திருஅவையை வழிநடத்தும் 267-வது திருத்தந்தையாக அகுஸ்தீன் சபையைச் சார்ந்த கர்தினால் Robert Francis, O.S.A. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Robert Francis Prevost என்னும் இயற்பெயர் கொண்ட கர்தினால் அவர்களைத் திரு அவையின் திருத்தந்தையாகக் கர்தினால் தோமினிக் மாம்பெர்தி அவர்கள் மே 8 வியாழன் மாலை 7.30 மணியளவில் வத்திக்கான் வளாகத்தின் மேல் மாடத்தில் இருந்து அறிவித்தார்.
வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக, மேல் மாடத்தில் தோன்றிய கர்தினால் தோமினிக் மாம்பெர்தி அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோவைச் சார்ந்த கர்தினால் Robert Francis Prevost அவர்கள் திருஅவையின் 267-வது திருத்தந்தையாகத் தேர்த்தெடுக்கப்பட்டு பதினான்காம் லியோ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அறிவித்தார். மக்கள் அனைவரும் இடைவிடாது கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர்.
1955
-ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அமெரிக்காவின் சிகாகோவில் இல்லினோய்ஸ் என்னுமிடத்தில் பிறந்தவர் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ.
2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 15, அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவரை கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், 2023, ஜனவரி 30, அன்று, ஆயர்களுக்கான திருப்பீடத்துறையின் புதிய தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமித்தார்.