நற்செய்தியைக் கபிரியேல் தூதர் மரியாவுக்கு அறிவித்த நாளிலிருந்தே இயேசுவைக் கருத்தாங்கினார்.
திருமணத்திற்கு
முன்பே மரியா கருவுற்று இருப்பதைக் கண்ட நாசரேத் ஊர் மக்கள் கட்டாயம் அன்னை மரியாவை மிகவும் கேவலமாகப் பார்த்து, அவர்மேல் அவதூறு கூறி... ஏன் அவரைக் கல்லால் எரிந்து கொல்வதற்கும் முயன்றிருப்பார்கள். அவதூறு, அவமானம், மிகவும் தரக்குறைவாகப் பார்த்த பார்வைகள், சமூக ஒதுக்குமுறை, அநியாயமான குற்றச்சாட்டு போன்றவற்றால் அன்னை மரியா சொல்லொண்ணா வேதனையையும் துயரத்தையும் அனுபவித்திருப்பார். ஆனால், கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக இவற்றையெல்லாம் மிகவும் துணிவோடு அன்னை மரியா ஏற்றுக்கொண்டார். மரியா, என்று இயேசுவைத் தன்னுடைய கருவறையில் சுமக்கத் தொடங்கினாரோ, அன்றிலிருந்து இயேசுவோடு இணைந்த அவரது கல்வாரிப் பயணமும் தொடங்கிவிட்டது.
மரியா-யோசேப்பின்
கல்வாரிப்
பயணம்
திருமணத்திற்கு
முன்பே கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்ள முன்வந்த யோசேப்புவையும் அந்த நாசரேத்தூரார் கட்டாயம் மிகவும் கேவலமாகப் பார்த்து, அவமானப்படுத்தி அவதூறு கூறியிருப்பார்கள். ஆனால், யோசேப்பும் இயேசுவினுடைய வளர்ப்புத் தந்தையாகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை நன்றியோடு நினைவுகூர்ந்து, கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றிட மரியாவை மனைவியாக ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது, அவரை அன்போடு பாதுகாத்திட, வழிநடத்திட முன்வருகிறார்.
கடவுளின்
மகனுக்கு அன்னையாக மாறிட அழைப்பு வந்த நேரத்திலிருந்தும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக வாழ அழைக்கப்பட்ட நேரத்திலிருந்தும் இயேசுவினுடைய சிலுவை வழியிலே நடக்க இருவரும் துணிந்திருக்கிறார்கள். துன்புறும் மெசியாவாக வாழப்போகின்ற இயேசுவோடு தங்களுடைய சிலுவைப் பயணத்தையும் முன்னெடுத்திட துணிச்சலோடும் நம்பிக்கையோடும் முன்வருகிறார்கள் மரியாவும் யோசேப்பும்.
நமது கவனத்தை
ஈர்க்க
வேண்டிய
திருப்பார்வைகள்
மீட்புத்
திட்டத்திலே பெண்களுக்கும் பங்கேற்பு உண்டு என்பதையும், கடவுள் மகனின் தாயாக வாழ அழைக்கப்பட்டதால், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக வாழ தேர்ந்துகொள்ளப்பட்டதால் மரியாவும் யோசேப்பும் வேதனைகளையும் அவதூறுகளையும் அவமானங்களையும் சமூக ஒதுக்குமுறைகளையும் சந்தித்தனர் என்னும் இந்த இரண்டு பார்வைகளுமே இயேசுவின் மனுவுருவெடுத்தலில் இரண்டறக் கலந்த பார்வைகளாக உள்ளன.
• திருவருகைக் காலத்தில் இந்த இரண்டு பார்வைகளிலும் நாம் வளர்ந்தோமென்றால், கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டமானது நாம் எல்லாரும் எதிர்நோக்கோடும் நம்பிக்கையிலும் துணிவோடும் நம் அன்னை மரியா-புனித யோசேப்பு இவர்களோடு பயணிக்க உதவியாக இருக்கும். கருவுற்றதிலிருந்து பலவகையான துன்பங்களையும் வேதனைகளையும்... ஏன் ஒருசில சமயங்களில் சமூக அவமான முத்திரை பதிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்ற பெண்களையும் மதிக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
• இன்னும் குறிப்பாக, பேறுகால வேதனையுற்று ஓர் உயிரை இந்த உலகிற்குக் கொண்டுவரும் ஒவ்வொரு பெண்மணியையும் நாம் மதிப்போடும் மாண்போடும் நடத்துவோம்.
• ஒவ்வொரு கணவரும் தன்னுடைய மனைவியை ஏற்றுக்கொண்டு, மதிப்போடு நடத்தி, அவரோடு நம்பிக்கையுடன் பயணிக்க அன்னை மரியாவும், புனித யோசேப்பும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள்.
• நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கின்ற துன்பங்களையும் துயரங்களையும் போராட்டங்களையும் சிக்கல்களையும் மனுவுரு எடுத்த இயேசுவின் பயணத்தோடு இணைத்துக் கொண்டு, துணிவும் நம்பிக்கையும் நிறைந்த மரியாவோடும் யோசேப்போடும் தொடர்ந்து பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
இறுதியாக,
கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் துன்பத்தைக் கண்ட மரியா-யோசேப்பு இவர்களுடைய பரிந்து பேசுதலிலே இந்த கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிட தொடர்ந்து தயாரிப்போம்.