news-details
சிறப்புக்கட்டுரை
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை

அன்புடையீர்! வணக்கம்.

கடந்த 2013-ஆம் ஆண்டுபிரான்சிஸ்என்ற பெயரில் ஒரு போப் ஆண்டவர் கத்தோலிக்கக் கிறித்தவத் தலைமைப் பொறுப்பை அலங்கரிக்கப் போகிறார் என்றவுடன், ஒட்டுமொத்த உலகமும் வத்திக்கானைத் திரும்பிப் பார்த்தது.

இன்னார், இன்ன கருத்தைச் சொன்னார் என்று ஒரு பெயரைக் குறிப்பிடுவோம். ஆனால், தன் பெயரைக் குறிப்பிடுவதிலேயே ஒரு கருத்தைப் பதிவு செய்தவர் மரியாதைக்குரிய போப் பிரான்சிஸ் அவர்கள். எளிமை, தாழ்ச்சி, இரக்க குணம், அன்பு, மனிதநேயம் அத்தனைக்கும் சொந்தக்காரரான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்கள் 2025, ஏப்ரலில் தன்னுடைய மேல் உலகப் பயணத்தை மேற்கொண்டார் என்றதும், இங்குத் தங்கி நிற்கும் நாம் தயங்கி நிற்கிறோம். இனி வழிகாட்ட யார்?

அம்மையே மகவே வாய்ந்த   

                வருந்தவத் திறைவ சூசை

நும்மையே யுயிரென்றாக

                நுதலிநுந் நிழலில் வாழ்ந்த

நம்மையே யகன்று போதீர்

                நட்பிடை யகலா தன்பின்

செம்மையே பேண்மி னென்னாச்

                சென்றுமீண் டெவரும் போனார் - தேம்பாவணி

ஒவ்வோர் உயிரின் மரணத்தின் போதும் நிலையாமையை நாம் உணர்ந்து கொள்கிறோம். எனினும், நிலையாத இந்த வாழ்வை கொண்டு இறைநெறியை, எளியோரின் நல்வாழ்வுக்கான சாத்தியக்கூறுகளை நிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சித்தவர்களைப் பிரியும் போதுமனிதநேயத்தின் நுரையீரல்வலிக்கிறது.

வெந்திறல் கூற்றம் பெரும்பே துறுப்ப

எந்தை ஆகுதல் அதற்படல் அறியேன்;

அந்தோ அளியேன் வந்தனென் மன்ற;

என்னா குவர்கொல் எற்றுன்னி யோரே;

மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்

ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்

கண்ணில் ஊமன் கடற்பட் டாங்கு...’-புறநானூறு-238

இந்த நேரத்தில் தேவையான ஆறுதலையும் தேறுதலையும் இறைவன் நம் அனைவருக்கும் அளிப்பாராக என்று பிரார்த்திப்போம்.

ஏழைகளை நாம் கௌரவப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். அவர்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனிதர்கள் தன்னலம் பார்ப்பதைவிட, பிறர் நலம் பார்க்க வேண்டும். “ஒரே ஒரு பயம் இருக்கட்டும்; ஏழைகளை நாம் அலட்சியப்படுத்தினால் கடவுளின் அன்பைப் புண்படுத்துவதாகும், காயப்படுத்துவதாகும். ஏழைகளை இயேசு  நேசிக்கிறார். தேவை உள்ளவர்களிடம் இயேசு இருக்கிறார் - இது 2021-ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விழாவில்  திருத்தந்தை போப் பிரான்சிஸ்  அவர்களின் உரை.

நடக்க இயலாத போதும் நல் எண்ணத்தால் எழுந்துவிடலாம். ஆனால், கண்கூடாகப் பாதிக்கப்பட்ட பிறருக்கு உதவாதபோது, எப்பேர்பட்ட செல்வந்தனாகவோ அறிவாளியாகவோ பலசாலியாகவோ இருந்தாலும், ஒரு மனிதன் முடங்குகிறான்.

நேயத்தே என்ற நிமலன் அடிபோற்றி!’ என்றார் மாணிக்கவாசகர். தான் மனிதநேயத்தோடு நடந்துகொள்வது என்பதைக்காட்டிலும், தன்னைப் போல எல்லாரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வாழ்ந்து காட்டுவது அரிது.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன் (குறள் 996)

2025, ஈஸ்டர் விழாவில் ஆயிரக்கணக்கான கிறித்தவ மக்களிடையே உரையாற்றும்போது திருத்தந்தை அவர்கள் கூறிய கருத்து பின்வருமாறு:

உலக நாடுகளுக்குள் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். போர் என்பது மனிதநேயத்தின், மனித குலத்தின் தோல்வி. எனவே, அமைதியை ஏற்படுத்த வேண்டும்.”

அன்பர்களே! இந்தச் செய்தியைக் கூர்ந்து கவனியுங்கள். ஒருவர் கடைசியில் எதைக் கூறினார் என்பதல்ல; கடைசி வரைக்கும் எதைக் கூறினார் என்பதில்தான் அவரது கொள்கை நிலைத்து நிற்கிறது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள் (மத் 13) என்று திருவிவிலியம் அறிவிக்கிறது.

தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலிருந்து திருக்கருகாவூர் வரும் வழியில்மறுபிறவி மர இழைப்பகம்என்கின்ற ஒரு பெயர்ப் பலகையைப் பார்த்தேன். சிந்தனையைத் தூண்டியது. மரம் குறித்தான இருவேறு பார்வைகள் உள்ளன. புனிதமானது பயனுடையது என்றாலும், உபயோகம்  இல்லாமல் நிற்பவர்களைமரம்போல் நிற்கிறாயே...’ என்பது உலக வழக்கு. விளைந்த மரங்களை அறுத்து முறைப்படுத்தி, பலகைகளாக்கி கதவு, ஜன்னல், நிலைகள் எனக் கட்டுமானங்களுக்கும், கோவில்களில் இறைவன் எழுந்தருளும் வாகனம், தேர் எனவும் பல்வேறு வகைகளில் பயன்படுத்துகிறோம். மரங்கள் பயன் மரங்களாய் மறுபிறவி எடுக்கிறது பாருங்கள். இதைத்தான், ‘மறுபிறவி மர இழைப்பகம்என்னும் பெயர் குறிக்கிறது என்று நினைக்கிறேன். புரிந்துகொள்வோம்; விதையாவோம்; மரமாவோம்; பயனளிப்போம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைப்பணிக்கும் மனிதநேய மாண்புக்கும் தலை வணங்குகிறேன்.