news-details
சிறப்புக்கட்டுரை
பொது வீட்டுச் சிந்தனைச் சிற்பி!

மது வாழ்வுஉறவு, ‘உலகுஎனும் இரு கூறுகளின் சங்கமத்தில்இருத்தல்கொண்டது. இவ்விரு தளங்களையும் ஒழுங்குபடுத்தும் போதும் அவற்றை நேரிய வழியில் பேணிக்காக்கும் போதும் இறைவனின் ஒட்டுமொத்தப் படைப்பும் பேருவகை கொள்ளும். இப்பேருண்மையை உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், தனது பணிக்காலத்தின் முதல் நாள் தொட்டு, இறுதி மூச்சு வரை அதைத் தன் போதனையாகவே கொண்டிருந்தார். காலம் கரைந்தாலும், கனவுகள் சிதைந்தாலும் திருத்தந்தையின் சிந்தனைக் கதிர்கள் அதிர்வலைகளை இனி எப்போதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதே என் நம்பிக்கை.

அக்கறைஎன்பது உறவின் மீதும் உலகின் மீதும் நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய வாழ்வியல் நியதி. Man is not only a rational being, but also a relational being. உறவுச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதும், உலகு எனும் பொது இல்லத்தைக் கட்டியெழுப்புவதும் நமது இயல்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும் என்னும் அவருடைய சிந்தனையை இவ்வுலகோருக்கு வாழ்வியல் சிந்தனையாக விட்டுச் சென்றிருக்கிறார்.

நாம் வாழும் இவ்வுலகின் மீது அக்கறை கொள்வது நம்மீதே நாம் கொள்ளும் அக்கறையாகும்எனக் குறிப்பிடும் திருத்தந்தை, “நாம் அனைவரும் இவ்வுலகின் பொது இல்லத்தில் (common home) வாழும் ஒரே குடும்பத்தினர் எனச் சிந்திப்பது அவசியமானதொன்றுஎனவும் வலியுறுத்துகிறார்.

நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு மறைந்து வரும் இன்றைய உலகில், நீதி மற்றும் அமைதிக்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்ஆகவே, ஏமாற்று மாயையின் பின்னணியில் பிறக்கும் பாராமுகமாய் உலகமயமாக்கப்பட்ட, நேச உணர்வற்ற அலட்சியப் போக்கினால் அனைவரும் சக்தி வாய்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம் என்பதை உணரத் தவறி விடுகின்றோம்.

ஒவ்வொரு மதமும், கடவுளின் குழந்தையாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் மீது கொண்ட மரியாதையின் அடிப்படையில் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் சமூகத்தில் நீதியைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வழிகாட்டுகிற திருத்தந்தை, சகோதரத்துவம் மற்றும் சமாதானத்தை நோக்கியப் பயணத்தில் அடிப்படை மனித உரிமைகள் மறக்கப்படக்கூடாது என நினைவூட்டினார். இதுவே பல்வேறு கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்கக்கூடியது.

ஆகவேதான், திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்நாள் முழுவதும் இறையரசின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான அறைகூவலை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தார்எனவே, “மனிதர் அனைவரையும் உரிமைகள், கடமைகள் மற்றும் மாண்பில் சமமாக உருவாக்கி, அவர்களைச் சகோதர, சகோதரிகளாக ஒன்றாக வாழவும், உலகை நிரப்பவும், நன்மை, அன்பு மற்றும் அமைதி ஆகியவற்றின் மதிப்புகளை அறியவும் கடவுளே நம்மை அழைத்துள்ளார்என வேண்டுகிறார்இத்தகைய கொள்கையில், கருத்தியலில், வாழ்வியலில் உறுதியான நிலைப்பாடு கொண்டதால்தான், “ஒருவரைக் கொல்பவன், முழு மனிதகுலத்தையும் கொல்பனைப் போன்றவன்; ஒரு நபரைக் காப்பாற்றுகிறவன், முழு மனிதகுலத்தையும் காப்பாற்றுகிறவனைப் போன்றவன்என அவரால் உறுதிபடக் கூறமுடிந்தது.

ஆகவே, ஏழைகள், ஆதரவற்றவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிகவும் தேவையிலிருப்பவர்கள், அனாதைகள், விதவைகள், அகதிகள், வீடுகளிலிருந்தும் நாடுகளிலிருந்தும் நாடு கடத்தப்பட்டவர்கள், போர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், அநீதிகளால் பாதிக்கப்பட்ட அனைவரின் பெயரால் பலவீனமானவர்கள், பயத்தில் வாழ்பவர்கள், போர்க் கைதிகள் மற்றும் உலகின் எந்தப் பகுதியிலும் சித்திரவதை செய்யப்பட்டவர்கள்... எப்போதும் அவர் கண்முன் நின்றனர். எனவே, அவர்களின் பாதுகாப்பை, அமைதியை மற்றும் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்பை உறுதி செய்து, எல்லாரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்லும் புது சமுதாயத்தைக் காண வழிகாட்டினார்.

அமைதியில் மலரும் கலந்துரையாடலே இத்தகைய விடியலுக்கான விடிவெள்ளி என்பதை உணர்ந்தவர். உரையாடல் கலாச்சாரத்தைப் பாதையாகவும் பரஸ்பர ஒத்துழைப்பை நடத்தை நெறிமுறையாகவும் ஒருவருக்கொருவர் இடையேயான புரிதலை வழியாகவும் தரச்சான்றாகவும் அறிவித்துள்ளார்.

சுருங்கக்கூறின், உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்துவதன் வாயிலாக உலகோடு உறவையும், உலகின் படைப்பனைத்தோடும் நல்லிணக்கத்தையும் இரு கண்களாக அவர் கொண்டிருந்தார்; நம்மையும் அவ்வாறே கொண்டிருக்க அழைத்தார். உலகோர் அனைவருக்கும் சகோதரனாக விளங்கிய அவர், இறுதிவரை இந்தபிரபஞ்சத்தின் சகோதரனாகவேவாழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை!

ஆகவே,… “ஆண்டவரே, மாந்தர் அனைவரின் தந்தையே, நீர் மனிதர் அனைவரையும் ஒரே மாண்புடன் படைத்துள்ளீர்; ஒரு சகோதரத்துவ ஆவியை எங்கள் இதயங்களில் ஊற்றவும் புத்துணர்வுப் பெற்ற உரையாடல், நீதி மற்றும் அமைதி குறித்தக் கனவை எங்களுக்குள் ஊக்குவித்தருளும். மேலும், கண்ணியமான உலகத்தை, பசி, வறுமை, வன்முறை மற்றும் போர் இல்லாத ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்க எங்களையே நாங்கள் மாற்றிட அருள்புரியும். எங்கள் இதயங்களைப் புவியின் எல்லா மக்களுக்கும் தேசங்களுக்கும் திறந்திருக்கச் செய்யும். நீர் எங்கள் ஒவ்வொருவரிடமும் விதைத்துள்ள நன்மையையும் அழகையும் அடையாளம் காணவும், இதன் மூலம் ஒற்றுமையையும் பொதுவான திட்டங்களையும் கனவுகளையும் பகிர்ந்திடச் செய்தருளும்.

உம் இறைமையின் ஆழமான ஒற்றுமையிலிருந்து, சகோதர அன்பினால் எங்களை நிரப்பும். நாசரேத்தின் குடும்பத்தில், தொடக்ககாலக் கிறித்தவச் சமூகத்தில், இயேசுவின் செயல்களில் பிரதிபலித்த அன்பை எங்களுக்கும் தாரும். கிறித்தவர்களாகிய நாங்கள் நற்செய்தியை வாழ்வாக்கவும், ஒவ்வொரு மனிதனிலும் கிறிஸ்துவைக் காணவும், கைவிடப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் படுகின்ற துன்பங்களில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையும், ஒரு புதிய தொடக்கம் காணும் ஒவ்வொரு சகோதர, சகோதரியிலும் உயிர்த்த இயேசுவையும் கண்டடையும் அருள்தாரும்.

வாரும் தூய ஆவியே! புவியின் எல்லா மக்களிலும் பிரதிபலிக்கும் உம் அழகை எங்களுக்குக் காட்டும். இதனால் அனைவரும் முக்கியமானவர்கள், அவசியமானவர்கள், கடவுள் அதிகம் அன்பு செய்யும் மனித குலத்தின் வெவ்வேறு முகங்கள் என்பதை நாங்கள் அறியச்செய்யும்!” எனFratelli tutti’ (‘சகோதரத்துவமும் சமூக நீதியும்) என்ற தனது திருத்தூது மடலில் அவர் தரும் செபம் என்றென்றும் நம் வாழ்க்கைப் பாடமாகட்டும்.