கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக திருத்தந்தை பிரான்சிஸ் குறித்து இன்னும் ஆறு சுவாரசியத் தகவல்கள் இங்கே:
1. மனவாட்டம்
‘நொஸ்டால்ஜியா’ என்று
சொல்லப்படும் பழைய காலத்திற்கான தீவிர ஏக்கம் இளம் பருவத்தில் திருத்தந்தை பிரான்சிஸை அலைக்கழித்திருக்கிறது. துக்கம் இல்லை. ஒருவித மன வாட்டம் (Melancholy). எனக்கும்கூட அவ்வப்போது
வரும். ஏதாவது பழைய
நட்புகள், படித்த இடங்கள், பணித்தளங்கள் பற்றி நினைக்கும்போது திடீரென்று பெரிய அலை மாதிரி வயிற்றில் சோகம் வந்து தாக்கி அந்தக் காலங்களை, அந்த மனிதர்களை இனி திரும்பப் பெறவே முடியாது என்ற நிச்சயத்தில் நெஞ்சம் அடைத்துக் கொண்டு, மூச்சு முட்டுவது மாதிரி ஆகி... உங்களுக்கு
இப்படி நடந்திருக்கிறதா? இதுபோன்ற ஏக்கப் படலங்களிலிருந்து, பெரிய பிரயத்தனம் செய்தே மீள்வேன். ஏதாவது ஒரு நிகழ்காலப் பணியில் மனத்தையும் உடலையும் செலுத்தி அதை வெல்ல வேண்டும். சரியாகக் கையாளப்படாத ஏக்கம், உளச்சோர்வுக்கு இட்டுச்செல்லும் ஆபத்து உள்ளது.
பிரான்சிசுக்கு
இந்தப் பிரச்சினை இருந்துள்ளது. அதற்காக அவர் ஓர் உளநல மருத்துவரைப் பார்த்துள்ளார். நம்ப முடிகிறதா? அதுவும் ஒரு வருடத்திற்கு!
“அவர் ஒரு யூதர். மிகக் கனிவுடன் என்னை நடத்தினார். அவர் கொடுத்த ஆலோசனைகள் இன்றும்கூட எனக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றன” என்று
பிரான்சிஸ் கூறுகிறார்.
2. சிரிப்பு மருந்து
துக்கம்
ஒருவரைக் கடவுளிடம் கூட்டிச் செல்லாது. துக்கமாய் இருப்பதும் கோபப்படுவதும் புனிதத்தின் அடையாளங்கள் என்று யாராவது கூறினால், அது பொய்த்தகவல். அவரைத் தயங்காமல் போலீசில் பிடித்துக் கொடுத்து விடலாம். ‘மகிழ்ச்சியே கிறித்தவப் பண்பு’ என்று பிரான்சிஸ் கூறுகிறார். சிரிக்கத் தெரிந்த சில மிருகங்களில் மனிதன் ஒருவன். சிம்பன்சி, நாய், எலி போன்ற விலங்குகள் மனிதச் சிரிப்பை ஒத்த ஒலிகளை எழுப்பினாலும், அவை மனிதன் போன்று
மகிழ்வு, நகைச்சுவை, உறவு போன்ற மதிப்பீடுகளை வெளிப்படுத்தச் சிரிப்பதில்லை.
“நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளோம். கடவுள் சிரிக்கிறார்; எனவே,
நாமும் சிரிக்க வேண்டும். கடவுளோடு சேர்ந்து சிரிக்கலாம். சில நேரங்களில், கடவுளைப் பார்த்துக் கிண்டலடித்தும் சிரிக்கலாம். தப்பில்லை. நம் வீட்டில் உள்ள பெரியவர்களை எப்போதாவது, விளையாட்டாகக் கேலி செய்து சிரிக்கிறோம் அல்லவா! அதுபோல.”
புனித
தாமஸ்மூர் (St Thomas More) எழுதிய ‘நல்ல
சிரிப்புக்கான மன்றாட்டு’
என்ற ஓர் அழகிய இறைவேண்டல் இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பிரான்சிஸ் அதை ஒவ்வொரு நாளும் சொல்கிறாராம். அந்த இறைவேண்டலின் ஒரு
பகுதி இங்கே...
“நான்’ என்ற எண்ணம் உருவாக்கும் கவலைகளிலிருந்து எனக்கு விடுதலை தாரும். அலுப்பும் முணுமுணுப்பும் பெருமூச்சும் புலம்பலும் அறியாத ஆன்மாவைத் தாரும். நல்ல நகைச்சுவை உணர்வைத் தாரும். ஒரு கேலியை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மனம் தாரும். வாழ்வின் சிறு மகிழ்வுகளைக் கண்டுகொள்ளவும், அதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் வரம் தாரும்.”
நல்ல
இறைவேண்டல்! எல்லாரும் இதைச் சொல்ல வேண்டும். குறிப்பாக, எப்போதும் ‘கொயர்’ சரியில்லை, ‘வயர்’ சரியில்லை என்று மைக்கில் புலம்பும் அருள்பணியாளர்கள்.
3. பீட்சா விரும்பி
இரண்டு
காரணங்களால் ‘பீட்சா’ தமிழில் பிரபலம். ஒன்று, அந்தப் பெயரிலேயே வந்து கலக்கிய விஜய் சேதுபதி நடித்த ‘திகில்’ படம். நான் அறையில் எல்லா விளக்குகளையும் எரியவிட்டு, பத்து பேர் நடுவில் அமர்ந்து அப்படத்தைப் பார்த்தேன். இரண்டாவது, 2014-இல் அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில், ‘பீட்சா’ என்ற உணவைக் குறியீடாக வைத்து, எளிய குடும்பத்துக் குழந்தைகளின் வாழ்வை, ஆசைகளை, போராட்டங்களை ஒரு கவிதை போல சொன்ன ‘காக்கா முட்டை’ திரைப்படம். கடைசியில் அதைத் தின்ன வாய்ப்பு கிடைக்கும்போது, ஒரு கடி கடித்து விட்டு, ‘அய்ய... வே... கொளகொளனு நல்லாவே இல்ல; இதுக்கு ஆச்சியோட தோசையே நல்லா இருந்துச்சி’ என்று
சொல்லும் ‘சின்ன காக்கா முட்டை’ கட்சி நான். பீட்சா எனக்கு ஆகாது.
எல்லாருக்கும்
பிடித்த உணவு இருக்கிறது. எனக்கு இட்லி உப்புமா... மூன்று
வேளைகள் கொடுத்தாலும் ஓகே! பிரான்சிசுக்குப் பிடித்த உணவு பீட்சாவும், நத்தைக் கறி வறுவலும். Buenos Aires நகரின்
பிரபல சான் லோரென்சோ கிளப் கால்பந்து ஆட்டங்களுக்குப் போவதும், ஆட்டம் முடிந்த பின்பு ஹோட்டலுக்குப் போய் பீட்சா சாப்பிடுவதும் பெர்கோலியோ குடும்பத்தினரின் முக்கியப் பொழுது போக்குகளில் ஒன்று.
“அந்தப் பீட்சாவின் மணத்தை இப்போது கூட என்னால் நுகர்ந்து பார்க்க முடிகிறது. உண்மையில் திருத்தந்தையாக நான் இழந்த விசயங்களில் ஒன்று, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு கடைக்குப் போய் அமர்ந்து பீட்சா சாப்பிடுவது.”
4. நாயக வழிபாடு
‘ஹீரோ ஒர்ஷிப்’ என்று சொல்லப்படும் ‘நாயக வழிபாடு’ பிரான்சிசுக்கு அறவே பிடிக்காத ஒன்று. ஜான் F. கென்னடி
அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க அதிபர். 65 ஆண்டுகளுக்கு முன் அவர் வெள்ளை மாளிகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள கத்தோலிக்கர்கள் அதைக் கொண்டாடினார்கள். கென்னடி அவர்களின் ‘New Frontier’ (புதிய எல்லைகள்) வாக்குறுதி, இனி உலகில் வறுமை இருக்காது, எல்லாருக்கும் விடுதலை, வான் வெளி முழுக்க நம் கைவசமாகி, ‘பொள்ளாச்சிக்குப் போய் வருவதுபோல், நிலாவுக்குப் போய் வரலாம்’ என்றெல்லாம் மக்கள் கனவு கண்டார்கள். கென்னடி ஒரு நவீன மெசியா போலத் தோன்றினார். பிரான்சிஸ் அதை நம்பவில்லை.
“எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடன் வாழ்ந்த அருள்பணியாளர் ஒருவர், கென்னடியின் வெற்றியை ஏதோ போப்பாண்டவரே அமெரிக்காவின் அதிபர் ஆகிவிட்டதுபோல் கொண்டாடினார். அதுபோன்ற பாமரத்தனம் எனக்குக் கோபத்தைத் தந்தது.”
அமெரிக்க
ஷூ, அமெரிக்க பர்கர், அமெரிக்க விசா... என இன்றைக்கும் கூட அமெரிக்காவிற்காக
மக்கள் ‘ஆலாய்’ பறக்க, பிரான்சிசைப் பொறுத்தமட்டில் அது மற்றொரு நாடு. அமெரிக்கா பற்றிய மிதம் மீறிய கற்பனைகளோ, அங்குப் போக வேண்டும் என்ற பேராவலோ அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. டாலர்மீது அவருக்கு மயக்கம் இல்லை. கர்தினால் ஆகியும், அமெரிக்கா போகாதவர் பிரான்சிஸ் ஒருவராகத்தான் இருப்பார். அமெரிக்காவிற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம், அவர் திருத்தந்தையாகி, இரண்டு வருடங்கள் கழித்து, 2015-இல்தான் நடந்தது.
5. டிவிக்கு ‘நோ...நோ...’
1990-ஆம் ஆண்டு
ஒருநாள் பிரான்சிஸ் சக இயேசு சபை
அருள்பணியாளர்களோடு அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டிவியில் ஒரு மோசமான காட்சியைக் காட்டினார்கள். அது
பிரான்சிஸை மிக ஆழமாகப் பாதித்தது. உடனே பிரான்சிஸ் எழுந்து வெளியே போய்விட்டார். “ஏதோ கடவுளே எனக்குக் கூறுவது போல இருந்தது. டிவி உனக்குச் சரியானது அல்ல; அதனால், உனக்கு எந்த நன்மையும் இல்லை.”
ஒரு
திருப்பலியின்போது “இனி நான் டிவி பார்க்கப் போவதில்லை”
என்று அன்னை மரியாவுக்கு வாக்குறுதி கொடுத்து, அதற்கு இதுவரை 1999-இல் Buenos Aires நகரில் பெரிய விமான விபத்து ஏற்பட்டபோது ஒருமுறை 2001-இல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது ஒருமுறை என இரண்டு முறை
மட்டும் விலக்கு அளித்துள்ளார். தன் விருப்பத்திற்குரிய சான் லோரன்சோ கிளப்பின் கால்பந்து ஆட்டங்களைக் கூட பிரான்சிஸ் டிவியில் பார்ப்பது இல்லை. முக்கியமான
மேட்ச்சுகள் நடக்கும்போது, ஒரு சுவிஸ் கார்டு பாதுகாவலர், போட்டி அட்டவணையையும், ஆட்டத்தின் ஸ்கோர்களையும் எழுதி, திருத்தந்தையின் மேசையில்
வைத்து விடுவாராம். பாவம், பிரான்சிஸ்!
6. அடக்கமான அடக்கம்
பெரும்பாலான
நவீன காலத் திருத்தந்தையர்கள் உரோம் நகர் புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்சிஸ் தன்னை
St. Mary Major பேராலயத்தில்
அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மரியாமீது
பிரான்சிசுக்கு உள்ள அன்பும் பற்றுமே இதற்கு முதல் காரணம். இரண்டாவது காரணம், மஞ்சள் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி இருக்கும் அவர் தன்மை. வசதியான போப் மாளிகையைத் தவிர்த்து, ‘மார்த்தா இல்லம்’ என்கிற எளிய விருந்தினர் இல்லத்தில் கடந்த 12 வருடங்களாக வாழும் பிரான்சிஸ், ‘அடக்கத்தில் பேதுரு ஆலயம்’ என்ற ஆடம்பரத்தைத் தவிர்க்க விரும்புவதில் ஆச்சர்யம் இல்லை. இறுதிப்பயண வழிபாடுகளும் மிக எளிமையாக இருக்க வேண்டும் என்று பிரான்சிஸ் கேட்டுள்ளார்.
“திருத்தந்தையர்களின் அடக்க நிகழ்வுகள் மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளது. வழிபாடுகளின் ஒருங்கிணைப்பாளரிடம் அதை எளிமைப்படுத்தச் சொல்லியிருக்கிறேன். அது போல, என் அடக்கத்தில் சைப்ரஸ் மரத்தால் ஆன சவப்பெட்டி மட்டுமே
பயன்படுத்தப்படும். அதை மற்றோர் உலோகப் பெட்டியில் வைப்பது, பிறகு அது இரண்டையும் மூன்றாவதாக ஒரு ‘Oak’ பெட்டியில்
வைப்பது போன்ற பாரம்பரிய விசயங்கள் இருக்காது. ஒரே பெட்டி! சைப்ரஸ் போதும்.”
“எல்லாக் கிறித்தவர்களையும் போல எளிமையாக, அதே நேரத்தில் மாண்போடு புதைக்கப்படவே நான் விரும்புகிறேன். உரோமின் ஆயர், ஆதாரமாக ஓர் அருள்பணியாளர், ஒரு சீடர், அவ்வளவுதான். நான் உலகின் ‘தாதா’ கிடையாது.”
இந்த
நல்ல மனிதர், எளிய திரு அவைத் தலைவர், விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்றும், அவர் தொடங்கி வைத்து நடைபெற்று வரும் சீர்திருத்தத் திட்டங்கள் முழுமைபெற வேண்டும் என்றும் பெரியநாயகியிடம்
வேண்டுகிறேன்.
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)