உரோமையில் செயல்பட்டு வரும் பாப்பிறை போர்த்துக்கீசியக் கல்லூரியின் 125-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட திருத்தந்தை லியோ, அங்குப் பயிலும் போர்த்துக்கீசிய குருமாணவர்களுக்கும், மேற்படிப்புப் பயிலும் குருக்களுக்கும் உரையாற்றினார். அப்போது, “யூபிலி ஆண்டு என்பது கிறிஸ்துவின் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் கருணை எனும் கொடை பற்றிய விழிப்புணர்வில் வளர வேண்டிய நேரம். ஆகவே, ஒவ்வொருவரும் தங்களது வாழ்வைக் கிறிஸ்துவின் இதயத்திடம் தொடர்ந்து ஒப்படைக்கவேண்டும். கிறிஸ்துவிடம் நெருங்கி வாருங்கள்; அப்போது அவரின் இரக்கத்தை உங்களாலும் உணர முடியும். இன்றைய சூழலில் நமது திரு அவை நற்செய்தி அறிவிப்பை மேம்படுத்துவதில், அருள்பணியாளர்கள், நம்பிக்கையாளர்கள் பயணத்தில் ஒன்றுபட்டிருப்பதையும், ஒரே இலக்கில் உறுதிபூண்டிருப்பதையும் காணமுடிகிறது. உங்கள் ஆயர்களுக்காகவும், மறைமாவட்ட அமைப்புகளுக்காகவும், வருங்காலத்தில் நீங்கள் பணிபுரிய உள்ள இடத்தில் வாழும் நம்பிக்கையாளர்களுக்காகவும் இயேசுவிடம் செபியுங்கள்” எனவும் கேட்டுக்கொண்டார்.