news-details
ஆன்மிகம்
கெத்சமனித் தோட்டம்: கற்றுத்தரும் பாடம்

தவக்காலம் இயேசுவின் பாடுகளைத் தியானிக்கும் காலம். துன்பங்கள் இல்லாத மனித வாழ்க்கை இல்லை. துன்பத்தை எதிர்கொள்வதா? அல்லது துன்பத்தை விட்டு விலகி ஓடுவதா? துன்பத்தை விட்டு விலகி ஓட நினைப்பதே மனிதர்களின் பலவீனம்.

இயேசு கெத்சமனித் தோட்டத்தில்  பாடுகளை நினைத்து இரத்த வியர்வை சிந்துகிறார்துன்பத்தை விட்டு விலக நினைக்கிறார். “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம்  என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உம் விருப்பப்படியே நிகழட்டும் (மத் 26.39) என்று தந்தையிடம் வேண்டுகிறார்.

கெத்சமனித் தோட்டத்திலிருந்தே பாடுகள் தொடங்குகின்றன. கெத்சமனி என்பதற்குஎண்ணெய் ஆலைஎன்று பொருள். ஒலிவ மரக் கொட்டைகளை நசுக்கி எண்ணெய் எடுக்கப்படுவதைப் போல் இயேசு நமது பாவங்களால் நசுக்கப்பட்டு இரத்தம் சிந்தப்படுவதன் குறியீடு.

இன்றும் மறைந்த அருளாளர் ஸ்டேன் சுவாமி போன்று அருள்பணியாளர்களும் அருள்சகோதரிகளும் போராளிகளும் நீதிக்காகத் துன்பங்களை வீரத்துடன் எதிர்கொள்கிறார்கள். துன்பத்தைக் கண்டு ஓடி ஒளியவில்லை. அவர்கள் செபத்தின் மூலம் துன்பத்தை ஏற்றுக்கொள்ள வல்லமையைப் பெறுகிறார்கள். “தினமும் ஒரு மணி நேரம் நற்கருணை நாதர் முன் செபம் செய்கிறேன். நாள் முழுவதும் நோயாளிகளிடம் பணியாற்ற வல்லமையைப் பெறுகிறேன்என்றார் அன்னை தெரேசா.

ஆனால், இன்று ஒருசிலர் செபம் மூலமாக நோய்களைக் குணப்படுத்துவது, முடவர்களை நடக்க வைப்பது, பேய்களை விரட்டுவது, துன்பங்களிலிருந்து விடுதலை அளிப்பது என்று வழிபாடுகள், செபக்கூட்டங்கள், தியானங்கள் நடத்துகிறார்கள். மக்களும் துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலிருந்து மாறி செபம் மூலம் துன்பங்களிலிருந்து எளிதாக விடுதலை கிடைத்துவிடாதா? என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்போலி விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, கூட்டம் கூட்டமாகச் செபக்கூட்டங்களுக்குச் செல்கிறார்கள். திருப்பலியைவிட இந்தச் செபக்கூட்டமே முக்கியம் என்று  கருதுகிறார்கள். திரு அவையை விட்டுச் செல்பவர்களும் உள்ளனர்.

இறைவன் விருப்பம் இருந்தால் மட்டுமே புதுமைகள் நடக்கும்இயேசு அற்புதங்களை விளம்பரத்திற்காகச் செய்யவில்லை. மாறாக, குணமடைந்தவர்களிடம் இதை யாரிடமும்  சொல்ல வேண்டாம் என்றே எச்சரித்திருக்கிறார். புதுமைகளை மையப்படுத்தி வியாபாரமாக்கப்படும் செபக்கூட்டங்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (மத் 16: 24) என்கிறார் இயேசு. நாம் துன்பங்களை விட்டு பயந்து ஓடாமல் அதை எதிர்கொள்வதையே இயேசு விரும்புகிறார். துன்பங்களைக் கண்டு பயந்து ஓடுபவன் உண்மையான கிறித்தவனாக இருக்க முடியாது.

கெத்சமனியில் மனத்தளவில் துவண்ட இயேசு, தந்தையின் சித்தத்தை உணர்ந்து அதை நிறைவேற்ற மனவுறுதியுடன்  சிலுவை மரணத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டார்.

நாமும் இந்தப் புனித வாரத்தில் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல், இயேசுவின் துணையோடு  வெற்றிகரமாகத் துன்பங்களை எதிர்கொள்வோம். நீதிக்காகப் போராடும் போராளிகளாக மாறுவோம்.