நமக்கு முகமாய், முகவரியாய், அடையாளமாய் அமைவது குடும்பம். குடும்பம் பாசத்தின் உறைவிடம்; அன்பின் இல்லிடம்; நெருக்கத்தின் இருப்பிடம். இங்குதான் உரையாடல் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றம் ஆகிய கலைநுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. குடும்பத்தில்தான் ஒவ்வொருவரும் தங்கள் மேன்மையையும் பெருமையையும் அறிந்துகொள்கின்றனர். அன்பு செய்கின்ற, ஒருவரையொருவர் முழுமையாக நேசிக்கின்ற, ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்கின்ற, மற்றவர்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்கக்கூடிய குறிப்பாக, மிகவும் நலிந்தோரையும் நோயுற்றோரையும் கனிவாய்ப் பாதுகாக்கக்கூடிய தளமாகப் பல தன்மைகளைக் கொண்டதே குடும்பம். எனவேதான், குடும்பம் சமுதாயத்தின் அடித்தளம் எனவும், அடிப்படை உயிரணு என்றும் அழைக்கிறோம்.
குடும்பம்
என்பது மனித உறவின் நிறைவு. இங்கேதான் ஒருவரையொருவர் மதிக்கவும் அன்பு கூரவும் வேண்டும் என்ற பண்பும் ஒற்றுமையும் மேலோங்கி இருக்கும். குடும்பம் என்பது நம்பிக்கையின் தொடக்க வித்து. குடும்பத்தில் நம்பிக்கை என்பது தாய்ப்பாலுடன் சேர்ந்தே ஊட்டப்படுகிறது. குடும்பத்தில்தான் பெற்றோரும், தாத்தா-பாட்டிகளும் தங்கள் நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்கு வழங்குகின்றனர். எனவேதான் ‘குடும்பம் என்பது நற்செய்தி அறிவிப்பதற்குச் சிறந்த தளம்’ என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மனிதகுலத்திற்கு நற்செய்தியை அறிவிக்க முதன்முதலில் அழைக்கப்பட்ட சமூகம் கிறித்தவக் குடும்பங்களே.
திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால், “திரு அவையின் இதயமே குடும்பங்கள்தாம்; இந்த இதயம் பழுதடைந்தால் மனிதன் வாழமுடியாது; குடும்பங்கள் சிதைவுற்றால் திரு அவையும் சிதைவுறும்” என்கிறார்.
ஒரு நல்ல குடும்பம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, திரு அவைக்கும் அடித்தளமாக இருக்கிறது. ஒரு நல்ல குடும்பம் கத்தோலிக்க நம்பிக்கையை, அன்பை, கிறித்தவ ஆன்மிகத்தைத் தன்னுடைய பிள்ளைகளின் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்கிறது. அதனால்தான், கிறித்தவக் குடும்பம் ‘ஒரு குட்டித் திரு அவை’ என்ற கருத்துருவாக்கத்தைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தன்னுடைய ‘குடும்ப வாழ்வு’
(Familiaris Consorti) என்ற
சுற்றுமடலில் முன்மொழிந்தார். குடும்பம் என்பது குட்டித் திரு அவை என்பதற்கு முதல் மாதிரியாக வாழ்ந்த குடும்பம் நாசரேத்தூர் திருக்குடும்பம்.
கிறிஸ்து
பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திரு அவை நம்மை அழைக்கின்றது. இயேசுவின் குடும்பத்தைப்போலவே உலகில் உள்ள எல்லாக் குடும்பங்களும் இருக்கவேண்டும் என்பதே இவ்விழா இன்று விடுக்கும் அழைப்பு. திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திரு அவை அழைப்பு விடுத்ததன் காரணம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
திருக்குடும்பத்
திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாகத்தான் தொடக்கத் திரு அவையில் வளர்க்கப்பட்டு வந்தது. முதன்முதலில் 1893-ஆம் ஆண்டு திருத்தந்தை 13-ஆம் லியோ இவ்விழாவை அறிமுகம் செய்தார். 1921-ஆம் ஆண்டு திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட் இத்திருவிழாவைத் திருவழிபாட்டுக் கால அட்டவணையில் இணைத்தார். இதற்கு முக்கியக் காரணம், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப் போர். 1918-இல் நடைபெற்ற இப்போரில் பல்லாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. தந்தையையும் மகனையும் இழந்த பல குடும்பங்கள் ஆழ்ந்த
துயரத்தில், அவ நம்பிக்கையில் மூழ்கியிருந்தன.
இக்குடும்பங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக் கட்டியெழுப்ப திரு அவை முயன்றது.
1962-ஆம் ஆண்டு
தொடங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் திருக்குடும்பம் குறித்த சிந்தனைகளைப் புதுப்பித்தது. நடைபெற்ற உலகப் போர்களுக்குப் பின்னர் குடும்பங்கள் சந்தித்த துயரங்கள், சிதைவுகள், அவநம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் போதைப்பொருள்களின் பரவலான பயன்பாடுகள், கலாச்சாரச் சீரழிவுகள் போன்ற காரணிகளால் நிலைகுலைந்த குடும்பங்களைக் காப்பது என்பது திரு அவையின் முக்கியக் கடமையாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் உண்மையான அன்பையும் அமைதியையும் திருக்குடும்பம் வழங்கமுடியும் எனத் திரு அவை உணர்ந்தது.
எகிப்தில்
அடைக்கலம் தேடி, நாடு கடந்து செல்லும் துயரமான சூழலை யோசேப்பு, மரியா, குழந்தை இயேசு அனுபவித்தனர். பச்சிளம் குழந்தை இயேசுவோடு மரியாவும் யோசேப்பும் எகிப்துக்கு ஓடிப்போன நேரத்தில், அக்குழந்தையை அழித்துவிடும் வெறியில், ஏரோது பல நூறு குழந்தைகளின்
உயிர்களைப் பலிவாங்கினான். திருக்குடும்பம் சந்தித்த அதேபோன்ற மோசமான சூழ்நிலையை இன்று குடும்பங்கள் சந்திக்கின்றபோது, கடவுளின் அன்பிலிருந்தும் நெருக்கத்திலிருந்தும் புறக்கணிக்கப்படுவதாக எவரும் நினைக்கக்கூடாது. இதுபோன்ற கடினமான பிரச்சினைகளைச் சந்திக்கின்ற குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இயேசு இருக்க விரும்புகிறார் என்ற ஆழமான நம்பிக்கையைத் திரு அவை குடும்பங்களுக்கு ஊட்டியது. அனைத்துக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியாகத் திருக்குடும்பத்தை முன்னிறுத்தியது. கிறிஸ்துமஸ் விழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறைத் திருக்குடும்பத் திருவிழாவாகக் கொண்டாடவேண்டும் என்று 1960-இல் திரு அவை அறிவித்தது.
திருக்குடும்பம்
நம் மத்தியில் எப்படி வாழ்ந்தது? அந்தக் குடும்பம் கடைப்பிடித்து வாழ்ந்த விழுமியங்கள் என்னென்ன? என்பதை இன்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பம் பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடு இரவாக வேறொரு நாட்டிற்கு அகதிகளாய் ஓட வேண்டியிருந்தது. நாட்டிற்குள்ளும்
அடுத்த நாடுகளுக்கும், இரவோடு இரவாக ஓடும் இன்றைய புலம்பெயர்ந்தோரின் நிலையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குடும்பம் அனுபவித்தது. வானவரின் செய்தியைக் கலக்கத்தோடு ஏற்றுக்கொண்ட மரியா, இச்செய்தியை அறியும்போது மனக்கலக்கமும் குழப்பமும் அடைந்த யோசேப்பு, குழந்தை இயேசுவைக் குறித்த சிமியோனின் இறைவாக்கு (லூக் 2:35), தாயும்-தந்தையும் இயேசுவைக் காணவில்லையே என்ற ஏக்கமிகு தேடல் (லூக் 2:44) எனத் திருக்குடும்பம் எந்நேரமும் பிரச்சினைகளோடே வாழ்ந்து வந்தது. இருப்பினும், அவர்கள் அந்தப் பிரச்சினைகளைச் சந்தித்த விதமும், அவற்றிற்குத் தீர்வு கண்டவிதமும் நமக்கு நல்லதொரு பாடம்.
திருக்குடும்பம்
துன்பங்கள், சோதனைகள் வேளையிலும் செபத்தில் இணைந்திருந்ததைச் சிறந்த மாதிரியாக நாம் பார்க்கிறோம். அன்னை மரியாவும் யோசேப்பும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருப்பதிலும், அவரின் திட்டத்தை நிறைவேற்றுவதிலும் எப்போதும் கவனமாய் இருந்தனர். எப்போதும் கடவுளுக்காக வாழக்கூடியவர்களாவும், தங்களையே முழுவதும் அர்ப்பணிக்கக்கூடியவர்களாவும்
இருந்தனர். கடினமான சூழலிலும், கலக்கமடைந்த வேளையிலும் கடவுளுக்கு ‘ஆம்’ என்றே பதிலளித்தனர். குறிப்பாக, அன்னை மரியாவின் ‘ஆம்’ கல்வாரி மலையின் உச்சம்வரை தொடர்ந்தது. இறை நம்பிக்கை என்பது தங்களையே முழுமையாக இறைவனிடம் அர்ப்பணிப்பதைவிட வேறு எது இருக்கமுடியும்? இறுதிவரை பரிவு, இரக்கம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய நற்பண்புகளால் தங்கள் உள்ளங்களை அணிசெய்தனர் இயேசு-மரி-யோசேப்பு குடும்பம்.
திருக்குடும்ப
விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில் நம்பிக்கையின் நாற்றங்காலாய் விளங்கும் நமது குடும்பங்களை எண்ணிப்பார்ப்போம். இன்றைய வணிகப் பொருளாதார வாழ்க்கை அமைப்பில் குடும்ப உறவுகள் சீர்குலைந்து வருகின்றன. திருமணத்தின் புனிதமும், அதன் முறிவுபடாத் தன்மையும் இன்று உலகுசார்ந்த நவீன கலாச்சார அழுத்தத்தால் சிதைவுற்றுப்போகின்றன. தாயின் கருவறையில் உள்ள குழந்தைகளுக்கு எதிராக எழும் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. தாயின் மடியில் தலைவைத்துப் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள குழந்தைக்கும், குழந்தையின் மழலையில் குதூகலிக்க பெற்றோருக்கும் இன்று நேரமில்லை.
‘ஒரு குழந்தை வளர ஒரு கிராமமே தேவைப்படுகிறது’ என்ற
ஆப்பிரிக்க முதுமொழி நினைவுகூரத்தக்கதே. மனிதர்கள் இன்று நுகர்வுக் கலாச்சாரத்தில் சந்தைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படுகின்றனர். ‘பயன்படுத்தித் தூக்கியெறி’ எனும்
கலாச்சாரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். முதியோர் குறிப்பாக, நோயுற்றோர் இன்று சுமையாகி விட்டனர். மனித உறவுகள் எப்போதும் ஒருவரையொருவர் சார்ந்த உறவுகள் என்பதைப் பல வேளைகளில் நாம்
மறந்துவிடுகிறோம்.
“உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியைக் கொணர விரும்பினால் வீட்டுக்குச் சென்று உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்” என்றார்
அன்னை தெரேசா. எனவே, தங்களைச் சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி அன்பை, அக்கறையை, ஆதரவைத் தங்கள் குடும்பத்திலும், தாங்கள் வாழ்ந்த சூழல்களிலும் நிலைநாட்டிய திருக்குடும்பத்தைப்போல மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த குடும்ப வாழ்வு வாழ திருக்குடும்பத்திடம் வேண்டுவோம்.
அனைவருக்கும்
திருக்குடும்ப
விழா
வாழ்த்துகள்!