மே 18, ஞாயிறு அன்று திரு அவையின் 267-வது திருத்தந்தையாகக் கர்தினால்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘14-ஆம் லியோ’ என்ற பெயரை ஏற்றிருக்கும் புதிய திருத்தந்தை அவர்களின் பணியேற்புச் சடங்கு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இவ்வழிபாட்டுச் சடங்கின்போது, தலைமைத்துவத்தின் அடையாளமாகப் புதிய திருத்தந்தைக்குப் பால்யம் மற்றும் ‘மீனவர் மோதிரம்’ எனப்படும் முத்திரை மோதிரம் வழங்கப்பட்டது. திருத்தந்தையின் பணியேற்பு விழாவில் உலகின் பல பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். ஏறக்குறைய 150 நாடுகளின் பிரதிநிதிகள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தனர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த அனைத்து மக்களின் பிரதிநிதியாகப் பன்னிரண்டு பேர் திருத்தந்தையைச் சந்தித்து வாழ்த்தினர்.