கடவுள் மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார். அவர்தாம் இம்மானுவேல்! கடவுள் நம்மோடு! அவர் அந்நியர் அல்லர்; அவருக்கு முகம் உண்டு; அதுவே இயேசுவின் முகம். மீட்பின் இந்நாளில் நாம் பெருமகிழ்ச்சிகொள்கிறோம். இந்நாள் இரக்கத்தின் நாள்! இதில் நம் தந்தையாம் இறைவன் தம் உன்னத பாசத்தை உலகம் முழுமைக்கும் வெளிப்படுத்தியுள்ளார். இது ஒளியின் நாள்! இது அச்சம், ஏக்கம் எனும் இருளை விரட்டியடிக்கிறது. இது அமைதியின் நாள்! இது சந்திப்பிற்கும் உரையாடலுக்கும் ஒப்புரவிற்கும் வழியமைக்கிறது. இது மகிழ்வின் நாள்! இது ஏழைகளுக்கும் தாழ் நிலையில் உள்ளோருக்கும் அனைத்து மக்களுக்கும் உன்னத மகிழ்வைத் தருகிறது.
கடவுள்
குழந்தையாகப் பிறந்துள்ளார் என்ற வியப்புக்குரிய செய்தி முதலில் இடையர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழ்மையான நிலையில் அவர் பிறந்திருக்கிறார் என்பது இடையர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஓர் அடையாளம். அதாவது, தீவனத்தொட்டியில் குழந்தை கிடத்தப்பட்டிருக்கும் என்பதுதான் அந்த அடையாளம். அங்கு ஆடம்பர அலங்கார விளக்குகளோ அல்லது வானதூதர்களின் பாடல்களோ இல்லை. ‘ஒரு குழந்தை பிறந்துள்ளது’ என்பது
மட்டுமே அடையாளம்.
“பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார்” (லூக்
2:7), “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்”
(2:12), “விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத்தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்” (2:16) என்ற
இறைவார்த்தைகளில் மூன்றுமுறை ‘தீவனத்தொட்டி’ என்ற
வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மையான அர்த்தத்தைக் காண நாம் தீவனத்தொட்டியை உற்றுநோக்குவோம். ஏனெனில், கிறிஸ்து ஏன் இந்த உலகிற்கு வந்தார் என்பதை அது நமக்கு விளக்கிக் கூறுகிறது. இதன் அடிப்படையில் தீவனத்தொட்டி நமக்கு உணர்த்தும் 1. நெருக்கம், 2. ஏழ்மை, 3. தாழ்ச்சி ஆகிய மூன்று இறைப்பண்புகளைச் சிந்திப்போம்.
முதலாவதாக,
தீவனத்தொட்டி என்பது ‘கடவுளின் நெருக்கத்தை’ நமக்கு
உணர்த்துகிறது. தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையைக் காண்பிப்பது, ஆடம்பரம் இல்லாத எளிமையான ஓரிடத்தையும் காட்டுகிறது. கடவுளை எப்போதும் எளிமையான ஒரு சிறிய இடத்தில் மட்டுமே காணமுடியும். நம்மிடம் நெருக்கமாக வரவும், நம் இதயங்களைத் தொடவும், நம்மை மீட்கவும் கடவுள் இந்தச் சிறிய வழியைத்தான் தேர்ந்துகொள்கிறார். எனவே, தீவனத்தொட்டியில் பிறந்துள்ள கிறிஸ்து நம்முடன் நெருக்கமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது. அவர் நமது உணவாகவேண்டும் என்பதற்காக அதில் தம்மை வெளிப்படுத்துகிறார். அவர் நம்முடன் எப்போதும் மிகவும் நெருக்கமாக இருக்கவும், விண்ணக அரியணையை விடுத்து ஏழ்மை நிலையில் தம்மை ஒரு தீவனத்தொட்டியில் வெளிப்படுத்தவும் திருவுளம்கொண்டார்.
பொதுவாக,
நாம் யாரை அன்பு செய்கின்றோமோ அவர்களையே தேடிச்செல்கின்றோம். நாம் அன்பு செய்யும் ஒருவருக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றோம். நாம் அன்பு செய்பவர்களைத் தேடிச்சென்று சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும் உறவாடுவதிலும் நம் உள்ளம் பெருமகிழ்ச்சிகொள்கின்றது. அதேபோன்று, இறைவன் நம்மைத் தேடி வருகின்றார். ஆம், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகின்றது. தமது அளவுகடந்த அன்பினால் நம்மை அரவணைக்க வருகின்றார். தீவனத்தொட்டியைத் தேர்ந்தெடுத்த கடவுள், தாம் எவரிடமும் தூரமாக இல்லை என்பதைக் காட்டுகிறார். எந்த நிலை, எந்தச் சூழல், எந்த வறுமை இருந்தாலும், கடவுள் மனிதருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார் என்பதை இது காட்டுகிறது. ‘கடவுளின் நெருக்கம்’
கடவுள் உயர்ந்த அரண்மனைகளில் அல்லது பிரமிப்பூட்டும் இடங்களில் அல்ல; சாதாரண மக்கள் வாழும் எளிய இடங்களிலும்கூட வருகிறார்.
இரண்டாவதாக,
தீவனத்தொட்டி வெளிப்படுத்தும் முக்கியமான செய்தி ‘கடவுளின் ஏழ்மை.’ இயேசு ஏழையாகப் பிறந்தார்; ஏழையாக வாழ்ந்தார்; ஏழையாகவே இறந்தார். தீவனத்தொட்டி- எளிமையின் உச்சமிது. தீவனத்தொட்டியைச் சுற்றி நின்றவர்களும் ஏழைகளே. அன்னை மரியா, யோசேப்பு, இடையர்கள் மற்றும் அனைத்து ஏழையரும்! இவர்கள் செல்வம் மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளால் அல்ல; மாறாக, அன்பால் மட்டுமே அங்கு ஒன்றுபட்டிருந்தனர். பணத்திலும் பதவியிலும் அல்ல; ஆனால், உறவுகளிலும் நபர்களிலும்தான் வாழ்க்கையின் உண்மையான செல்வங்கள் காணப்படுகின்றன என்பதைத் தீவனத்தொட்டியின் ஏழ்மை எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்து பிறப்பு விழாவை உண்மையிலேயே நாம் கொண்டாட விரும்பினால், புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தையின் வலுவற்ற எளிமையின் திருவுருவைக் காணவேண்டும்; அங்கே தான் இறைவன் இருக்கின்றார்.
எல்
சால்வதோர் நாட்டின் பேராயராகப் பணிபுரிந்த புனித ஆஸ்கர் ரொமேரோ தன் மக்களுக்கு வழங்கிய கிறிஸ்துமஸ் செய்தியில் கூறிய வார்த்தைகள் இவை: “உண்மையில் ஏழையாக மாறாதவர்கள் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடமுடியாது. தன்னிடம் எல்லாமே உள்ளன, தனக்கு மட்டும் போதும் என்ற மனநிலையில் வாழ்பவர்களுக்கு இறைவன் தேவைப்படுவதில்லை; அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பும் தேவைப்படுவதில்லை. ஏழைகள், பசியுற்றோர், தேவையில் இருப்போர்... இவர்களாலேயே கிறிஸ்து பிறப்பு விழாவில் பொருள் காண முடியும். அவர்களைத் தேடியே இம்மானுவேல் அதாவது ‘கடவுள் நம்மோடு’ என்ற பெயர் தாங்கிய இறைவன் வருவார்.”
எனவே,
இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம், நம்மைக் கடந்துசெல்வோரில் குறிப்பாக, எளியோர் மற்றும் உதவி தேவைப்படுவோரில் அவரைக் கண்டுகொள்ள அழைப்புப் பெற்றுள்ளோம். நம் மீட்பரின் நிச்சயமான வருகை குறித்து மகிழ்வதற்கு அழைப்புப்பெற்றுள்ள நாம், அந்த மகிழ்வைப் பிறருடன் பகிர்ந்து, ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் தனிமையில் இருப்போருக்கும் மகிழ்வின்றி வாழ்வோருக்கும் ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மூன்றாவதாக,
தீவனத்தொட்டி வெளிப்படுத்தும் செய்தி ‘கடவுளின் தாழ்ச்சி.’ பெண்களுக்குள் பேறு பெற்ற, கடவுளின் அருளை அடைந்த அன்னை மரியா, ‘இதோ அடிமை’ என்று தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார். தான் கடவுளின் தாய் என்ற ஆணவத்திற்கு ஒருபோதும் இடம் கொடுத்ததேயில்லை. இத்தகைய ஒரு புண்ணியம் நிறைந்த தாழ்ச்சியைத் தீவனத்தொட்டி நமக்கு உணர்த்துகிறது. உலகினர் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த கடவுளின் மேன்மையான குணம் இவ்வகையில் வெளிப்பட்டது. எனவே, தீவனத்தொட்டியில் இருக்கும் இந்தக் குழந்தையைக் காணவேண்டுமெனில் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று, நம்மையே அவருக்கு முன் தாழ்த்தவேண்டும்.
தாழ்ச்சி
என்பது தன்னைப் பற்றிக் குறைவாக நினைப்பது அல்ல; மாறாக, ‘தான்’ என்ற எண்ணத்தைக் குறைப்பது. தாழ்ச்சி என்பது, தன் கருத்துகளை அடக்கி வைப்பது அல்ல; மாறாக, பிறரது கருத்துகளுக்கு மதிப்பு தருவது. தாழ்ச்சி என்பது, தன் திறமைகளை மறைப்பது அல்ல; மாறாக, பிறர் திறமைகளையும் பாராட்டுவது. தாழ்ச்சி என்பது, தன்னைப்பற்றிக் குறை கூறுவது அல்ல; மாறாக, பிறரின் குறையை மிகைப்படுத்தாமல் இருப்பது. தாழ்ச்சி என்பது, தன்னை விலக்கிக்கொள்வது அல்ல; மாறாக, பிறருக்கு முக்கியத்துவம் தருவது. தாழ்ச்சி என்பது, தனது உரிமைகளை விட்டுக் கொடுப்பது அல்ல; மாறாக, பிறரின் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பது. தாழ்ச்சியாய் இருப்பது என்பது, அடக்கமாக இருப்பது அல்லது கண்களை மூடிச்செபிப்பது அல்ல; மாறாக, அவமானங்களை ஏற்கும் திறனைக் கொண்டிருப்பது. தாழ்ச்சியுள்ளவர் இயேசுவைப் போன்று அவமதிப்புகளை ஏற்றுக் கொள்வார்.
நிறைவாக,
தீவனத்தொட்டியில் படுத்திருக்கும் குழந்தையின் வடிவில் இறைவன் நமக்கு விடுக்கும் செய்தி: எங்கெல்லாம், அமைதியும் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோ, அங்குள்ள குழந்தைகளின் முகங்களில், இயேசுவைக் காண வேண்டும். பாலன் இயேசுவைக் கைகளில் தாங்கி, தூக்கி, அரவணைக்கும் நாம் தாகமுற்றிருப்போரை, அந்நியரை, உடையின்றி இருப்போரை, நோயாளிகளை, கைதிகளை... அவரில் ஏற்று அரவணைக்கத் தயங்கக்கூடாது. இயேசுவின் பிறப்பு கொணர்ந்துள்ள பெரும் மகிழ்ச்சியை விளிம்புநிலை மனிதர் ஒவ்வொருவருக்கும் வழங்குவோம். பெத்லகேமின் சின்னக் குழந்தையின் அழுகை நம்மை உலுக்கி, நம் பாராமுகம் எனும் போக்கிலிருந்து நம்மை அகற்றி, துன்புறுவோர் குறித்து நம் கண்களைத் திறக்கட்டும். தீவனத்தொட்டியிலும் சிலுவையிலும் தமது ஒன்றுமில்லாத் தன்மையில் ஏழ்மையை வெளிப்படுத்திய இயேசுவைப்போல ஏழ்மை நிலையிலும் ஆதரவற்ற நிலையிலும் இருக்கும் அனைவரையும் அரவணைத்துக்கொள்வோம். தீவனத்தொட்டியில் இயேசு நமக்காகப் பிறந்துள்ளார். நாம் பிறருக்காகப் பிறப்போம்.
அனைவருக்கும்
கிறிஸ்து
பிறப்பு
வாழ்த்துகள்!