news-details
ஞாயிறு தோழன்
சனவரி 01, 2026, புனித மரியா கடவுளின் தாய் - எண் 6: 22-27; கலா 4: 4-7; லூக் 2: 16-21

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புள்ள சகோதர-சகோதரிகளே! 2025-ஆம் ஆண்டு முழுவதும் நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றிகூறி, 2026-ஆம் ஆண்டு மகிழ்வின் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையோடு உங்களை வாழ்த்தி திருப்பலிக்கு அன்போடு அழைக்கிறோம்அன்னையாம் திரு அவை இன்றுஅன்னை மரியா கடவுளின் தாய்என்ற விழாவைக் கொண்டாடி மகிழ நமக்கு அழைப்புவிடுக்கிறது.

அன்னை மரியா அருள் மிகப்பெற்றவர்; அழகு நிறைந்தவர்; இயேசுவைத் தம் கருவில் சுமந்த நற்கருணைப் பேழை; வாழ்வோர் அனைவரின் தாய்; மீட்பு வரலாற்றின் உன்னத உயிர்! இம்மாபெரும் தாயின் அரவணைப்பு ஆண்டு முழுவதும் தொடர அன்னையின் பரிந்துரையை நாடுவோம். இப்புத்தாண்டில் இரட்டிப்பான அருள்வரங்களைப் பெற்று நலமோடு வாழ நம்பிக்கையோடு இறைவனை வேண்டுவோம்.

இந்தப் புத்தாண்டில் அன்னையின் வழிகாட்டுதலும் பரிந்துபேசுதலும் நிரம்பக் கிடைக்கட்டும். ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் நம்மைப் பாதுகாப்பார்; அனைத்து வளங்களையும் நலன்களையும் கொடுத்து நம்முடன் பயணிப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த 2026-ஆம் ஆண்டு முழுவதும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்வோம். அன்னை மரியாவின் துணையை நாடி நாமும், நமது பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களும் வாழ வரம் வேண்டி மகிழ்வோடும் உற்சாகத்தோடும் இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர் இந்தப் புத்தாண்டு முழுவதும்  நமக்கு ஆசி வழங்கி நம்மைக் காப்பதாகவும்தம் திருமுகத்தை நம்மேல் ஒளிரச்செய்து, அருள் பொழிந்து, நமக்கு அமைதியைக் கொடுத்து, அனைத்து நலன்களாலும்  நிரப்புவதாகவும் வாக்குறுதி தருகிறார். வாழ்வு தரும் இறைவனின் ஆசிரைப் பெற அழைக்கும் முதல் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இந்த உலகில் வாழும் அனைவருமே கடவுளின் குழந்தைகள். ‘அப்பா தந்தையேஎன்று அழைக்கும் உரிமையையும் கடவுள் நமக்குக் கொடுத்துள்ளார். தேவையான நேரத்தில் குறிப்பறிந்து கொடுக்கும் தந்தையின் பேரன்பைச்  சுவைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்.

1. ஆசியளிக்கும் ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தையும், ஆற்றலோடு பணி செய்வதற்கு மனவலிமையையும் ஞானத்தையும் தந்து காத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வல்லவரான ஆண்டவரே! இப்புதிய ஆண்டில் உடன் வாழும் சகோதர-சகோதரிகளின் தேவையை அறிந்து உதவி செய்து ஆசியை வழங்கும் மக்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! அன்னை மரியை எமது தாயாகக் கொண்டுள்ள நாங்கள் அனைவரும் எம் தாய் மரியைப் போன்று இறைத்திட்டத்திற்குப் பணிந்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்முடன் வாழும் ஆண்டவரே! இப்புத்தாண்டில் நாங்கள் ஒருவர் மற்றவருக்கு ஆசி நிறைந்த மக்களாக வாழவும், எல்லாச் சூழலிலும் நீர் எங்களோடு இருக்கின்றீர் என்ற நம்பிக்கையில் வளரவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.