திருப்பலி முன்னுரை
அகில
உலகக் கத்தோலிக்கத் திரு அவையின் இருபெரும் தூண்களாகிய புனித பேதுரு, புனித பவுல் இவர்களின் விழாவினை இன்று நாம் கொண்டாடுகிறோம். மீனவரான பேதுரு இயேசுவால் நேரடியாக அழைக்கப்படுகிறார்; யூதச்சட்டங்களைக் கற்றுத் தேர்ந்தவரான பவுல், கிறித்தவர்களைச் சிறைப்பிடிக்க தமஸ்கு நகர் செல்லும் வழியில் உயிர்த்த இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்படுகிறார்.
பேதுரு யூத மக்களுக்கு மத்தியில் கிறிஸ்துவைப் போதிக்கிறார். பவுலடியாரோ பிற இனத்தாருக்கும் கிறிஸ்துவைக் கொண்டு செல்கின்றார். பேதுரு இயேசுவை “நீரே மெசியா, வாழும் கடவுளின் மகன்” என அறிக்கையிட்டார். பவுலடியார், “வாழ்வது
நானல்ல, கிறஸ்துவே என்னில் வாழ்கின்றார்” என்று
முழக்கமிட்டார். பேதுரு இயேசு கிறிஸ்துவுக்காகச் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு இரத்தம் சிந்தி உயிர்விடுகிறார். பவுலடியார் இயேசுவுக்காகத் தலை வெட்டப்பட்டு இரத்தம் சிந்தி உயிர்விடுகிறார். இருவரும் இரத்தம் சிந்தித் திரு அவையை வளர்த்தவர்கள். இந்நாளில் நாம் அனைவரும் இயேசுவின்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு வாழவும், இயேசுவை நம் வாழ்க்கையால் அறிவிக்கவும், இயேசுவுக்காக உயிரையும் கொடுக்கும் சீடத்துவ வாழ்வில் சிறக்கவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இயேசு
தம் பணிக்காகத் தேர்ந்துகொண்ட மக்களை ஒருநாளும் கைவிடமாட்டார். அவர்களுக்கு அரணாகவும் கோட்டையாகவும் இருந்து காத்திடுவார். தம் தூதர்களைக் கொண்டு அவர்களைத் தாங்கிடுவார் என்பதை எடுத்துக்கூறும் இன்றைய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
இன்றைய
இரண்டாம் வாசகம் நாம் எவ்வாறு வாழவேண்டும்? எதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்? என்பதையும், ஆண்டவருக்காக வாழும்போது அனைத்து வகையான அச்சத்தினின்றும் அவரே நம்மைக் காப்பார் என்பதையும்
தெளிவாக உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! திரு அவையின் மாபெரும் தூண்களாகிய புனித பேதுரு, புனித பவுல் இவர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், எம் திரு அவைத் தலைவர்களுக்காகச் செபிக்கிறோம். இவர்கள் நற்செய்தியைத் தொய்வின்றி அறிவிக்கவும், நம்பிக்கையில் நிலைத்துச் சிறந்த சீடர்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. இரக்கத்தின்
ஆண்டவரே! இத்திருப்பலியில் கலந்துகொண்டுள்ள எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். நற்செய்தி அறிவிப்பதில் புனிதர்கள் பேதுரு, பவுலைப் போன்று துணிவுள்ளவர்களாக வாழத் தேவையான மனவலிமையை எங்களுக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நம்பிக்கையின்
ஆண்டவரே! நாங்கள் அனைவரும் திருப்பலி, நற்கருணை ஆராதனை, அன்பியக் கூட்டங்கள் அனைத்திலும் தவறாது கலந்துகொண்டு, உடன் வாழும் மக்களுக்கு உயிருள்ள இயேசுவை அறிவிக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. பாதுகாக்கும்
ஆண்டவரே! இன்றைய புனிதர்களின் நாமத்தைத் தாங்கிய அன்பர்களையும் ஆலயங்களையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அனைவரையும் ஆசிர்வதித்து, இயேசுவின்மீது நம்பிக்கையில் வளரத் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.