news-details
சிறப்புக்கட்டுரை
பறிபோகும் மாநில உரிமைகள்

இந்தியா என்பது ஒரே நாடல்ல; அது பல்வேறு இனக்குழுக்களை, பல்வேறு தேசிய இனங்களை, பல்வேறு மொழி பேசுபவர்களை உள்ளடக்கிய துணைக்கண்டம். தேச விடுதலைக்குப் பின் புது இந்திய தேசமாகஒரே நாடாகஉருபெற்றது. தேசிய இனங்களுக்கான மொழிவாரி  மாநிலங்கள் அமைந்தன. மாநிலத்தில் சுய ஆட்சியும், மத்தியில் கூட்டாட்சி என்ற ஆட்சி முறையும் அமலானது. ஒன்றிய அரசுக்கான  அதிகாரம், மாநில அரசுக்கான அதிகாரம், இரு அரசுகளுக்கான ஒருங்கிணைப்புப் பட்டியல் அதிகாரம் என அதிகாரப்  பகிர்வுகள் உருவாக்கப்பட்டன.

மாநில அரசுகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்மாநில சுயாட்சிஎன்ற வலுத்தக் கோரிக்கையைப்  புயலாய்க் கிளப்பியது. பேரறிஞர் அண்ணா முழங்குகிறார்: “ஒன்றிய அரசின் வேலை என்ன? நாடக மேடையில் வரும் இராஜா மந்திரியிடம்  கேட்பார், ‘மந்திரியே, நமது மாநகரில் மும்மாரி பொழிகிறதா?’ (இராஜா மழை பெய்வது கூட தெரியாமலே மாநகரில் இருப்பது  பெரும் அபத்தம் தானே!). அதேபோல மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்களை டெல்லியில் கூட்டி, ‘பள்ளிக்கூடங்களில் கல்வி எப்படி இருக்கிறது?’ என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்புதான் டெல்லிக்கு இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. மக்களின் சுக துக்கத்தோடு, பின்னிப் பிணைந்திருப்பது மாநில  அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல.”

மாநில சுயாட்சி என்ற கோரிக்கையை 1970-இல் அன்றைய ஆளும் தி.மு.. உயர்த்திப் பிடித்தது. 1969-இல்   ஒன்றிய, மாநில அரசுகளின் உறவு, உரிமை குறித்த  இராசமன்னார் குழு, தமிழ்நாடு அரசால் உருவகம் பெற்றது. 1971-இல் அக்குழு  தன் பரிந்துரைகளைத் தந்தது. மாநில அரசிற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே தேசத்தின் கூட்டாட்சி முறை வலுப்பெறும்; அதற்கேற்ப அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதற்கு முன்பே ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகளைப் பெற தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜரும், கர்நாடகத்தில் நிஜலிங்கப்பாவும் பெரும் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பதே வரலாற்றுப் பதிவு.

பாராளுமன்றத்தில் மாநில சுயாட்சி குறித்து முரசொலி மாறன், எல். கணேசன், வைகோ போன்றவர்களின் முழக்கம், தமிழ்நாடு மக்களின் குரலாகப் பதியப்பட்டுள்ளது. பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் எனத் துவங்கிய மாநில சுயாட்சி  இன்று கர்நாடகா, கேரளா என விரிவுபெற்றுள்ளது. இம்மாநில  சட்டசபைகள், மாநில சுயாட்சிக் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றி  உள்ளார்கள். உதாரணமாக, 1976-ஆம் ஆண்டு தேசத்தில் நெருக்கடி நிலை அமலான காலம். கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து, அன்றைய ஒன்றிய அரசால் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படுகிறது. இன்றையநீட்விவகாரம், பல்கலைத் துணை வேந்தர் நியமனம் என அடிப்படைப் பிரச்சினைகளின் ஆணிவேர் இந்த மாற்றமே  எனக் கூறலாம்.

தமிழ்நாடு ஆளுநர் தன்னிச்சையாகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் நடத்துகிறார், உத்தரவுகள் போடுகிறார். இது குறித்து  சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய 2007-ஆம் ஆண்டு மேனாள் தலைமை நீதிபதி பூஞ்சித் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையப் பரிந்துரை, ‘அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக்கூடாதுஎன்றது. குஜராத், தெலுங்கானா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தேடுதல் குழு அமைத்து, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் நடைபெறுகிறது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கல்வி  என்பதில் ஒன்றிய அரசு தமிழ் நாடு அரசை நெருக்குகிறது. ஒன்றிய அரசின் திட்டம் சார்ந்து செயல்படும் கல்வி திட்டங்களுக்கான ஆசிரியர்களின் ஊதியங்களைத் தர மறுக்கிறது. ஒன்றிய அரசின் காவிக்கொள்கை முடிவுகளை மாநில அரசுகள்மீது திணிக்கிறது.”

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, மாநில உரிமைகள், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து முழங்கியவைசூழலைத்  தீப்பற்ற வைப்பதாக இருந்தது. விவசாயிகள் புதுடெல்லி தெருக்களில் வாட்டும் குளிரில் வருடக்கணக்கில் போராடியும், மோடியைப் பார்க்க முடியவில்லை. மோடி பாலிவுட் திரைநாயகிகளின் விழாக்களில் கலந்து மகிழ்ந்தது, தேசத்தின் கடந்த காலக் கண்ணீர் நிலை.

எல்லாக் காலங்களிலும் ஒன்றிய-மாநில அரசுகளின் உறவு பேணப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. 1983-இல் அமைக்கப்பட்டு, 1985-ஆம் ஆண்டு சர்க்கரியா ஆணையமும் பல்வேறு பரிந்துரைகளைத் தந்தது. ஆனால், காலம் எதிர் பாதையில் ஒன்றிய அரசைத் திசைதிருப்பி விடுகிறது.

திட்டக்குழு கலைக்கப்பட்டு விட்டது. ஆனால், பரிந்துரைப்படி அனைத்து இந்தியத் தேர்வுப் பணிகள் ஆணையம் கலைக்கப்பட எந்த நடவடிக்கையும் இல்லை. முழுவதும் ஆர்.எஸ்.எஸ். ஆள்களை இந்திய அரசின் அனைத்துத் துறைகளிலும், அனைத்துவகைப் பணிகளிலும் முழுமையாக நுழைத்துவிட்டனர்

356-ஆம் சட்டப்பிரிவால் 134 மாநில அரசுகள், ஒன்றிய அரசால் கலைக்கப்பட்ட நிலை மட்டும் மாறிவிட்டது. 1994-ஆம் ஆண்டுஎஸ்.ஆர். பொம்மை எதிர்த்தரப்பு இந்திய  ஒன்றிய அரசுஎன்ற வழக்கில், ஆட்சிக் கலைப்பு என்பதற்குக் கடுமையான வழிகாட்டி நெறிமுறைகள் உச்சநீதிமன்றத்தால் தரப்பட்டு விட்டது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அதன்பின் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே ஆட்சிக் கலைப்பு நடந்துள்ளது.

இன்று  ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு  முறையால், தமிழ்நாடு  அதிக அளவு வரி வருவாயை ஒன்றிய அரசிற்கு வழங்குகிறது. ஆனால், ஒன்றிய அரசோ, தமிழ்நாடு அரசு உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் ஆள்கிற மாநில அரசுகளுக்கு இயற்கைச் சீற்றங்களுக்கான நிதி, திட்டங்களுக்கான நிதியென உரிய வரிப் பகிர்வைத் தருவதில்லை. பா... மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆள்கின்ற மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறது

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் குறித்த சட்டங்களை ஒன்றிய அரசுதான் கொண்டுவர முடியும் என்ற கட்டாயம் களையப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மாநில அரசுகளின்  உறுப்பினர்கள் தலையாட்டிப் பொம்மைகள் என்ற அவலம் களையப்பட வேண்டும். இன்று மாநில அரசுகள் உள்ளாட்சி வருவாய்கள், பத்திரப் பதிவு வருவாய், மது வருவாய் என முடங்கிக் கிடப்பது பெரும் ஆபத்து.

பேரறிஞர் அண்ணாஉரிமை மிக்க மாநிலங்களே வலிமை மிக்க நாட்டை உருவாக்க முடியும்என்றார். உள்ளாட்சி அமைப்புகளாகச் செயல்படும் மாநில அரசுகள் எதற்கு? அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மாகாணக் கவுன்சில்களுக்குப் பெரும்  அதிகாரம் அளித்துள்ளது. ஆனால், பா...வின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே குடும்ப அட்டை, ஒரே தேர்தல், ஒரே தலைவன், ஒரே வரிசையில், ஒரே அரசு என்ற நீண்டகாலத் திட்டமும் ஒளிந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா ஒற்றை வரியில் கூறுகிறார்: “தேசப் பாதுகாப்பைத் தவிர மற்ற அனைத்திலும் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டும். இதுவே உண்மையான கூட்டாட்சித் தத்துவமாக அமையும்.”

2024-ஆம் ஆண்டு நீண்ட காலமாகத் தேர்தல் நடைபெறாத ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிற தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர்  உமர் அப்துல்லாவுக்குத் தமிழ்நாடு முதல்வர் வாழ்த்துச் செய்தியில் கூறுகிறார்: “மாநில உரிமைகளுக்காக வடமுனை காஷ்மீரும், தென்முனை தமிழ்நாடும் தொடர்ந்து போராடும்.” ஆம், தொடர்ந்து ஒன்றிய அரசால் மாநில உரிமைகள் மெல்லப் பறிக்கப்பட்டு, இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற இறுதி நிலையில்  நிற்கிறது.

காலத்தே ஆறுதல்எனும் கலங்கரை விளக்கு ஒளிர்கிறது. காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் இராகுல் காந்தி சமூக நீதி, சிறுபான்மையோர் நலன், விலைவாசி உயர்வு, இடஒதுக்கீடு, ஆர்.எஸ்.எஸ். அபாயம், மாநில உரிமைகள் எனப் பொதுமக்கள் குரலைப் பொதுவெளியில் எதிரொலிக்கிறார்.

மாநிலங்கள் என்ற வேர் உயிர்ப்போடு இருந்தால் மட்டுமே, தேசமெனும் பெரும் மரம் உறுதி பெறும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் பெரும் முழக்கத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.