news-details
சிறப்புக்கட்டுரை
விளம்பர அரசியல் (அரசியல் இல்லாத வாழ்வியலா? - 03)

வாடிக்கையாளர்கள், தங்கள் பிராண்டுகளை ((Brand) அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகளை அல்லது சேவைகளை அதிக அளவில் மக்கள் வாங்குவதற்காக உண்டாக்கப்பட்ட ஒரு தொடர்பு கருவியே விளம்பரங்கள். ஆனால், அடிக்கடி விளம்பரங்களுக்காக அதிக பணம் செலவழிக்கும் நிறுவனங்கள், அதில் ஒரு நுட்பமான அரசியலை ஊடுருவச் செய்து, உண்மை அல்லாதவற்றைக் கூறி தங்களின் பொருளை விற்பதற்கான முயற்சிதான் விளம்பர அரசியல் என்பதாகும்.

இவர்களின் இத்தகைய இழிசெயலை நிறுத்துவதற்கென எந்தச் சட்டமும் இல்லை என்பதே எதார்த்தம். அப்படியே இருந்தாலும் அதில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து அதன் வழியே வெளியே வந்துவிடும் அளவிற்குக் கிரிமினல் தனம் கொண்டவர்கள்தான் இந்த விளம்பர அரசியலை முன்னெடுப்பவர்கள்இதனால் பாதிக்கப்படுவது இந்தச் சமுதாயத்தின் மக்கள்தாம் என்ற உண்மையை உணரக்கூட மறுப்பவர்கள் இவர்கள்.

21-ஆம் நூற்றாண்டின் புதிய இயல்பு நிலையாக உருவெடுத்து வரும் இணையக் குற்றங்கள் என்றசைபர் கிரைமுக்குஅடிப்படைக் காரணம் இந்த மயக்கும் போலி விளம்பர அரசியல்தான். ஒவ்வொரு மனிதனையும் இடம், பொருள், ஏவல் தேடிக் குறி பார்த்து அலைந்து கொண்டிருக்கிறது இந்த விளம்பர அரசியல். மின்னஞ்சல் மற்றும் இணைய மோசடி, அடையாள மோசடி, கிரெடிட் கார்டு, மிரட்டிப் பணம் பறித்தல், சேவை மறுப்புத் தாக்குதல்கள் போன்ற இணையக் குற்றங்களின் வழியாகப் பொய்ப்பிரச்சாரத்தால், போலி கருத்துகளால் மக்களை மயக்கி ஏமாற்றுவதில் இவை முதல் இடம் வகிக்கின்றன. இவையெல்லாம் ஒரு பக்கம் என்றால், மற்றொரு வகையான விளம்பர அரசியல், மக்களின் மூளையை மழுங்கடித்து, அதன் வழியாகப் பொருள் ஈட்ட, மக்களின் அன்றாடத் தேவையான ஒவ்வொன்றிலும் கைவைத்து கல்லாக் கட்டி வருகிறது.

ஒரு பொருளை வாங்குவதற்கு உங்கள் விழிகளின் வழியே பொருளைக் காட்சிப்படுத்தி, ஆசையைப் புகுத்தி, இதயத்தைக் கவர்ந்திழுத்து, செவிகளின் வழியாகத் தேன்துளிகளாய் பொய்யுரைத்து, மூளையைக் கரைத்து அந்தப் பொருளை எப்படியும் வாங்கியாக வேண்டும் என்ற நுகர்வு வெறியை உண்டாக்குபவை இந்த ஊடகவழி அரசியல் விளம்பரங்கள். இப்படிப்பட்ட விளம்பரங்களைப் பார்ப்பதற்காகவே படைக்கப்படுகின்றன இல்லத்தரசிகளின் கனவுக்கோட்டையான சீரியல் தொடர்கள். சீரியலின் நேரத்தைவிட, விளம்பரங்களின் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக வணிக அரசியலால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்என்கின்ற போலித் தத்துவத்தைக் கொஞ்சம் மெருகேற்றி, ‘கறுப்பாக இருக்கின்ற பெண்கள் எங்கள் நிறுவனத்தின் கிரீமைத் தடவினால் வெள்ளையாகி விடுவாங்கஎனப் பொய் சொல்கின்றன இந்தப் போலி விளம்பரங்கள். அது மட்டுமா? இந்தப் பற் பசையில் பல் துலக்கினால் பொண்ணுங்க மயங்கிடுவாங்கன்னு இளைஞர்களையும், ‘இந்தச் சிப்ஸ் சாப்பிடுறது உங்க இளமையின் அடையாளம்என்று இளம்பெண்களையும், கையில் ஸ்மார்ட் போனும், ஏர்டெல் இணைப்பும் இணையமும் இருந்தால் சோம்பேறியாக இருந்தாலும் பரவாயில்லை என்றும், பல முட்டாள்தனமான விளம்பரங்களில் ஊடுருவிக் கொண்டிருக்கும் அரசியலால் இந்தச் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கின்றது.

அறிவுள்ள இளைய தலைமுறையை அறிவிலிகளாக மாற்றும் போக்கை இந்த விளம்பர அரசியல் தொடர்ச்சியாகச் செய்வதன் பின்னணியில் ஒரு பயங்கரமான மூளைச்சலவை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்றாலே அது குஜராத்தும், .பி.யும்தான் என்று கிடைத்த கேப்ல, விளம்பர அரசியலை இப்போது கொஞ்சம் பொய்ப் பிரச்சாரம் வேற காலடி எடுத்து வச்சிருக்கு. இதுக்குப் பெயர் அரசியல் விளம்பரமாம். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவோரைப் பன்மொழி வித்தகர்களாகவும், கோட்டு-சூட்டுப் போட்ட முட்டாள்களைக்கூட அறிவாளிகளாகவும் காட்டுகிறது இந்த விளம்பர அரசியல். நுகர்வோரின் பகுத்தறிவுத்திறனை மழுங்கடித்து, உணர்ச்சி சார்ந்த செய்திகளை நச்சு விளம்பரங்களாக்கி அதிலும் பணம் பார்க்கிறது ஒரு கூட்டம்.

இந்த விளம்பரக் கூட்டம் இரத்தமும் சதையும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்ட மனிதர்களையும் சமூகத்தையும் ஏன் இந்த நாட்டையும் முதலாளித்துவப் பொருள்கள் வாங்கும் ஒரு சந்தைக் கூட்டமாக மாற்றி வைத்திருக்கிறது. தலை முடி இல்லாத அல்லது முளைக்காத தலைக்கு எர்வாமேட்டினை அமேசான் காட்டிலிருந்து வாங்கி, அதனை தேய்த்துக் கொண்ட தலைகள் இன்றைக்கு வரையில் வறண்டுபோய் அலைந்து கொண்டிருப்பதை நேரில் பார்த்தும் அதனை நம்ப மறுக்கிற அளவுக்கு விளம்பர அரசியல் என்பது ஆழமானது; ஆபத்தானது. இவைகளோடு இணைந்து மக்களை வாட்டி வதைக்கும் மற்றொரு முகம்தான் வணிக அரசியல். வணிக அரசியலின் வில்லனாக வந்து முளைத்திருப்பவை வரிகள் என்று மேலோட்டமாகக் கூறிவிட முடியாது. ஜி.எஸ்.டி. (GST) என்னும் சரக்கு மற்றும் சேவை வரிகள் இன்று வணிகர்களின் பார்வையில் எமனாகத் தெரிகின்றன.

அரசியல் கட்சிகளுக்கு இடையிலான காழ்ப்புணர்வு, பிளவு, எதிர்ப்பு போன்றனவற்றால் வணிகங்களில் நேரடித் தாக்கம் ஏற்படுகிறது என்றும், அதிகாரத்துவம், ஊழல், வரிக்கொள்கைகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் என்பவை இவற்றில் முதன்மை வகிப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு நலம் தரும் ஜி.எஸ்.டி. (GST) என்றார் நம் பிரதமர். ஆனால், நடப்பதென்னவோ எதிர்மறையாக இருக்கிறது என்றார்கள் மக்கள்.

பலவிதமான மறைமுக வரிகளை இரத்து செய்துவிட்டு, இப்போது ஒரே முனையாக்கப்பட்டுள்ளது வரி. ஆனால், பொருள்களின் விலைகள் முன்பிருந்ததைவிட அதிகரித்ததுதான் மிச்சம். சமையல் எரிவாயு, வீட்டு உபயோகக் குடிநீர், பள்ளி மாணவர்களின் நோட்டுப் புத்தகம், பெண்களின் நாப்கின்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகள் என எல்லாவற்றிற்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. மேலும், கிரைண்டர், நீர் இறைக்கும் பம்பு, திரையரங்குகள், சில்லறை வேலைகளில் ஈடுபடும் கடைகளும், நிறுவனங் களும், உணவுப் பண்டங்களிலும் ஈக்களைப் போல் ஒவ்வொரு பொருள்களின் மீதும் வந்தமர்ந்திருக்கிறது ஜி.எஸ்.டி. (GST);  மக்களின் ஓட்டு என்ற மருந்து தெளித்துதான், அந்த ஈயை ஓட்ட வேண்டும் போல் தெரிகிறது.

நாட்டின் தலைநகரங்களில் தொடங்கி, வணிக உலகில் நுழைந்து, நம் வீட்டு வாசலில் வந்து முடிகிறது இந்த விளம்பர மற்றும் வணிக அரசியல். நுகர்வோரின் நுகர்த்தலே விளம்பர அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும் காய் நகர்த்தல். நகர்த்துவார்களா, நுகர்வோர்?