ஒருவருடைய சிந்தனையும் சொல்லும் செயலுமே அவரின் தரத்தை வரையறுக்கின்றன. எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை இவ்வுலகம் ‘அவர்கள் தெய்வப் பிறவிகள்’ என்றே அழைக்கிறது!
ஆகவே,
உயர்ந்த வாழ்க்கை வாழும் மனிதர்கள் தெய்வமாக அனைவராலும் மதிக்கப்படுகிறார்கள். ஆயினும், உயர்ந்த சிந்தனைகள் ஏதுமின்றி, தரமற்றச் சொற்களையும் தவறான செயல்களையும் கொண்ட மனிதர்கள் ‘விலங்கு’ வாழ்க்கையே வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது கம்பராமாயணம். ‘இது சரி, இது தவறு’ என்று சிந்திக்காமல், மனத்திற்குத் தோன்றியபடி வாழ்கின்ற மக்கள் விலங்குகள் ஆகிவிடுகிறார்கள் என்றும், மறுபுறம் நெறிபிறழாமல் வாழ்வது, ஒரு விலங்காக இருந்தாலும் அது தெய்வ நிலையை அடைகிறது என்றும் விளக்கம் அளிக்கிறது கம்பனின் கவிதை.
‘தக்க இன்ன, தகாதன இன்ன என்று
ஒக்க
உன்னலர் ஆயின், உயர்ந்துள
மக்களும்
விலங்கே, மனுவின் நெறி
புக்க
வேல், அவ்விலங்கும் புத்தேளிரே’
ஒருவர்
பேசும் சொற்கள்... நெறியாகவும் அளவாகவும் உரமாகவும் வரமாகவும் அறமாகவும் தரமாகவும் நாணயமாகவும் நாணமாகவும் கற்பாகவும் கலையாகவும் காமக்கூறுகளைக் களைந்ததாகவும் இருக்க வேண்டும் என்கிறது செம்மொழிச் சிறப்புக் கண்ட தமிழ் இலக்கியம். அதுதான் எவர் மனத்தையும் புண்படுத்தாத உறவை, சமூகத்தை, உலகைக் கட்டமைக்கும்.
பிறர்
மனத்தைப் புரிந்துகொண்டு, மதிப்பளித்து, அதற்கேற்ப தாம் பேசுவது, செயல்படுவது என வரையறை கொண்டு
வாழ்கின்ற சக மனிதர்களை ‘மேன்மக்கள்’ என்றே
இச்சமூகம் அடையாளப்படுத்துகிறது. இலக்கியத்திலும் சங்க காலத்திலும் வாழ்ந்த இப்பேராளுமைகளும் மேன்மக்களும், நாம் வாழும் இச்சமூகத்திலும் உலா வருவது இச்சமூகம் கண்ட, கொண்ட பெரும் வரமே!
ஒரு
குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மானுடச் சமூகத்தின் மேன்மைக்கும் உரமாகவும் வரமாகவும் அமைவது - மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம். இவை மூன்றுமே ஊடகமாக வெவ்வேறு தளங்களில் தனித்தும் இணைந்தும் பயணித்தாலும் முன்னிருக்கும் மூத்த ஊடகம் ‘மொழியே!’
மொழியும்,
மொழிக்கு வளம் சேர்க்கும் சொற்களும், சொற்களுக்கு வலிமை சேர்க்கும் உடல்மொழிக் கூறுகளும் ஒரு சமூகத்தின், பண்பாட்டின் அளவுகோலாகக் கணிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று தளர்ந்தாலும், பண்பாட்டின் மேன்மையும் மாண்பும் சிறுமைப்படுத்தப்படும்; நாகரிகமும் பண்பாடும் அற்ற அநாகரிகச் செயலாகவே அது அடையாளப்படுத்தப்படும். எனவே, தகுந்த இடத்தில், தகுந்த வார்த்தைகளை, தகுந்த உடல்மொழிக் கூறுகளோடு வெளிப்படுத்துவதே கற்றறிந்தோரின் அறமாகும். இங்கு உடல்மொழிக் கூறுகளும் வாய்மொழிச் சொற்களும் அறம் தவறாது இணைந்து பயணிக்க வேண்டும்.
உடல்மொழி
என்பது முகபாவனைகள், சைகைகள் மற்றும் தோரணைகள் போன்ற உடல் நடத்தைகளைப் பயன்படுத்தி வாய்மொழியாகத் தொடர்பு கொள்வதைக் குறிக்கிறது. இது உணர்ச்சிகள், மனப்பான்மைகள் மற்றும் நோக்கங்களைப் பெரும்பாலும் அறியாமலேயே வெளிப்படுத்தக்கூடிய ஒரு சக்திவாய்ந்த தகவல்தொடர்பு வடிவமாகும்.
உடல்மொழி,
வார்த்தைகளை விட உணர்ச்சிகள், நோக்கங்கள் மற்றும் மனப்பான்மைகளை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்துவதால், பயனுள்ள தகவல் தொடர்புக்கு மிகவும் முக்கியமானதாகிறது. உடல்மொழியைப் புரிந்துகொள்வதும் பயன்படுத்துவதும் ஒருவர் மற்றவர் மேல் கொண்ட நல்லுறவை மேம்படுத்துகிறது; நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் தொடர்புகளில் தெளிவை மேம்படுத்துகிறது. இது கலாச்சாரங்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்கப் பங்காற்றுகிறது.
நேர்மறையான
உடல்மொழி, மற்றவர்களுடன் நல்லுறவையும் நம்பிக்கையையும் வளர்க்க உதவும். மேலும், உடல்மொழி என்பது தகவல் தொடர்புகளின் ஒருங்கிணைந்த ஒன்றாகும்; இது வாய்மொழிச் செய்திகளுக்கு ஆழத்தையும் அர்த்தத்தையும் சேர்க்கிறது. அவ்வாறே, வார்த்தைகளால் மட்டும் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளையும் நோக்கங்களையும் வெளிப்படுத்த இது உதவுகிறது. உடல்மொழியைப் புரிந்துகொள்வதும், திறம்படப் பயன்படுத்துவதும் மேம்பட்ட தகவல்தொடர்பாகும். இத்தகைய வலுவான உறவுகள் நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கும்.
அண்மைக்
காலங்களில் சட்டமன்றத்திலும் அரசியல் மேடைகளிலும் பொதுவெளிகளிலும் அரசியல் தலைவர்களின் உடல்மொழிக் கூறுகளும் வாய்மொழிச் சொற்களும் அருவருக்கத்தக்கவையாக அமைகின்றன. தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்ற அமர்விலே வெளிநடப்புச் செய்தபோது அமைச்சர்களின் உடல்மொழிக் கூறுகளும், அண்மையில் மூத்த அரசியல் தலைவர்களின் சர்ச்சைக்குரிய அநாகரிக மேடைப் பேச்சுகளும், சமநீதி, சமூக நீதி எங்கும் முழக்கம் பெறும் இச்சூழலில், சமத்துவம் மற்றும் பெண்ணிய மாண்பு முன்வைக்கப்படும் அரசியல் தளங்களில் ஆணாதிக்க மனநிலையோடு ஒருவர் கருத்துகளைப் பகிர்வதும் இரு பொருள் கொண்ட அநாகரிகச் சொல்லாடல்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.
மாற்றுத்திறனாளிகள்,
கைம்பெண், திருநங்கை, திருநம்பி, மூன்றாம் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்கள்... எனப் புதிய சொல்லாடல்கள் மதிப்புமிக்க வார்த்தைகளாகச் சமூகத்தில் உலா வரும் இச்சூழலில், சில அருவருக்கத்தக்க வார்த்தைகள் அரசியல் தளங்களில் எதிரொலிப்பது, இன்னும் சமூகம் விழிப்படையவில்லையோ? அது தன்னை இன்னும் இச்சமூகம் புடமிட்டுக்கொள்ளவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
“கழக நிர்வாகிகள், மூத்தவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் பிறரைச் சிறுமைப்படுத்துவது போல ஆகிவிடக் கூடாது; பொது இடங்களில் சிலர் நடந்துகொள்வது விமர்சனத்திற்கு உள்ளாகி விடுகிறது. ஆகவே, அனைவரிடத்திலும் ‘நாவடக்கம்’
என்பது பேணப்பட வேண்டும்”
என அவ்வப்போது தமிழ்நாடு முதல்வர் தன் கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தி வருவதும் இங்கு நினைவுகூரத்தக்கதே.
“நாவடக்கமின்றிப் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இப்படி வார்த்தைகளை உதிர்ப்பது, ஒரு மனிதனின் மனத்தில் இருக்கும் குரூர வக்கிரத்தின் உச்சக்கட்டம்; இத்தகைய பேச்சுகள் அநாகரிகமானவை; இவை பொதுமக்களிடையே மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன” என்னும்
எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றும் இங்கே சிந்திக்கத்தக்கதே!
ஆகவேதான்,
ஐயன் வள்ளுவரும்...
‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு’
(குறள் 127)
என்னும்
குறளில், ‘ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்; இல்லையேல், அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணமாகிவிடும்’ என்று
எச்சரிக்கிறார்.
தமிழ்மொழி
என்பது வெறும் அடையாளம் அல்ல; தமிழ்நாடு என்பது வெறும் மாநிலம் அல்ல; மாறாக, இது இந்தியத் திருநாட்டின் பெருமிதம்; உலக நாடுகளின் உன்னதம்!
ஒரு
மனிதன் எப்படி வாழ வேண்டும்? அவனது சமூக வாழ்வு எப்படி அமைய வேண்டும்? எதற்காகப் பொதுநலம் பேண வேண்டும்? எப்படிச் சுயநலம் தவிர்க்க வேண்டும்? பொதுநலத்தை முன்னிறுத்தி எப்படித் தன்னடக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்? என உலகோருக்கு வழிகாட்டியது
இந்த ‘மூத்தகுடி.’ ஆகவே, அறவழி நின்று, மெய்மொழிப் பேசி, நல்வழி வாழ்வதே உன்னத வாழ்வு.
மேலும்,
உடல்மொழிக் கூறுகளும் வாய்மொழிச் சொற்களும் நமது அன்றாட வாழ்வின் தகவல் தொடர்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்வேறு உடல்மொழிக் கூறுகள் மொழியைப் புரிந்துகொள்வதற்கும் கருத்துகளைத் தெளிவுற விளக்குவதற்கும் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.
ஆகவே,
சரியான உடல்மொழிக் கூறுகளாலும் வாய்மொழிச் சொற்களாலும் வலுவான உறவுகளை உருவாக்குவோம். நம்மில் தவறான புரிதல்களைத் தவிர்த்திடுவோம்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்