திருப்பலி முன்னுரை
விண்ணகத்
தேவன் மண்ணகம் இறங்கி வந்த மாபெரும்
விழா கிறிஸ்து பிறப்பு விழா! கிறிஸ்துமஸ் என்றாலே ஒருவருக்கொருவர் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் விழா. பாவத்தில் வீழ்ந்துவிட்ட மானுடத்தை மீட்பதற்காக, இருளின் பிடியில் சிக்கியிருந்த உலகை ஒளியின் பாதையில் வழிநடத்துவதற்காக இறைவன் தம்முடைய ஒரே மகனை இவ்வுலகிற்குப் பரிசாகக் கொடுத்த உன்னதமான நாள். இப்பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றேன். ‘இம்மானுவேல்’ என்றால்
‘கடவுள் நம்மோடு’ என்பது பொருள். இயேசு விருந்தினராக அல்லர்; மாறாக, நம்மை விட்டு எப்போதும் நீங்காத உறவாக வாழ மனிதராகப் பிறந்திருக்கிறார். அவர் வியப்புக்குரியவர். “நம் ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத நிகழ்வுகளை நிகழ்த்தி நம்மை வியப்புகளில் ஆழ்த்துபவர் நம் கடவுள்” என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மாட்டுத்தொழுவத்தில், கந்தைத் துணியில் விந்தையாய் பிறந்து நம் அனைவருக்கும் வாழ்வு கொடுக்கும் இயேசு பாலனுக்கு நாம் என்ன கொடுக்கப் போகின்றோம்? தம் நிலையிலிருந்து இறங்கி வந்து வாழ்வு கொடுத்த இயேசுவைப் போன்று நாமும் இறங்கி வந்து ஏழைகள், கைவிடப்பட்டடோர், தெருவோரத்தில் வாழும் நம் சகோதர-சகோதரிகள், தனிமையில் வாடுவோர், முதியோர் இல்லத்தில் வாழும் மூத்தோர் அனைவரையும் தேடிச்சென்று உதவி செய்வோம். பிறந்திருக்கும் பாலன் இயேசுவுக்கு நமது தூய்மையான வாழ்வைப் பரிசாகக் கொடுப்போம். நம்மோடு வாழ வந்திருக்கும் இயேசு பாலனோடு எப்போதும் நாம் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
நமக்காக
ஓர் ஆண்மகவு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நம் அனைவருக்கும் விடுதலையைக் கொடுப்பவராகவும் வியத்தகு ஆலோசகராகவும் வலிமை மிக்கவராகவும் அமைதியின் அரசராகவும் இருந்து நம் அனைவருக்கும் மீட்பைத் தந்து காத்திடுவார் என்ற நம்பிக்கை செய்தியைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
ஆண்டவரின்
அருளைச் சுவைத்து, கடவுளின் திட்டத்தை அறிந்து, அவர் நமக்குக் காட்டுகின்ற நெறிகளில் நடக்கும்போது துன்பம் நம்மை நெருங்காது. தீயவை எதுவும் நம்மைத் தீண்டாது எனக் கூறி, அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்து, தூய்மையான மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.
மன்றாட்டுகள்
1. ‘நல்ல ஆயன்
நானே’ என்று மொழிந்த இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது பிறப்பு விழா கொண்டுவந்த அன்பையும் நம்பிக்கையையும் சுவைத்து, அதை வாழ்வால் அறிவிக்கத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எம்மோடு
வாழ பாலனாகப் பிறந்த இறைவா! எம் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதித்துக் காத்திடவும், நீர் கொண்டுவந்த மகிழ்வைப் பிறரோடு பகிர்ந்து வாழவும், அனைவரிலும் கடவுளைக் காணவும் தேவையான ஞானத்தை எம் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எமக்கு
வாழ்வு கொடுக்க மனிதனாகப் பிறந்த இறைவா! எம் நாட்டில் பஞ்சம் நீங்கிடவும், நோய்கள் ஒழிந்திடவும், போர்,
பகை அழிந்து மக்கள் மகிழ்வோடு வாழ்ந்திடவும், எம் நாட்டில் நிலவும் பிளவுகள் அனைத்தும் நீங்கி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. மகிழ்ச்சியாக
வந்துதித்த இறைவா! போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அனைவரும் உம் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டு வாழவும், அவர்கள் நலனில் அக்கறை கொள்பவர்களாக நாங்கள் மாறவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.