நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைப் பற்றிய தரவுகளைக் கொடுக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு நற்செய்தியாளரும் தனித்துவமான விவரங்களையும் கண்ணோட்டங்களையும் வழங்குகின்றனர். குறிப்பாக, யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் விலாப்பகுதியில் குத்தப்பட்ட நிகழ்வைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் (யோவா 19:31-37). கூடுதலாக, உயிர்த்தெழுந்த ஆண்டவர் தம்முடைய சீடர்களுக்குத் தம் கைகள், கால்கள் மற்றும் விலாவைக் காட்டி, அந்தக் காயங்களைத் தொடும்படி அவர்களை அழைப்பது (லூக் 24:39) மற்றும் இயேசுவின் ஐந்து மகிமையான காயங்களின் முக்கியத்துவத்தை (யோவா 20: 20,27) மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் காயங்களைப் பற்றித் தியானிப்பது நமது நம்பிக்கையையும் ஆன்மிகத்தையும் ஆழப்படுத்தும்.
ஐந்து மகிமையான
காயங்களுக்கான
காரணங்கள்
புனித
தாமஸ் அக்குவினாஸ் ஐந்து மகிமையான காயங்களுக்கான ஐந்து காரணங்களை விளக்குகிறார்:
• ஐந்து மகிமையான காயங்கள் இயேசு கிறிஸ்துவின் மகிமையைக் குறிக்கின்றன. புனித பீட் (St. Bede) கூறுவார்:
“கிறிஸ்து தமது காயங்களைத் தக்க வைத்துக்கொள்வது, அவற்றை அவரால் குணப்படுத்த முடியாது என்பதால் அல்ல; மாறாக, அவர் அவற்றை அவரது வெற்றியின் நிலையான கோப்பையாக அணிந்திருக்கிறார்.”
• இயேசுவின் மகிமையான காயங்கள் திருத்தூதர்களின் இதயங்களை வலுப்படுத்தி, அவருடைய உயிர்த்தெழுதலில் அசைக்க முடியாத நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது (லூக் 24:40).
• அவருடைய மகிமையான காயங்களைத் தந்தையாகிய கடவுளிடம் ஒப்படைத்து, நமக்காகத் தொடர்ந்து பரிந்துபேசுகிறார் என்பதன் அடையாளம்.
•
மகிமையான காயங்கள் அவருடைய இரத்தத்தில் மீட்கப்பட்டவர்கள் எந்தளவு இயேசுவின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
• இந்த மகிமையான காயங்கள் மூலம் இறுதித் தீர்ப்பில் நம்பிக்கையற்றவர்களுக்குக் கிடைக்கும் நியாயமான கண்டனத்தின் அடையாளம்.
ஐந்து மகிமையான
காயங்களைப்
பற்றிய
சிந்தனைகள்
1. ‘வலது கரத்தின் காயமே...
அழகு
நிறைந்த
இரத்தினமே...
அன்புடன்
முத்தி
செய்கிறேன்’
ஆற்றல்,
மரியாதை மற்றும் செல்வாக்கைக் குறிப்பது வலது கரம். திருமணத்தில் வலது கரம் பிடித்தல், வலது கரத்தினால் ஆசிர்வாதம் செய்தல், கொடுத்தல் என்பதன் சிறப்பு அம்சங்கள் யாவரும் அறிந்ததே. எது இயேசுவின் வலது
கரத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறது? பணிவு இல்லாத ஆற்றல் - Power without service. நமது
ஆற்றலை அல்லது அதிகாரத்தைச் சுய இலாபத்திற்காக அல்லது சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது இயேசுவின் வலது கரத்தைக் காயப்படுத்துகிறது. திருவிவிலியத்தில் சிறந்த உதாரணம்: நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன்னுடைய ஆற்றலால் பறிக்க நினைத்த ஆகாபு அரசன்.
நாபோத் தன் திராட்சைத் தோட்டத்தைக் கொடுக்காததற்கு இரண்டு காரணங்கள்: 1) மூதாதையரின் உரிமைச் சொத்தை விற்பது ஆண்டவரின் விருப்பத்திற்கு எதிரானது.
2) சட்டப்படி
அவருடைய சொத்தை விற்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், ஆகாபு செய்தது என்ன? நாபோத் இறந்து போனதைக் கேட்டு அவருடைய திராட்சைத் தோட்டத்தைத் தன்னுடைய உடைமையாக்கிக்கொள்ளப் புறப்பட்டுப் போனான் (1அர 21:16). ஆகாபின் இறுதி நிலை யாவரும் அறிந்ததே (1அர 22:38).
2. ‘இடது கரத்தின் காயமே,
கடவுளின்
திரு அன்புருவே...... அன்புடன்
முத்தி
செய்கிறேன்”
வலது
கரம் பலத்தைக் குறிக்கிறது எனில், இடது கரம் பலவீனத்தை, வலுவின்மையைக் குறிக்கும்.
புனித பவுல் ஊனியல்பின் செயல்பாடுகளைப் பட்டியலிடுவார்: “பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும்”
(கலா 5:19-21). என் பலவீனம் அல்லது வலுவின்மை என்ன? சினம் கொள்ளுதலா? பழிவாங்கும் எண்ணமா? மன்னிக்க இயலாத நிலையா? எது இயேசுவின் இடது
கரத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறது? நம் வலுவின்மை அல்ல; மாறாக, நம் வலுவின்மை எதிர்நோக்கு இல்லா வலுவின்மையாக (Weakness without hope) மாறும்பொழுது,
ஆண்டவருடைய இடது கரத்திற்குக் காயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
• புனித பவுலின் வலுவின்மை, தன் உடலில் தைத்த முள்போல் தன்னை வருத்திக் கொண்டிருந்த ஒன்று. அதை நீக்கியருளுமாறு மூன்று முறை கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால், ஆண்டவர் அதை எடுத்துவிடவில்லை; மாறாக “என் அருள் உனக்குப் போதும்” எனக் கூறி அந்த வலுவின்மையை வல்லமையாக மாற்றுகிறார் (2கொரி 12:7-10).
• பேதுருவின் வலுவின்மை ஆண்டவரை மூன்று முறை மறுதலித்தல்; யூதாசின் வலுவின்மை ஆண்டவரைக் காட்டிக்கொடுத்தல். இதில் வேறுபாடு என்னவென்றால், தன் வலுவின்மையிலிருந்து வல்லமை பெற ஆண்டவரைத் தேடினார் புனித பேதுரு. ஆனால், யூதாஸ் வலுவின்மையில் தன்னை மட்டுமே தேடினான். அதன் விளைவு நாம் அறிந்த
ஒன்றே.
3. ‘வலது பாதக் காயமே,
பலன்
மிகத்
தரும்
நற்கனியே.......
அன்புடன்
முத்தி
செய்கிறேன்’
வலது
பாதம் என்பது நீதியை நிலைநாட்ட ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கும். எது இயேசுவின் வலது பாதத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறது? இரக்கமற்ற
நீதி (Justice Without Mercy). நீதி
மறுக்க முடியாத அளவுக்கு இன்றியமையாதது என்றாலும், “இரக்கமற்ற நீதி கொடுமை” என்று புனித தாமஸ் அக்குவினாஸ் வேதனையுடன் குறிப்பிடுகிறார். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணின் கதையில் நீதியைத் தாண்டிய இரக்கத்தின் ஆழமான விளக்கத்தைக் காணலாம் (யோவா 8:1-11). ஒருபுறம் நீதியின் பாதுகாவலர்களாகத் தங்களையே முன்னிறுத்தும் மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் மோசேயின் சட்டத்தை நிலைநிறுத்த இரக்கமற்ற நீதியின்பால் நிற்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, வெறும் நீதியின் வரம்புகளைக் கடந்து இரக்கத்தின் உருவகமான இயேசு மறுபுறம் நிற்கிறார். இறுதியில் வென்றது இரக்கத்தையும் மனிதாபிமானத்தையும் புதைக்கும் நீதி அல்ல; மாறாக, நீதியைத் தாண்டிய இரக்கம்: “நீர் போகலாம்.”
4. ‘இடது பாதக் காயமே,
திடம்
மிகத்
தரும்
தேனமுதே.......
அன்புடன்
முத்தி
செய்கிறேன்”
இடது
பாதம் என்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறித்தவர்களின் சாட்சிய வாழ்வை முன்னிலைப்படுத்துகிறது. யோசுவாவின் யாவே இறைவனைக் குறித்த சாட்சியம் சிறந்த உதாரணம்: “ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால், நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்”
(யோசுவா 24:15). எது இயேசுவின் இடது பாதத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறது? சான்றுபகராக் கிறித்தவ வாழ்வே! (Christian life without witness).
• திருத்தூதர் பணிகள் 1:8 - “நீங்கள் என் சாட்சிகள்.”
• யோவான் 1:1 - “நாங்கள் கண்ணால் பார்த்ததை, தொட்டு உணர்ந்ததை அறிவிக்கிறோம்.”
திருத்தந்தை
பிரான்சிஸ் கூறுகிறார் “Not I have a mission, but I am the mission.” நானே ஒரு நற்செய்திப் பணியாக மாற வேண்டும். எப்பொழுதெல்லாம் கிறித்தவ வாழ்க்கை சாட்சிய வாழ்க்கையாக இல்லையோ, அப்பொழுதெல்லாம் இயேசுவின் இடது பாதத்தில் காயத்தை உண்டாக்குகிறோம்.
5. ‘திருவிலாவின் காயம் அருள்
சொரிந்திடும்
ஆலயமே.......
அன்புடன்
முத்தி
செய்கிறேன்’
இயேசுவுக்கு
ஏற்பட்ட காயங்களில் மிகப்பெரிய காயம் திருவிலாவின் காயம். இயேசு தோமாவிடம் “இதோ! என் கைகள்! இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார்
(யோவான் 20:27). இயேசு தோமாவைப் பார்த்து விரலை அல்ல, கையை நீட்டி ‘என் விலாவில் இடு’ என்கிறார். ஒருவேளை கை செல்லும் அளவுக்கு
அந்தக் காயம் பெரியதாக இருந்திருக்கும். எது இயேசுவின் திருவிலாக் காயத்தைக் கொடுக்கிறது? விண்ணகம் இல்லா மண்ணக வாழ்வு - Earth without heaven.
எப்பொழுதெல்லாம் நாம் வாழ்கின்ற மண்ணக வாழ்வு விண்ணகத்தை நோக்கியப் பயணமாக இல்லாமல் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் ஆண்டவருக்கு மிகப்பெரிய காயத்தினைக் கொடுக்கிறோம். “நீங்கள்
இயேசு கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தீர்கள் என்றால், மேல் உலகில் உள்ளவற்றை நாடுங்கள்”
(கொலோ 3:1).
ஒரு
பங்கில் 40 நாள் தவக்காலத்தை எப்படிச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதைப் பற்றிய குறிப்பு: அலைப்பேசியின்றி 20 நாள்கள், புறணி பேசாமல் 20 நாள்கள். நாமும் முயற்சி செய்யலாமே?
“அவர்தம் காயங்களால் குணமடைந்துள்ளோம்” (1பேதுரு
2:24).
இதில்
நகைமுரண் என்னவென்றால், அவருடைய காயத்திற்குக் காரணம் நாம். நம்மால் தான் அவருக்கு அவ்வளவு காயங்கள் உண்டாயின. எந்தக் காயத்தை நாம் அவருக்குக் கொடுத்தோமோ, அதே காயங்களின் வழியாக நம் காயங்களைக் குணமாக்குகின்றார்.
• என் உடல், உள்ளம் சார்ந்த நோய்களைக் குணமாக்குகிறார். எப்படி? 1பேதுரு 1:18-19 - “உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசுமருவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்.”
• என் வாழ்க்கையில் உடல் - உள்ளம் சார்ந்த காயங்கள், தழும்புகள் இருக்கின்றன என்றால், அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைய வேண்டும், பெருமை கொள்ள வேண்டும். ஏனெனில், ‘என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவின் அடிமை என்பதைப் பறைசாற்றும்’ (கலா
6:17).
இறுதி
நாளில் ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்கக்கூடிய ஒரே கேள்வி: ‘உன் தழும்புகள் எங்கே?’ (where are your
wounds)).