news-details
ஆன்மிகம்
பயணமும் பாடங்களும் (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 2)

கூட்டியக்கத் திரு அவைஎன்பதை மாமன்றத்தின் மையப்பொருளாக வைத்தது, திரு அவை பற்றிய புரிதலில் திருத்தந்தை பிரான்சிஸ் நிகழ்த்திய ஒரு மாபெரும் புரட்சியே. இதன் வித்துகள் திரு அவை பற்றிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஏட்டிலேயே காணக்கிடக்கின்றன. இதை மாமன்ற அறிக்கை நினைவூட்டுகிறது: “உண்மையில், இணைந்து பயணித்தல் என்பது திரு அவை ஒரு மறை பொருள், இறைமக்கள் சமூகம் எனும் பொதுச்சங்கப் படிப்பினையை நடைமுறைப்படுத்துவதே (மாமன்ற முதல் அமர்வு அறிக்கையின் முன்னுரை). அதாவது, திரு அவை என்பது திருத்தந்தையையும் ஆயர்களையும் அருள்பணியாளர்களையும் முதன்மைப்படுத்திய ஒரு தெய்வீக நிறுவனம் எனும் மரபுப் புரிதலைக் கைவிட்டு, அது இறைமக்கள் சமூகம்; திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அதில் சமமான மாண்பும் இறையாட்சிப் பணிப்பொறுப்பும் உடையவர்கள்; திருநிலையினர் அதில் உயர் நிலையினர் அல்லர்; உதவி நிலையினரே எனும் புதிய புரிதலைச் சங்கம் முன்வைத்திருந்தது.

இதன் விளைவாக பங்குப் பேரவை, நிதிக்குழு, மறைமாவட்ட அருள்பணிப் பேரவை என்பன ஏற்படுத்தப்பட்டு, பொதுநிலையினரும் திரு அவையின் அருள்பணிப் பொறுப்புகளிலும் நிர்வாகத்திலும் ஓரளவு பங்கேற்க வாய்ப்புகள் உருவாயின. இருப்பினும், பல மறைமாவட்டங்களிலும் பங்குகளிலும் இவ்வமைப்புகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ஏற்படுத்தப்பட்ட பல இடங்களிலும் அவை பெயரளவில்தான் பங்கேற்பு அமைப்புகளாகச் செயல்படுகின்றன. ஏனெனில், திருநிலையினரின் அதிகார ஆதிக்கமே அவற்றில் பெரிதும் நிலவுகிறது. குறிப்பாக, முடிவெடுக்கும் முழு அதிகாரமும் அவர்களிடமே உள்ளது. இதனால் பொதுநிலையினரும் சமமான மாண்பும் பொறுப்பும் கொண்டவர்கள் எனும் பொதுச்சங்கப் படிப்பினைப் பெரிதும் ஏட்டளவில்தான் இருக்கின்றது. இதனால்தான் ஒன்றிப்பு, பங்கேற்பு, திருத்தூதுப் பணி என்பனவற்றை இன்றியமையாத இயல்புப் பண்புகளாகக் கொண்ட கூட்டியக்கத் திரு அவையை மாமன்றத்தின் மைய ஆய்வுப் பொருளாகத் திருத்தந்தை பிரான்சிஸ் முன்வைத்தார்.

கூட்டியக்க முறை தொடர வேண்டும்

இணைந்து பயணிக்கும் கூட்டியக்கத் திரு அவையை மையப்பொருளாகக் கொண்ட மாமன்றச் செயல்பாடுகள் வெறும் கலந்தாய்வாக மட்டும் முடிந்துவிடக்கூடாது எனும் நோக்கு தொடக்கத்திலேயே திருத்தந்தைக்கு இருந்தது. அதனால்தான் ஆய்வு முடிவுகளைவிட ஆய்வு முறைக்கே முதன்மை தரவேண்டும் எனப் பலமுறை அவர் வலியுறுத்தியுள்ளார். அதாவது, அடிநிலைக் குழுக்களிலிருந்து தொடங்கிய மாமன்றத்திற்கான கலந்துரையாடலே இணைந்த பயணத்தின் அல்லது கூட்டியக்கத்தின் அனுபவமாக அமைய வேண்டும் என்பதும், அந்த அனுபவம் திரு அவையின் எல்லா நிலைகள், அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளிலும் கூட்டியக்கத்தன்மையை வளர்த்தெடுக்கத் தொடர்ந்து வழி வகுக்க வேண்டும் என்பதும் அவரது நோக்கமாக இருந்தது. இதனால்தான், “16-வது சாதாரண ஆயர் மாமன்றக் கூடுகையின் முடிவு, திரு அவையின் கூட்டியக்கப் பயணத்தின் முடிவாக இருந்துவிடக் கூடாதுஎன்கிறார் (இஅ - இணைப்புக் குறிப்பு).

மக்கள் திரு அவை மலர்கின்றது

அடிமட்டக் குழுக்களில் நடைபெற்ற மாமன்றத்திற்கான கலந்துரையாடல்களில் ஆயர்களும் அருள்பணியாளர்களும் பங்கேற்று, பொதுநிலையினருடனும் இருபால் துறவியருடனும் சமமானவர்களாகவும் சகோதரக் கிறித்தவர்களாகவும் ஒன்றுகூடி வந்தது மகிழத்தக்கது. நற்செய்திப் பணியைத் திறம்பட ஆற்றுவதில் திரு அவை எதிர்கொள்ளும் சிக்கல்கள், வளர்ச்சி வாய்ப்புகள், முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் என்பன பற்றிய தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதும், ஒருவர் மற்றவருடைய கருத்துகளைக் கேட்டு மதித்து, கலந்துரையாடல் மேற்கொண்டதும் பாராட்டத்தக்கது.

மாமன்றக் கூட்டியக்கப் பயணத்தின் உச்சம்தான் வத்திக்கானில் நடைபெற்ற மாமன்றக் கூடுகைகள். கர்தினால்களும் ஆயர்களும் அருள்பணியாளர்களும் இருபால் துறவியரும் பொதுநிலையினரும் கலந்து, எட்டெட்டு பேராக வட்ட மேசைகளைச் சுற்றிச் சமமானவர்களாக அமர்ந்து, ஒவ்வொருவரும்  கூறுவதை மற்றவர்கள் கேட்டு, பல்வேறு செயல்பாடுகள் பற்றி ஒத்த கருத்தை உருவாக்கிக்கொண்டனர். உடன்பாடு எட்ட முடியாத சில பரிந்துரைகள் பற்றி ஆழமான திருவிவிலிய மற்றும் இறையியல் ஆய்வுகளை மேற்கொண்டு, தொடர்ந்து கலந்துரையாடி, ஒத்த புரிதலை ஏற்படுத்தி முடிவுகள் எடுக்கலாம் என அவை அடுத்த அமர்வுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இவ்வாறுபல்வேறு சூழமைகள் மற்றும் பண்பாடுகளில் வாழும் ஒவ்வொரு குலம், மொழி, மக்கள், நாடு என்பனவற்றிலிருந்து ஒன்றுகூடி வந்திருந்த எங்களுக்கு மாமன்ற நடைமுறை கடவுளின் மக்களாக இருப்பதன் ஆன்மிக அருள்சுவையைத் தந்தது (இஅ 17) என அவர்களே கூறியுள்ளனர்.

செவிமடுத்தல், இணைந்து பயணித்தலின் முன்நிபந்தனை

மாமன்றக் கூடுகையிலும் மற்றும் தலத் திரு அவைகளிலும் நிகழ்ந்த கலந்துரையாடல்களில் (முஅ) மாமன்ற முதல் அமர்வின் அறிக்கையையும், (இஅ) இறுதி அறிக்கையையும் குறிக்கின்றன.

பங்கெடுத்தோரும், அவர்களுள் சிறப்பாகத் திரு அவையிலும் சமூகத்திலும் ஒதுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டோரும் திரு அவைத் தளத்தில் தாங்கள் பேச அழைக்கப்பெற்றது பற்றியும் தங்கள் குரல் திரு அவையில் கேட்கப்பட்டது பற்றியும் மிகவும் வியப்பு அடைந்தனர் (இஅ 50). இவ்வனுபவம் யாவருக்கும் அவரது மாண்பு ஏற்று உறுதிப்படுத்தப்படுவதாக அமைகிறது; பிறருடன் உறவாட உதவும் ஆற்றல்மிகு கருவியும் ஆகிறது.

மேலும், தங்களது குரலைக் கேட்கவும் தங்களுடன் இணைந்து பயணிக்கவும் கோரிய பலரைத் திரு அவை தனது கூட்டியக்கப் பயணத்தில் சந்தித்தது. அவர்களுள் முதன்மையானோர் இளைஞர்கள்; அவர்களுக்கு முன்னுரிமை தருவதன் அவசியத்தை மாமன்றக் கலந்துரையாடல்களில் உணர்ந்து, உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், அருள்பணியாளர்கள் அல்லது தலைமைப் பொறுப்புகளில் இருப்போரது பாலியல், அருள்வாழ்வுசார், பொருளாதார, நிறுவன, அதிகார, மனச்சான்றுசார் ஆதிக்கம் அல்லது சீண்டல்களுக்கு ஆளானோரின் குரலுக்கும் தனிக் கவனத்துடனும் மென்மையான உணர்வுடனும் செவிமடுக்க வேண்டும் எனும் தெளிவும் பிறந்தது. ஏனெனில், “உண்மையான செவிமடுத்தலே நலம்பெறுதல், மனத்துயர், நீதி, ஒப்புரவு என்பவற்றிற்கான பாதையின் ஓர் அடிப்படைக் கூறு ( முஅ 16 ).

தங்களது திருமண நிலை, பாலியல்பு என்பவை காரணமாக, திரு அவையில் பல வகைகளில் ஒதுக்கப்பட்டதாகவோ அல்லது காயப்படுத்தப்பட்டதாகவோ உணர்ந்தாலும், திரு அவை தங்களது வீடாக இருக்கவேண்டும் என விரும்புவோர் பலர். தீர்ப்பிடப்படும் அச்சமின்றி, தாங்கள் மதிக்கவும் தங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என விரும்புவோரும் உள்ளனர். அத்தகையோர் மீதான ஆழமான அன்பும் பரிவும் இரக்கமும் மாமன்றத்தில் உணரப்பட்டன. ஏனெனில், “செவிமடுத்தல் கடவுளது திருவுளத்தைத் தேடிப் பயணிப்பதன் முன்நிபந்தனை( முஅ 16h ).                            

(தொடரும்)