ஏப்ரல் 28 திங்கள்கிழமை ‘Sede Vacante’அதாவது தலைமைப்பீடம் காலியாக இருக்கும் காலம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் புதிய அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது வத்திக்கானின் தபால் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் அமைப்புகள் இயக்குநரகம். 266-வது திருத்தந்தையாக 12 ஆண்டு காலம் திரு அவையை வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஏப்ரல் 21 அன்று இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தை அடையாளப்படுத்தும் விதமாகப் புதிய தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. திருப்பீடத்தினை அடையாளப்படுத்தும் சின்னங்களும், திருத்தூதர் பேதுருவின் சாவியைத் தாங்கிய வண்ணம் வானதூதர்களும் இந்தத் தபால் தலையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். தபால் தலையின் மேல்பகுதியில் தலைமைப்பீடம் காலியாக இருக்கும் காலம் 2025 என்பதும், கீழ்ப்பகுதியில் வத்திக்கான் நகரம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.