‘விடுதலை இந்தியா’- இது பெருமைக்குரிய சொல்லாடல்; உரிமைக்குரிய அடையாளம்! 1947- ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் நாள் இந்தியா ஆங்கிலேயர்களின் காலனித்துவத்திலிருந்து ‘விடுதலை பெற்றதாக’ அறிவிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் நாட்டின் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விடுதலை இந்தியாவின் புதிய வரலாறு படைக்கப்பட்டது. மேலைக்காற்று சுமந்து வந்த அடிமைத்தனமும், அதன் கொடிய அரசியல் கட்டமைப்பும் தகர்க்கப்பட்டு, கடந்த 78 ஆண்டுகளாக விடுதலைத் தென்றல் இம்மண்ணில் எங்கும் உலா வரும் சூழலில், “அடிமை உணர்விலிருந்து இந்தியா மீள வேண்டும்” எனும் நம் பிரதமரின் அண்மைக்காலச் செய்தி நம்மைத் திடுக்கிட வைக்கிறது.
‘விடுதலை’ என்பது அதிகார அடக்குமுறையிலிருந்து விடுபட்டு, தனிநபர் அல்லது சமூகத்தின் வாழ்க்கை முறையைத் தன்னாட்சி கொண்டதாக உருவாக்கும் வாழ்வியல். நமது அரசமைப்பு முறையில், அது முறையான சட்ட உரிமைகளை நமக்குத் தந்துள்ளபோதும், பிரதமர் குறிப்பிட்ட ‘அடிமை உணர்வு’ என்பது அரசியல் தளத்தில் ஆயிரம் விமர்சனங்களைக் கொண்டிருப்பது தவிர்க்க இயலாதது. சுதந்திரம், விடுதலை என்னும் சொல்லாடல்கள் அடிமைத்தனம், அதிகார அடக்குமுறைகள் ஆகியவற்றிலிருந்து மலர்ந்த புது வாழ்வு என்னும் சமூக-அரசியல்-வாழ்வியல் பார்வையைத் தந்தாலும், பிரதமர் குறிப்பிட்ட ‘அடிமை உணர்வு’, விள(ல)க்கப்பட வேண்டிய
கருத்தியலாகவே இருக்கிறது.
உத்தரப்பிரதேச
மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம், 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பின் அடிப்படையில், இராமர் கோவில் கட்ட ‘இராம ஜென்மபூமியாக’ வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், 191 அடி உயர கோபுரத்தில் 10 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட காவிக்கொடியைப் பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இணைந்து அண்மையில் ஏற்றி வைத்துள்ளனர். அப்போது, “அயோத்தி நகரம் இந்தியாவின் கலாச்சார உணர்வின் உச்ச நிலையைக் கண்டு வருகிறது; நூற்றாண்டுகளாக இருந்து வந்த காயம் ஆற்றப்பட்டு வலி முடிவுக்கு வந்திருக்கிறது; இது வெறும் கொடி அல்ல; தருமத்தின் அடையாளம்; இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் அடையாளம். இந்தக் கொடி உறுதிப்பாடு, வெற்றி, போராட்டம், கனவுகளின் அடையாளம்! இராமரின் கொள்கைகளான உண்மை எனும் தர்மம், பாகுபாடுகள், துன்பம் இல்லாத சமூகம், வறுமை இல்லாத உலகம் ஆகியவற்றை இது பறைசாற்றுகிறது. இந்தக் கோவில் வெறும் நம்பிக்கையை மட்டுமல்ல; நட்பு, கடமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது” என்று
மோடி உரையாற்றியிருக்கிறார்.
மதச்சார்பற்ற
விடுதலை இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றி ஒற்றுமை பாராட்ட வேண்டியவர், காவி கொடியை ஏற்றி வேற்றுமை பாராட்டியிருக்கிறார். ஆகவேதான் இந்தியாவின் மேனாள் நிதி அமைச்சர்
ப.
சிதம்பரம், “மோடி இந்தியாவின் பிரதமரா? இல்லை அயோத்தி கோவிலின் அர்ச்சகரா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
தனது
உரையைத் தொடர்ந்த இந்தியப் பிரதமர், “விடுதலையின்
100 ஆண்டுகளை 2047-இல் இந்தியா நிறைவு செய்யும் போது, வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு நமக்குள் இருக்கும் ஸ்ரீராமரை நாம் ஒவ்வொருவரும் தட்டியெழுப்ப வேண்டும். ஸ்ரீராமர் பாகுபாடு பார்த்ததில்லை; அதே உணர்வுடன் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையைக் குடிமக்கள் அனைவரும் தழுவிக் கொள்ளவேண்டும். இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தில் பெருமை கொள்ளவேண்டும்; காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபடவேண்டும்” எனக்
குறிப்பிட்டிருக்கிறார்.
‘அடிமை உணர்வு’,
‘இராமரைத் தட்டியெழுப்பவேண்டும்’, ‘அனைவரையும்
உள்ளடக்கிய தன்மை...’ என்னும் சொற்பதங்கள் இன்று ஊடகங்களில் விவாதப் பொருளாகி வருகின்றன. இத்தகைய சூழலில், வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கும் இராமருக்கும் என்ன தொடர்பு? இத்தனை காலமாக இராமரை எழுப்பாததால்தான் இந்தியா வளர்ச்சி அடையவில்லையா? என்ற சாமானியனின் கேள்விக்குப் பிரதமர்தான் பதில்கூறவேண்டும்.
சமயச்சார்பற்ற
இந்திய நாட்டில், எல்லாருக்கும் பொதுவான நபராக உயர் பதவி வகிக்கும் பிரதமர், தனிப்பட்ட மத நம்பிக்கையை, கொள்கையை
நாட்டுப்பற்றுக்கும்,
நாட்டின் வளர்ச்சிக்கும் அடிப்படைக்கூறாக இணைத்துப் பேசுவது நாட் டின் சமயச்சார்பற்ற பன்முகத்தன்மையைச் சிதைப்பதாகவே அமைந்துள்ளது.
அடுத்த
இரு தினங்களில் கோவாவில் 77 அடி உயர இராமரின் சிலையைத் திறந்துவைத்தபோது, “மக்களின் ஒற்றுமையே வளர்ந்த இந்தியாவை அடைவதற்கு வழியாகும்; சமூகம் ஒன்றுபட்டால் தேசம் மாபெரும் முன்னேற்றத்தை முன்னெடுக்கும்” என்று
ஒற்றுமையை வலியுறுத்தியிருக்கிறார். பெரிதும் வரவேற்கத்தக்கதே!
உண்மை
பேசுவது வரவேற்கத்தக்கதாயினும், உண்மையாக வாழ்வதே போற்றத்தக்கது. இந்தியப் பிரதமர் அவ்வப்போது உண்மை பேசுகிறார்; பாராட்டத்தக்கதே! ஆனால், அந்த உண்மை ஆட்சித் தளத்தில் - அரசமைப்பின் பார்வையில் வாழ்வாக்கப்படுகிறதா? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
இங்கே,
வரலாறு சற்றே பின்னோக்கிப் பார்க்கப்படவேண்டும். அரசியல் அடிமைத்தனத்தில் இந்தியா இருந்தது நேற்றைய வரலாறு; கருத்தியல் அடிமைத்தனத்தில் அது சிக்குண்டு இருப்பது இன்றைய வரலாறு. பன்முகத்தன்மையும் சகோதரத்துவமும் சமயச்சார்பற்ற தன்மையும் சிதைக்கப்பட்டு, சிறுபான்மையினரின் ‘இருத்தலே’
கேள்விக்குள்ளாகும்
வாழ்வியல் அடிமைத்தனம், தொக்கி நிற்பது நாளைய வரலாறு.
மதச்சுதந்திரம்,
கருத்துச் சுதந்திரம், சமூகச் சுதந்திரம், வாக்குரிமைச் சுதந்திரம், தன்னிறைவுப் பொருளாதாரச் சுதந்திரம்... என
யாவும் பறிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில், ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் ஆழ்மனத்திலும் குடியிருக்கும் அச்சமும் பயமும்தான் பிரதமர் வெளிப்படையாகக் கூற முடியாத அடிமை உணர்வின் வெளிப்பாடு!
காலனித்துவச்
சிந்தனை இன்னும் நிர்வாகம், கல்வி, மொழி ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துவதாகப் பிரதமர் நினைவூட்டி இருந்தாலும், காவி அரசியல், ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் கொள்கையில் நிர்வாகம், கல்வியில் காவி, மும்மொழிக்கொள்கையில் மறைந்திருக்கும் மதவாத அரசியல் என யாவற்றையும் கட்டமைப்பதும்
அவர்களே! தன்னம்பிக்கை, மண்ணின் அடையாளம், மாண்புமிக்க பாரம்பரியம் யாவும் வலுப்படுத்தப்படவேண்டும் என ஒரு பக்கம்
கூறினாலும், மறுபக்கம் ‘ஒரே இந்தியா’ என்னும் போர்வையில் ‘ஒரே மொழி - ஒரே
மதம் - ஒரே இனம்’ என்னும் கட்டமைப்பு நீட்சி அடைவதும் அவர்களாலேயே!
விடுதலை
இந்தியா கல்வி, மருத்துவம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி எனப் பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டிருந்தாலும், இவை அனைத்தும் இன்று மதக்கொள்கைகளுக்குள் சுருக்கப்படுவதும் மதச்சாயம் பூசப்படுவதும் ‘நாம் எங்கே போகிறோம்?’ என்ற கேள்வியையே எழுப்புகிறது.
எப்போதும்
ஒன்றிய அரசிற்கு இசைந்தே துதிபாடும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, “சனாதன தர்மத்தை எடுத்துவிட்டாலோ, பிரித்தாலோ பாரதம் என்ற ஒன்று இல்லாமல் போய் விடும். எனவே, சனாதன தர்மம் அனைவருக்கும் பகிரப்படவேண்டும். இந்த உலகின் நிலைத்தன்மைக்குச் சனாதன தர்மம் தேவைப்படுகிறது; மனிதனின் வாழ்வு தொடங்கிய நாள் முதலே, சனாதன தர்மம் மனிதனின் முன்னேற்றத்திற்கு உதவியது” என்று கூறியிருக்கிறார். சமூகக் கட்டமைப்பைத் தகர்க்க ஆயிரம் கருத்தியல்கள் முன் நின்றாலும், ஆளுநர் ஆர்.என். ரவிபோல சனாதனக்
கட்டமைப்பைக் காக்க முற்படும் இவர்களால்தான் இச்சமூகம் முன்னோக்கியல்ல, பின்னோக்கி இழுக்கப்படுகிறது.
எந்தவொரு
நாட்டிலும் மக்கள் விரும்பி அடிமைத்தனத்திற்குள் சிக்குண்டிருப்பதில்லை. அங்குள்ள அரசியலும், கட்டமைக்கப்படுகின்ற கருத்தியலும்தான் மக்களை இன்னும் அடிமை நிலையிலேயே வைத்திருக்கிறது. இந்தியத் திருநாட்டில் சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, மனிதத்தை, மனிதநேயத்தை ஒவ்வோர் இந்தியனின் உள்ளத்திலும் தட்டியெழுப்ப வேண்டுமென முழங்குவதற்குப் பதிலாக இராமரைத் தட்டியெழுப்பக் கூறுகிறார் பிரதமர்.
நேற்று-இன்று எனத் தொடரும் இந்த அடிமைத்தனம், நாளையும் தொடராதிருக்க நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. குடிமக்கள் நினைத்தால் நாட்டின் வரலாற்றை மாற்ற முடியும். அதற்கு இந்திய மண்ணில் வாக்குச்சீட்டே வன்மையான ஆயுதம்; அதுவும் இன்று ஆபத்தான சூழலில் ஊசலாடுகிறது. மக்கள் நினைத்தால் எந்த ஆட்சியையும் மாற்ற முடியும். அதற்குத் தேவை தெளிந்த சிந்தனையும் தீர்க்கமான விழிப்புணர்வும். “சமுதாயம் என்பது நமது தேவைகளால் உருவாகிறது; ஆனால், அரசு என்பது நமது கயமையால் உருவாகிறது” என்றார்
வில்லியம் கோட்வின்.
விழிப்படைந்தால்
விண்ணையும் தொட முடியும்; விவேகம் கொண்டால் வேரடி மண்ணோடு நம் அடிமைத்தனம் விரைந்தோடிவிடும். எனவே, இந்தியாவில் சமூக-அரசியல் மாற்றம் விரைவில் நிகழ்ந்தாகவேண்டும்; இத்தகைய சூழலில், அமெரிக்கக் கவிஞன் ஜேம்ஸ் இரஸ்ஸல் லொவலின் கவிதை வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன...
‘வல்லமையற்றவர்களுக்காகவும்
வாயில்லாதவர்களுக்காகவும்
பரிந்து
பேச அஞ்சுவோர் அடிமைகளே!
உண்மையைக்
கண்டு
உள்ளுக்குள்
ஒடுங்கிவிடாமல்
சீறியெழாதவர்கள் அடிமைகளே!’
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்