அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்! அன்புக்குரியவர்களே, பாஸ்கா திருவிழிப்பு, ‘திருவிழிப்புகளுக்கெல்லாம் தாய்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருவிழிப்பிலே ஆண்டவர் சாவை வென்று வெற்றி வீரராக உயிர்த்தெழுகிறார்! நம்மையும் உயிர்ப்பின் மக்களாய் ஆக்குகின்றார். தந்தையாம் கடவுள் தம் மக்களை எப்படி விடுவிக்கின்றார்; எப்படித் தம் மக்களோடு இருக்கின்றார்; எப்படி அடிமைத் தனத்திலிருந்து காக்கின்றார்; எப்படி இன்றைக்கும் கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகின்றார்; வாழவைக்கின்றார் என்கிற மீட்பின் வரலாற்றை இன்றைய வாசகங்கள் மிக அழகாக விளக்குகின்றன. இன்றைய இரவின் மகிமையை நாம் அனைவரும் உணரும் வண்ணமாகப் பாஸ்காப் புகழுரை நமக்குத் தரப்பட்டுள்ளது.
இந்த
நாள் நமக்கு என்னென்ன செய்திகளைக் கூறுகின்றது என்பதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். உயிர்ப்புப் பெருவிழா என்பது விழாக்களுக்கெல்லாம் பெருவிழா! இலத்தீன் மொழியிலே ‘festum festorum’ என்று அழைக்கப்படுகிறது. எத்தனை விழாக்கள் இருந்தாலும், நமக்குத் தலையாய விழா - உயிர்ப்பு! ஏனென்றால், இந்த உயிர்ப்புப் பெருவிழாதான் நமது நம்பிக்கை வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கிறது. இந்த உயிர்ப்புப் பெருவிழாவிலிருந்துதான் நமது கிறித்தவ வாழ்வை அர்த்தமுள்ள விதத்திலே வாழ்வதற்கான ஓர் ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது.
புனித
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1கொரி
15:14) என்கிறார். “கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் நம்முடைய நம்பிக்கை வீணானது; அர்த்தம் இல்லாதது. இந்த நம்பிக்கையை உலகமெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே... அதுவும் வீணானது. நாங்கள் உங்களுக்குக் கொடுக்கின்ற அந்தப் போதனையும் வீணானது” என்று திருத்தூதர் பவுல் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். ஆகவே, நம்முடைய நம்பிக்கை வாழ்வின் அடித்தளமாகிய இந்த உயிர்த்தெழுதலை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்; நன்றியோடு கொண்டாடுவோம். ஏனென்றால், இறைவன் நம்மையும் உயிர்ப்பின் மக்களாய் வாழ வைக்கிறார்.
ஆண்டவரின்
உயிர்ப்பிலே பழைய வாரம் முடிந்துவிட்டது; புதிய வாரம் தொடங்குகிறது. பழைய காலம் முடிந்துவிட்டது; புதிய யுகம் ஆரம்பமாகிறது. காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் இருளின் ஆட்சி முடிந்து போயிற்று; இப்பொழுது புதிய ஒளி உதித்திருக்கிறது. இந்த உலகத்தின் இருளை அகற்ற வந்த புதிய ஒளி இங்கே உதித்திருக்கிறது.
தொடக்கத்தில்
கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த பொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாய் இருந்தது; ஆழத்தின்மீது இருள் பரவியிருந்தது; வெறுமை - இருள் மக்களுடைய வாழ்விலே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் ஆண்டவர் பேசுகிற முதல் வார்த்தை: “ஒளி தோன்றுக!” (தொநூ 1:3) என்பதுதான். ஆண்டவருடைய உயிர்த்தெழுதலிலே ஆண்டவர் புதிய படைப்பு நிகழ்வாக உயிர்த்தெழுகிறார். நம்மையும் உயிர்ப்பின் மக்களாய் உயிர்த்தெழ வைக்கிறார். அவர்தான் புதிய ஒளி! அவர்தான் புதிய கதிரவன்! பழைய காலம் முடிந்துவிட்டது; நமது புதிய வாழ்வு பிறந்துள்ளது. அந்தப் புதிய வாழ்வை நமக்குத் தருபவர் நம்முடைய ஆண்டவர் இயேசு. நம் ஒவ்வொருவரையும் புதுப்படைப்பாக மாற்ற அவர் நம் இதயத்திலே ஒளி வீசுகின்றார்.
உயிர்ப்பின்
நிகழ்வில் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் கல்லறைக்குச் செல்கின்ற பொழுது, அவர்கள் கலக்கத்தோடு செல்கிறார்கள். அவருடைய கலக்கத்திற்குக் காரணம் என்ன? பெரிய கல் அந்தக் கல்லறை வாயிலை மூடியிருக்கிறது. ‘இந்தக் கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?’ இந்த வார்த்தையிலே பொதிந்திருக்கிற உணர்வு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றிய எல்லா மக்களின் மனங்களையும் அழுத்திக் கொண்டிருந்தது. ‘இவர் ஒரு நல்ல மனிதர், நல்லதைத்தானே செய்தார்’
என்று எண்ணி அவரிடம் நம்பிக்கை கொள்ளாத மக்கள் கூட, ‘ஏன் இப்படி ஒரு கேவலமான மரணம்? ஏன் இத்தனை கொடுமை கள்? எத்தனை வேதனைகள்? எத்தனை கசையடிகள்? கடவுள் ஏன் அவரைக் கைவிட்டார்?’ இதுதான் பெண்களுடைய மனத்திலும் சீடருடைய மனத்திலும் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட மக்கள் மனத்திலும் ஒரு பெரிய பாரமாக இருந்தது.
“எவ்வளவு அருமையான போதனைகளை எல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுத்தார். நாம் எப்படி நல்ல மனிதர்களாக வாழ்வது என்று நமக்குக் கற்றுத் தந்தாரே! இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழ வேண்டும் என நமக்குச் சொல்லிக்
கொடுத்தாரே! ‘ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்’ என்று
நமக்குச் சொல்லிக் கொடுத்தாரே! எத்தனை எத்தனை அற்புதங்கள் செய்தார்! மக்களுக்கு இவ்வளவு நன்மை செய்தும் மக்களை வாழவைத்தும் தந்தை கடவுள் அவரை விட்டுவிட்டாரே! ‘என் தந்தையே, ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர்?’ என்று
இவரை வேதனையோடு புலம்ப வைத்துவிட்டாரே இந்தக் கடவுள்! ஏன் இப்படிச் செய்தார்?” இந்தத் தாங்க முடியாத மனவேதனையோடும் அழுத்தத்தோடும் பாரத்தோடும்தான் அங்கே ஆண்டவர் இயேசுவினுடைய சீடர்களும், அவரை ஏற்றுக்கொண்ட மக்களும் நடைபிணமாய்த் திரிந்து கொண்டிருந்தார்கள். ஆனால், ஆண்டவருடைய உயிர்ப்பு அவர்களுக்கு ஒரு விடை தருகிறது. கடவுள் ஆண்டவர் இயேசு இறக்கின்றபோது அவரோடு அவரும் இறந்து, அவரோடு பாதாளத்தில் இறங்கி, அவரைத் தூக்கி எல்லா மனிதர்களுக்கும் மேலாக அவரை உயர்த்தி விடுகின்றார்; அவரை எழுப்பி விடுகின்றார். இந்த உயர்வை, மாட்சியை, மகிமையைத்தான் நாம் இன்று உணர்ந்துகொள்ள வேண்டிய முதல் செய்தி.
ஆனாலும்,
இன்னும் ஒரு கேள்வி. அப்படிச் சிலுவையிலே முழுமையாக இறக்கும் வரை தந்தை ஏன் காத்திருக்க வேண்டுமா? அதற்கு முன்பாக அவரைக் காப்பாற்றி நம் எல்லாருக்கும் மீட்பளித்திருக்க முடியாதா? என்கிற ஒரு கேள்வி நமக்கு எழும். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஆண்டவருடைய அன்பை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தம்முடைய ஒரே மகனை மானுட மீட்புக்காக, மனிதகுல வாழ்வுக்காக, மனிதனுடைய விடுதலைக்காக ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் திருவுளம். அதற்குக் காரணம் நம்மீது ஆண்டவர் கொண்ட அன்பு மட்டுமே (யோவா 3:16). அன்புதான் வாழவைக்கும்; ஆற்றல் அழித்துவிடும். ஆகவேதான் ஓர் அறிஞர் இவ்வாறு கூறுகிறார்: “நீ கடவுளை அன்பாகப்
புரிந்துகொள். எல்லை இல்லாத இரக்கமாக அவரை ஏற்றுக்கொள். எல்லாம் வல்லவர் என்று நினைக்காதே.” நாம் உணர வேண்டிய ஆழமான கருத்து.
நம்முடைய
உள்ளங்களிலே ஏராளமான பாரங்கள் இருக்கலாம்; சோகங்கள் இருக்கலாம்; வேதனைகள் இருக்கலாம்; பெரிய பாறைகள் இருக்கலாம்; ஆனால், அந்தப் பாறைகளையும் கற்களையும் வேதனைகளையும் சோதனைகளையும் எல்லாவற்றையுமே ஆண்டவர் தம்முடைய அன்பினால் புரட்டிப் போடுவார். எனவே, நாம் உயிர்த்த ஆண்டவரிலே நம்பிக்கை வைப்போம்; அவரிலே நாம் சரணடைவோம் என்பதுதான் நாம் முதன் முதலாக உணர வேண்டிய கருத்து.
இரண்டாவதாக,
ஆண்டவர் இயேசுவினுடைய உயிர்ப்பு என்பது தந்தை கடவுள் அவர் சொன்னதையும் செய்ததையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். இயேசுவைக் கொல்ல நினைத்தவர்கள் அவரை மட்டுமல்ல, இயேசுவினுடைய போதனைகளையும் அவருடைய இலட்சியங்களையும் அவருடைய இறையாட்சிக் கனவுகளையும் மக்களுக்காக அவர் எடுத்த நிலைப்பாட்டையும் கொன்றுபோட்டதாக நினைத்தார்கள். ஆனால், இறுதியிலே வென்றது கடவுள்தாம்! ஏனென்றால், தம்முடைய மகனின் உயிர்ப்பிலே ஆண்டவர் எதை எண்பிக்கின்றார்? “என்னுடைய அன்பு மகனிலே நான் பூரிப்படைகிறேன். அவர் என்னுடைய பணிகளைத்தான் செய்தார். தம் இன்னுயிரைக் கையளித்தபோது என்னுடைய திருவுளத்தை நிறைவேற்றினார் என்று நானும் உணர்ந்தேன். எனவே, அவர் எவற்றையெல்லாம் போதித்தாரோ, அவையெல்லாம் என்னுடையவை; அவர் என்னவெல்லாம் செய்தாரோ, அவையெல்லாம் எனக்கு ஏற்புடையவை. ஆகவே, அவரையும் அவருடைய வாழ்வையும் அவர்களுடைய செயல்களையும் அவருடைய போதனைகளையும் அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று
அவருக்கு நற்சான்றிதழ் கொடுப்பதுதான் உயிர்ப்பு.
மூன்றாவதாக,
உயிர்ப்பிலே சீடர்கள் கலிலேயாவுக்குச் செல்ல வேண்டும் என்ற செய்தி தரப்படுகிறது. ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குச் சென்றிருக்கிறார். அவர் சொன்னபடியே நீங்கள் அவரை அங்கே சந்திப்பீர்கள். ஏன் அவர்கள் கலிலேயாவுக்குச் செல்ல வேண்டும்? ஏன் அவர்கள் எருசலேமில் இருக்கக்கூடாது?’ எனச் சிந்திப்போம். ஆண்டவர் இயேசு கூறுவதிலே ஆழமான ஓர் உண்மை இருக்கிறது. “எருசலேம் என்னுடைய பாடுகளின் இடம். நான் இங்கே இறந்திருக்கிறேன்; நான் இங்கே புதைக்கப்பட்டு இருக்கிறேன்; ஆனால், கலிலேயா என்னுடைய வாழ்வின் இடம். என்னுடைய பணிகளை நான் அங்கே செய்தேன்; மக்களோடு
அங்கே நான் ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அவர்களுடைய துன்பத்தில் நான் பங்கு கொண்டேன். அவர்களுடைய இன்பத்திற்கு நான் வழிவகுத்தேன். அவர்களுடைய வாழ்க்கைக்காக என்னையே நான் அர்ப்பணித்துக் கொண்டேன். ஆகவே, நீங்களும் அங்கே வாருங்கள். இறப்பின் காட்சி எங்கே நடக்கிறதோ, அந்த இடத்தை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் வாழ்வு கொடுத்திருக்கிறேனே, அந்த இடத்திற்கு வாருங்கள். எதற்காக? நீங்களும் மக்களை வாழவையுங்கள். நீங்களும் மக்களுக்கு நற்செய்தியை அறிவியுங்கள். ‘கடவுள் அவர்களோடு இருக்கின்றார்; அவர்களை வாழ வைக்கின்றார்’ என்கிற
நற்செய்தியை அந்த மக்களுக்கு அறிவியுங்கள். நீங்களும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்று அங்கே ஆண்டவருக்கு நீங்கள் சாட்சியம் சொல்வீர்கள். ஆண்டவர் கூறியபடியே, திருத்தூதர்கள் எருசலேமுக்குச் சென்று உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சியம் பகிர்கிறார்கள்.
இன்று
நமக்கு என்ன அழைப்புத் தரப்படுகிறது? நீங்களும் நானும் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சிகளாய் வாழ வேண்டும். நம்முடைய வாழ்விடங்களில் நாம் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சிகளாய் இருக்க வேண்டும் என்று அழைக்கப்படுகிறோம். எப்போது நாம் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சிகளாக இருப்போம்? எப்பொழுதெல்லாம் ஏழைகளை வாழ வைக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் சுமை சுமந்து சோர்ந்து கிடப்பவர்களுடைய சுமைகளைத் தாங்குகின்றோமோ, எப்பொழுதெல்லாம் சமுதாயத்தினுடைய விளிம்புகளுக்குத் தள்ளப்படுகின்ற மக்களை மையத்திற்கு அழைத்து வருகின்றோமோ, எப்பொழுதெல்லாம் மக்களுடைய கண்ணீரைத் துடைத்து அவர்களுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் அநீதிக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டுவதற்கு நாம் முயற்சி செய்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் இந்தச் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்காக நாம் பாடுபடுகின்றோமோ, எப்பொழுதெல்லாம் நம்மை ஏழை எளிய மக்களுக்காகக் கையளிக்கின்றோமோ... அப்பொழுதெல்லாம் நாம் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சியம் பகிர்கிறோம். அப்படிப்பட்ட சாட்சிகளாய் நாம் வாழ வேண்டும் என்று ஆண்டவர் இன்று நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
புனித
அகுஸ்தினார் நமக்குக் குறிப்பிடுவது போல நாம் உயிர்ப்பின் மக்கள், ‘அல்லேலுயா’
என்பது நம்முடைய கீதம்! We are an Easter people.
Alleluia is our song. Happy Easter!