news-details
சிறப்புக்கட்டுரை
வீதிக்கு வருவோம்! விளையாடுவோம்! (வலையும் வாழ்வும் – 08)

எப்போதும் பச்சைப் பசேலென இருக்கும் அந்த வாகை மரம், ஊருக்கே மணி மகுடம் போல ஊர் நடுவே இருந்தது. நானூற்றுக்கும் மேற்பட்ட கைகளை அகல விரித்த மரக்கொம்புகள், கிளைகள் பெற்றெடுத்த தேன்கூடுகள், பூக்களால் சீவிச் சிங்காரித்த இலைமுடிகள், தென்றலுக்கு மணிக்கிலுக்கும் காய்கள், பம்பரமாய்ச் சுற்றி நின்ற ஆணி வேர் என்று எம் ஊர் வாகை மரம் பிரமிக்கத்தக்க ஓர் ஓவியம் எனலாம்.

முதியவர்கள் அதன் அடியில் அமர்ந்து, அயர்ந்து தூங்கும்போது, அது ஒரு தாய்மடி. சிறுவர்கள் அதன் நிழலில் ஓடியாடி விளையாடும்போது, அது ஒரு விளையாட்டு மைதானம். அதன் கொம்புகளைப் பிடித்துக் குரங்காய்த் தாவி விளையாடும்போது, அது ஒரு சர்க்கஸ் கூடாரம். பள்ளிப் பருவ காலத்தில் விடுமுறை நாள்களில் அந்த வாகை மரத்தடியில்தான் நாள்கள் கழிந்தன.

ஒவ்வொரு சீசனுக்கும் விளையாட்டுகள் மாறிக் கொண்டே இருந்தன. பம்பரம், கோலிக்குண்டு, புளியம் முத்துகளை வைத்து பாண்டி விளையாடுதல்கிட்டிப்புள், கபடி, கிளியாந்தட்டு, அவ்வப் போது கிரிக்கெட்... இப்படி எல்லா விளையாட்டுகளும் அந்த வாகை மரத்தடியில்தான் நடந்தன. பிள்ளைகள் வாகை மரத்தடியில்தான் விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்பது தெரிந்திருந்ததால், பெற்றோர் நிம்மதியாய் தங்கள் வீட்டு வேலைகளைச் செய்தனர்.

கல்லூரி போகும் பருவம் அது. ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலைப் பொழுது ஊர்க்காரர்கள் ஆண், பெண் என்று பலரும் அந்த வாகை மரத்தடியில் கூடியிருந்தனர். “ஏல செல்லத்துரை! ஒவ்வொருத்தனும் ஒவ்வொருத்தனுங்க மூஞ்ச பாத்துக்கிட்டு இருக்கீங்க. சட்டுப் புட்டுணு ஒரு முடிவுக்கு வாங்கலேஎன்று ராஜாமணி தாத்தா மௌனத்தைக் கலைத்து வைத்தார்.

நான் என்ன சொல்லுறது? ஊரு திருவிழா வருது. இந்தக் கோவில் கட்டி ஐம்பதாவது வருசம் வேற. அந்தோணியாருக்குப் பெரிய தேர் ஒண்ணு செய்யணும். திருவிழாவை ஜாம்ஜாம்முணு கொண்டாடணும். அவ்வளவுதான்செல்லத்துரை சொல்லி முடிப்பதற்குள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தேர் செய்ய நிறைய செலவாகும். இந்த வருசமும் கூடுதல் வரி போட்டு வயித்த அடிக்காதிங்கடே...” விரக்தியில் சொன்னாள் விக்டோரியா பாட்டி.

அதுக்கெல்லாம் அவ்வளவு செலவாகாது. அதுதான் நம்ம வாகை மரம் இருக்குலா. அத வெட்டி தேர் செஞ்சிட வேண்டியதுதான். நம்ம ஊர் இளந்தாரிங்ககிட்ட அந்த வேலைய கொடுத்திடலாம். என்னடே சொல்லுறீங்க எல்லாரும்...” செல்லத்துரை பெரியப்பா எங்களைப் பார்த்துக் கேட்டார். வாகை மரத்தை வெட்டி தேர் செய்யும் முடிவே எங்களுக்குப் பிடிக்கல.

ஏன் வாகை மரத்த வெட்டணும், தேர் செய்யணும்? அந்தோணியார் வந்து தேர் செய்யுணு கேட்டாரா?” எப்போதாவது பேசுற ரீகனே தைரியமா கூட்டத்துல கேட்டுட்டான்.

லே! பக்கத்து ஊர்க்காரப் பயலுக போன வருசம் அவன் ஊர் திருவிழாவுல புத்தம் புதிய தேர செஞ்சிஷோகாட்டுனானுக பாத்தியா? நம்ம அவனவிட எதுலல கொறஞ்சிட்டோம்?” இப்போ தொண்டை கிழியக் கேள்வி கேட்டது சின்னப்பன் தாத்தா. வாகை மரத்தை இனி காப்பாற்றவே முடியாது என்று நினைக்கும்போது, மனம் பானை தண்ணீர் போல அலம்பி அடங்கியது.

சில நாள்களிலேயே பொக்லைன் இயந்திரம் ஊருக்குள் ஊர்ந்து வந்தது. வாகை மரத்தை வேரறுத்தது. தும்பிக்கையைக் கொண்டு அழுத்தித் தள்ளும் யானையைப்போல தன் கையால் அந்தப் பெரிய மரத்தை முட்டி மோதியது. மரத்தைக் கீழே தள்ளியபோது காக்கை முட்டைகள் விழுந்து உடைந்து தெறித்தது போல, சில நொடிப் பொழுதுகள் எங்கள் ஊர் அடையாளமே விழுந்து நொறுங்கியது போலிருந்தது. ஊரும் எங்கள் உணர்வும் வெறுமையை உணர்ந்தது. வாகை மரம் இல்லை, வாகை மரத்தடி விளையாட்டும் இல்லை. அந்த ஊர்ல இருக்கவே மனம் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குப் படிப்பிற்காக, வேலைக்காகவெனச் சிதறிப் பறந்தோம்.

ஆண்டுகள் பல கடந்து ஊர் திரும்பும்போது ஊரே புதிய வீடுகள், காம்பவுண்டு சுவர்கள், கீல் சாலைகள், மெட்ரிக் பள்ளி, பாழடைந்த கிணறு, வெட்டாந்தரை, ஆரவாரமற்ற வீதிகள் என்று முற்றிலுமாக மாறியிருந்தது. வீடுகளில் டி.வி. சத்தம், சிறுவர்கள் கைகளில் மொபைல் போன். ஒன்று மட்டும் புரிந்தது. வாகை மரம் வெட்டப்பட்டு தேரானதுபோல, எங்க ஊரு தெரு விளையாட்டுகளும் மொபைல் போனுக்குள் வெவ்வேறு பெயர்களில் தஞ்சம் புகுந்தன.

இன்று விளையாட்டு நேரங்களை இணையத் தள விளையாட்டுகள் ஆக்கிரமித்துவிட்டன. இயற்கையும் விளையாட்டுகளும் இணைந்தே அழிக்கப்படுகின்றன. விடுமுறை நாள்களில் வீட்டை விட்டு வெளியேறி விளையாடும் சூழல் இன்று கிராமங்களில் கூட இல்லை. குழந்தைகள் முதல் சிறார் வரை போனிலேயே விளையாடுகின்றனர். ஒரு காலத்தில் வெளியே விளையாடப் போனால் பெற்றோர் விடுவதில்லை. இப்போதுவெளியே போய் விளையாடுஎன்று குழந்தைகளைப் பெற்றோர்களே வற்புறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றாம் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே பெற்றோரின் துணையில்லாமல் போனில் விளையாட்டுச் செயலிகளைத் தரவிறக்கம் செய்து விளையாடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆன்லைன் விளையாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அது ஏற்படுத்தும் தாக்கங்களும் சைபர் குற்றங்களும் ஏராளம் என்பதை நாம் அறிவதில்லை.

இன்று ஆன்லைன் விளையாட்டுகள் பல விதங்களில் உள்ளன. மேசிவ் மல்டி ப்ளேயர், ஆன்லைன் ரோல் பிளே விளையாட்டுகள் (Massive Multiplayer and online role playing games) என்னும் விர்ச்சுவல் விளையாட்டுகளை விளையாடுபவர்கள் தங்களை அந்த விளையாட்டின் கதாப்பாத்திரங்களாகச் சித்தரித்து ஒருவர் மற்றவரோடு சண்டையில், பந்தயத்தில், போட்டியில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆன்லைன் மைதானத்தில் மட்டும் இல்லை, ஆப்லைன் வாழ்விலும் சண்டைகளும் ஆபத்துகளும் நீள்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.

ஆன்லைன் கேசினோ விளையாட்டுகள் (Online casino Games) வழக்கமான கேசினோ விளையாட்டுகளைப்போல ஆன்லைனில் விளையாடுவது. இது பணம் வைத்துச் சூதாடுவது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-2023) 40 பேர் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. ‘பர்ஸ்ட் பெர்சன் சூட்டர் (First Person Shooter) என்னும் ஆன்லைன் விளையாட்டுகள் முப்பரிமாண விர்ச்சுவல் தளத்தில் ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட்டு விளையாடுவது. இவ்வகை விளையாட்டை விளையாடும் போது நாமே விளையாடுகின்றோம் என்ற உணர்வு ஏற்படுகின்றது. தான் விளையாட்டில் வீழ்த்தப்பட்டால் அல்லது கொல்லப்பட்டால் பல்வேறு மனநல நோய்களுக்கு விளையாடுபவர் தள்ளப்படுகின்றார்.

ஆட்டக்காரருக்கு எதிராக சுற்றுச்சூழல் (Player Vs Environment) என்னும் வகை விளையாட்டு ஆட்டக்காரர்களைச் செயற்கை நுண்ணறிவோடு செயற்கையான ஆன்லைன் களங்களில் விளையாட வைப்பது. இதில் மல்லுக்கட்டி விளையாடி வெல்வது கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றது. இன்னும் இதேபோன்ற பல ஆயிரக்கணக்கான ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன. இந்தியாவில் இந்த 2025-ஆம் ஆண்டில் ஆன்லைன் விளையாட்டுச் சந்தை 25 முதல் 30 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றது என்றும், ஆன்லைன் விளையாடுபவர்கள் 42 கோடியிலிருந்து 50 கோடியாக அதிகரித்திருக்கின்றார்கள் என்று புள்ளி விவரம் ஒன்று ஆன்லைன் விளையாட்டின் அசுர வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டுகின்றது

பல மணி நேர விரயம், ஒரே இடத்தில் பல மணி நேரம் அசைவில்லாமல் இருப்பது, தூக்கமின்மை, மன அழுத்தம், மனப்பிறழ்வு, பண மோசடி (Phishing), சைபர் அடக்குமுறை (Cyber-Bullying), அந்தரங்கத் தரவுகள் களவாடப்படுதல் (Data Breach), கொந்துதல் (Hacking), வைரஸ் தாக்குதல் (Malware), தனிமையுணர்வு போன்றவைகளுக்கு ஆன்லைன் விளையாட்டுகளும் காரணமாய் இருக்கின்றன.

இத்தகைய விளையாட்டு விபரீதங்களிலிருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் பாதுகாப்பது நம் கடமை. வீட்டிலே குழந்தைகள் கேட்கும் ஆன்லைன் விளையாட்டுகளைப் பெரியவர்களே சரியான தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து தருவது நல்லது. ஏதாவது விபரீதம் நடந்தால், அதனைஸ்கிரீன் ஷாட்எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு விவரங்களை அல்லது சொந்த விவரங்களை வெளியிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் நேரத்தை மேலாண்மை செய்யவும், குழந்தைகள் நண்பர்களோடு மைதானங்களில் விளையாடும் பழக்கத்தை உருவாக்கவும், வீட்டுத்தோட்ட வேலைகளில் அவர்களைப் பழக்கப்படுத்தவும் பெற்றோர்கள் முனையவேண்டும்.

வாகை மரமோ அல்லது வாகைமர நிழலோ இன்று நமக்கு எட்டுக் கடல்கள், எட்டு மலைகள் தாண்டிக் கிடைக்கும் அனுபவமாகிவிட்டது. நிழல் படங்களோடு விளையாடுகிறோமே தவிர, நிஜங்களோடு விளையாடுவதில்லை. வாகை மரம் போன்று ஆயிரக்கணக்கான மரங்களின் நிழல்களே ஆயிரமாயிரம் விளையாட்டுகளின் கருவறைகள். ஆன்லைனோடு நம்மை இணைத்துக் கட்டிப் போட்டிருக்கும் டிஜிட்டல் வலைகளை அறுத்தெறிந்துவிட்டு வீதிக்கு வருவோம்! மரங்களோடும் மனிதர்களோடும் விளையாடுவோம்!