“மானுடச் சமுத்திரம் நான் என்று கூவு” என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இந்த அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் தானாகப் பாவிக்கிறவனின் பாசக்குரல் இது. ‘நீ என்பது நீயல்ல; குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்தப் பூகோளத்திற்கே அந்த ‘நீ’ தான் பொறுப்பு’ என ஒவ்வொருவரையும் பொறுப்பாளர்களாக மாற்றும் வரிகள் இவை. ஆகவேதான் ஐயன் வள்ளுவரும், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்...’ என்று பல்லுயிர் நேயம் கொண்டிட வழிகாட்டினார்.
இன்று
அறிஞர்கள், உலகத் தலைவர்கள் கூடும் உலகளாவிய கருத்தரங்குகளின் கருப்பொருளாக இருப்பது இயற்கை நேயம் என்பதே. இன்றைய சுற்றுச்சூழலை எண்ணிப் பார்க்கும்போது, உலக அளவில் யாவரும் கவலை கொள்கிறோம். காலநிலை மாற்றம், வெப்பநிலை ஏற்றம் எனப் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் இன்றைய சூழலுக்கு முக்கியக் காரணம், இயற்கை வளங்களை முறையாகப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் தவறியதே!
இயற்கை
நமது இருத்தலுக்கான அடித்தளம். அது நமக்குச் சுத்தமான காற்று, நன்னீர், வளமான மண் என எல்லா வளங்களையும்
தருகிறது. ஆயினும், நாம் பொறுப்பற்ற முறையில் அதைச் சுரண்டி வருகிறோம்; இல்லை... சுரண்டி வாழ்கிறோம். “பூமி ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்யப் போதுமானதை வழங்குகிறது; ஆனால், ஒவ்வொரு மனிதனின் பேராசையும் அளவு கடந்திருக்கிறது; அது அழிவைத் தருகிறது”
என்னும் மகாத்மா காந்தியின் வரிகள் இங்கு நினைவு கூரத்தக்கவை.
ஆசை
அளவோடு இருப்பது நல்லது. அழகாக ஓடினால் ஆறு; அளவற்றுப் போனால் வெள்ளம். மிதமாக வீசினால் சுகம் தரும் தென்றல்; அதுவே ஓங்கி அடித்தால் சோகம் வளர்க்கும் சூறாவளி. சிறு நெருப்பு அடுப்பெரிக்கும்; அடங்காப் பெருநெருப்போ ஊரையே அழிக்கும். எல்லைக்குள் இருந்தால் எல்லாம் இன்பம்; எல்லை மீறினால் எதுவும் துன்பம்.
ஆசை
பேராசையாகப் பெருகும் போது ஒருவன் இருப்பதையும் இழந்து நிற்பான். மனிதன் இயற்கையோடு கொண்ட உறவின் இன்றைய சோக நிலை அதுவே. பேராசை கொண்ட போக்கில் அனைத்தையும் அபகரித்ததால் அழிவின் விளிம்பில் விழி பிதுங்கி நிற்கிறான்.
மனிதன்
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வரை இன்பமாக இருந்தான். என்றைக்கு அவன் இயற்கையைத் தீண்டத் தொடங்கினானோ அன்றிலிருந்தே அவனுக்கு இடையூறுகள் உண்டாகத் தொடங்கிவிட்டன. இயற்கையின் உறவு உண்மையானது; உன்னதமானது; ஆழமானது; சுயநலமற்றது.
“நீங்கள் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்”
என்று கூறுகிறார் இங்கிலாந்து நாட்டின் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜேன் குட்டால். ஆகவே, இயற்கையைப் பாதுகாக்க விரும்புகிறோமா அல்லது அழிக்க விரும்புகிறோமா என்பதை இன்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
உலகையே
அச்சுறுத்தும் இந்தக் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பல முன்னெடுப்புகள் பல வகைகளில்
மேற்கொள்ளப்படுகின்றன.
அவற்றில் ஒன்று மரம் நடுதல். எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழ்விடத்தையும்
உணவையும் தரும் மரங்கள் அதிக எண்ணிக்கையில் இன்று வளர்க்கப்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள பள்ளிகள் வழிகாட்ட வேண்டும். ஆனால், 2022-இல் ஐக்கிய நாடுகள் அவை நடத்திய ஆய்வில், 70 விழுக்காடு மாணவர்களிடையே காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பள்ளியின் மூலம் ஏற்படுத்தப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல, நூறு நாடுகளின் கல்விக் கொள்கைகளை ஆராய்ந்ததில், 47 விழுக்காடு கல்விக் கொள்கைகளில் காலநிலை மாற்றம் குறித்த பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
ஆகவே,
அங்கன்வாடி குழந்தைகள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை, இயற்கை சூழல் பற்றிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டியது இன்று அவசியமாகிறது. செடிகள் நடுவது, மரம் வளர்ப்பது, சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குவது, சூழலியல், நீதி, நிலையான வளர்ச்சித் திட்டக் கொள்கைகள் போன்றவற்றைக் குறித்த விழிப்புணர்வு கொடுப்பது, அதற்கு ஏற்ற செயல் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது போன்றவற்றைச் செய்திடல் வேண்டும்.
இத்திட்டங்கள்
பள்ளிகளில் தொடங்கி, நாளடைவில் அது வீடுகளில் மலர்ந்து சமூகத்தில் பரந்து விரிய வேண்டும். காய்கறித் தோட்டம், நீர் மேலாண்மை, நெகிழிக் குறைப்பு போன்றவற்றைக் கற்றுத்தரும் தமிழ்நாட்டின் பசுமை பள்ளித் திட்டம் எல்லாப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஆகவேதான், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மரம் நடும் இயக்கங்களைத் தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும் என்ற குரல்கள் இன்று எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
நாளைய
உலகின் சிற்பிகள் மாணவர்களே! ஆகவே, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் மாணாக்கர்களும் இன்று முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கங்களில் பங்கெடுத்தல், தூய்மை இயக்கங்களை ஏற்பாடு செய்தல், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு கொடுத்தல், அதற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுத்தல் என மாணவர்கள் இந்தக்
கோடை விடுமுறையைப்
பயனுள்ள வகையில் செலவிட வேண்டும். இப்பூமிப்பந்தில் யாவரும் நலமுடனும் வளமுடனும் வாழ நம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
இயற்கை
நேயம் கொள்வோம்!
இனிய
உலகம் காண்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்