வரலாற்றை வகிடெடுத்து தனக்கு முன் என்றும், பின் என்றும் கோடு கிழித்த சரித்திர நதி, உலகில் பல பெரும்புள்ளிகளைப் பிரசவித்திருக்கிறது. பல்வேறு உன்னதங்களை உடைமையாக்கிக் கொண்ட ஆளுமையாக வரலாற்றின் வரப்புகளின் ஊடே பலர் பயணித்திருக்கிறார்கள். எவர் போலும் இல்லாமல் தனிப்பெரும் ஆளுமையாய்ப் பூமிப் பந்தின் எல்லாப் பக்கங்களையும் ஆக்கிரமித்துக் கொண்ட ஓர் ஒப்பில்லா அதிசயம் இயேசு என்பதற்குக் கடலளவு காரணங்களை அடுக்கிவைக்கலாம்.
பூகோள
வரைபடத்தில் புள்ளிவைக்கக்கூட இடமில்லாத பெத்லகேம், பூமிப்பந்தையே புரட்டிப்போட்ட பூகம்ப விடியலாய் புறப்பட்டது. கடவுளின் இரகசியம் மானுடத்தில் மொட்டவிழ்த்து, தெய்வீகத்தின் மானுட மொழிபெயர்ப்பாய் மரியாவின் மடியில் கண்விழித்த இந்தக் கருணையின் கவிதை பூமியின் முகத்தை மாற்றிடப் புறப்பட்ட புதிய வேதம் என்பதைத் தம் செயல்பாடுகளால் எண்பித்தது. அழவும் தொழவும் மட்டுமே பயன்பட்ட இறைவேண்டல் கூடங்களை, எழுச்சியும் புரட்சியும் கொண்ட ஏற்றமிகு மாற்றுச் சிந்தனைக் களமாக மாற்றினார். முற்காலத்தில் எழுதப்பட்ட வேத வரிகளைப் புள்ளிகள் மாறாமல் புரட்டிக் கொண்டிருந்த வேத விற்பன்னர்களை விழி பிதுங்க வைத்தது அவரது புத்துலகு அமைக்கும் புரட்சிக் கருத்துகள். உழைக்காமல் உலகைச் சுற்றித்திரிந்து ஊரார் பணத்தில் வயிறு வளர்த்துக்கொண்டு ஓய்வுநாள் ஒழுங்கு என்று பிதற்றிக்கொண்டு வறியோர்மீது சுமைகளை ஏற்றிவைத்த எத்தர்கள் எரிச்சல் அடையும் வண்ணம் ஓய்வுநாளிலும் ஓய்வறியாது இயங்கினார்.
ஆமைகள்
ஓய்வெடுக்கலாம்; ஆழி ஓய்வெடுக்காதே! முடவரை நடக்க வைப்பதும், விழியிழந்தோரை ஒளிகொடுத்துப் பார்க்க வைப்பதும், தொழுநோயாளரைத் தொட்டு நலப்படுத்துவதும் தம் வாழ்நாள் வேலையாகக் கொண்டு வழிநடந்த இயேசுவின்மீது வேத முகமூடிகளோடு திரிந்த வெளிவேடக்காரர்களுக்கு ஆத்திரம் மூக்கின்மீது முக்காலி போட்டு அமர்ந்திருந்தது.
‘பல்லை உடைத்தவனின் பல்லை உடைத்திட வேண்டும்; கண்ணை நோண்டியவனின் கண்ணை நோண்ட வேண்டும்’
என்று நீள்கிற வன்முறை வரிகளையே கடவுள் தந்த வேதமெனக் காலங்காலமாய் போற்றிவந்த சமூகத்தில், ‘ஒரு கன்னத்தில் அடித்தவருக்கு மறுகன்னத்தையும் காட்டு’ என்று புதிய வேதம் கூறிய இயேசுவை, வேத விரோதியாய் விமர்சனம் செய்தனர். அபலைப் பெண்ணைப் பாலியல் குற்றவாளியாய்ச் சித்தரித்து, அவரைக் கல்லெறிந்து கொல்வதே கடவுளின் கட்டளையென்று வேடதாரிகள் இறைவன் பெயரால் மனித உரிமைகளை மீறியபோது அதைத் தடுத்து நிறுத்தும் தேவதாரு மரக்கிளையாய் நிமிர்ந்த இயேசு எதிர்வினையாற்றினார். ‘உங்களில் குற்றமற்றவர் அவள்மேல் முதல் கல்லை எறியட்டும்’ என்று
யாருமே எழுப்பாத உரிமைக்குரலைப் பதிவு செய்தார். சாத்தான்கள் ஓதிய வேதத்தைத் தடுத்து நிறுத்தி, இறைவனின் ஆட்சிக்கான அறிகுறிகளை நெஞ்சை நிமிர்த்தி நடத்திக்காட்டினார்.
வெளிச்சம்
பரவுவதை இருள் எப்போதும் விரும்புவதே இல்லை. தாங்கள் காலங்காலமாகக் கட்டிக் காத்து வந்த அழுக்கு மரபுகளை இந்தப் புதுமை நெருப்பு எரித்துவிடும் என்று அவரது சம காலத்து மரபின்
மைந்தர்கள் அச்சப்பட்டார்கள்; அதனால் ஆத்திரமும் பட்டார்கள். இயேசு எனும் பிரளயம் தங்களின் அதிகார நாற்காலிகளை அடித்துச் சென்றுவிடும் என்று கவலை கொண்ட ஆதிக்கப் பேர்வழிகளும் அரிதாரம் பூசிக்கொண்ட ஆலயப் பேர்வழிகளும் கூட்டுச் சேர்ந்து இயேசுவுக்குக் குழிபறிக்க வழிதேடினார்கள்.
தம்மையே
கடவுள் என்றும், கடவுளின் மகன் என்றும் கூறிக்கொண்டார் என்று குற்றப்பத்திரிகை வரைந்து கொண்டு ஊரெல்லாம் கூவித்திரிந்தார்கள். அப்பாவிகள், அபலைகள், குரலற்றோர்கள், அன்றாடங்காய்ச்சிகள் எனப் பட்டியலிடப்பட்ட கடவுளின் பிள்ளைகள் இதனைக் கண்டுகொள்ளவில்லை. அந்நாளில் பாலஸ்தீனத்தைத் தங்கள் பிடியில் வைத்திருந்த உரோமையின் ஆட்சியாளர்கள் அங்கே தங்களின் கைக்கூலிகளை நியமித்து வைத்திருந்தார்கள். இயேசு அவர்களின் அதிகார நாற்காலியைக் கைப்பற்ற முயல்கிறார் என்றும், உரோமை ஆட்சியாளரைக் கவிழ்த்துவிட்டு அவர் அரியணை ஏறப்போகிறார் என்றும் கட்டுக்கதைகள் புனைந்து ஆட்சியாளர்கள் காதில் போட்டுப் பார்த்தனர். பிலாத்துவிடம் இந்தக் கதை பிசுபிசுத்துப் போயிற்று. ‘தமது அரசு இந்த உலகின் போக்கைக் கொண்டது அல்ல’ என்று தெளிவுபடுத்திய பிறகும் கொக்கரித்தவர்களின் கோபம் அடங்கவில்லை. ஒத்துப்போகாதவர்களை ஒழித்துவிடுவதே ஒரே வழி என கங்கணம் கட்டிக்கொண்டு
இயேசுவின் சாவுக்காகக் காத்தே இருந்தனர் அந்தக் கடின நெஞ்சுக்காரர்கள். சதிகாரர்களும் அதிகாரம் கொண்டோரும் கூட்டுச் சேர்ந்து பூமியைப் புனரமைக்க வந்த புதிய வேதத்தைப் புதைகுழியில் தள்ளிவிட வகுத்த வியூகம் தற்காலிக வெற்றியைத் தந்தது.
இயேசு
தெய்வீகமும் மானுடமும் கலந்த புதுமை கலவை. பூமியின் அதிகாரம் எவரையும் உயிரைப் பறிக்கும் வலிமை கொண்டது என்பதை இயேசுவின் கொலை வரலாற்றில் பதிவு செய்தது. சாதாரண மனிதர்களின் சரித்திரம் சாவோடு முடிவுக்கு வந்துவிடும். ஆனால், இயேசுவுக்குச் சாவே சரித்திரமாகிவிட்டது. தேசியக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையின் கருவியாகச் சிலுவை இருந்தது. இயேசுவின் மரணத்தால் கொலைக்கருவியான சிலுவை பூமியெங்கும் வணங்கப்படும் புனித சின்னமாய் புத்தெழுச்சி பெற்றது. கருணையின் கவிதையான இயேசுவின் உயிர்த்தியாகத்தால் கல்வாரிக்குன்றில் கழுமரமே பூப்பூத்த அதிசயம் நிகழ்ந்தது.
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே நடந்த ஒரு கறுப்பு நிகழ்வு, இயேசுவின் அவமானத்திற்குரிய சிலுவைச் சாவு. இது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வு. வறியோரும் குரலற்ற விளிம்பு நிலையினரும் ஆதிக்கச் சக்திகளால் அன்றாடம் கொல்லப்படுகிற கொடிய நிகழ்வுகள், இயேசு கொலையுண்ட புனித வெள்ளியின் தொடர்ச்சியே!
இன்று
பூமியெங்கும் திரும்புகிற திசையெங்கும் மனித உரிமை மீறல்கள்! உரிமைக்குக் குரல் எழுப்புவோரின் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன. விடுதலைப் போராளிகள் கொடுஞ்சிறையில் தள்ளப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். பெண்ணினம் சிதைக்கப்பட்டு கொலைக்களத்தில் பலியாடுகளாகின்றன. ‘இயேசுவின் சீடர்களாய் இருக்கிறோம்’ என்பவர்கள்
நிறுவனங்களையும், மரபுகளையும், வழிபாட்டு முறைகளையும் மட்டுமே கட்டிக் காப்பதைக் கடமையாகக் கருதாமல் மானுட உரிமையைக் காக்க இனியும் தாமதியாமல் புறப்பட வேண்டும்.
‘தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர் அதனை இழந்துவிடுவர்’ என்று
இயேசு கூறிய வரலாற்று வரிகளை நினைவில் கொள்ள வேண்டும். கொள்கைகளை விற்றுக் கோபுரங்களைக் கட்டுவதால் பயனில்லை. நீதிக்குக் குரல் கொடுக்க நிமிர்ந்து நின்றால் நம்மைத் தலைகுனிய வைக்க தவளைகள் கூட முயற்சிக்கும். வறியோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் உரிமையிழந்தோருக்காக வீதியில் வந்து போராடத் தொடங்கினால், நாம் பல சங்கடங்களைச் சந்திக்க
நேரிடும். இனவெறி, மதவெறி, வெறுப்பு அரசியல் முதலியனவற்றை எதிர்த்து நிற்கும்போது நமது வாழ்வுரிமையே வருத்தத்திற்குள்ளாகும். ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக இயேசுவைப்போல எழுகிறபோது நமது அமைப்புகள், நிறுவனங்கள், உடைமைகள், நாம் சம்பாதித்த சொத்துகளும், நற்பெயரும் கூட சிதைக்கப்படலாம். உண்மைக்குச் சாட்சியம் கூறும் ஒவ்வொரு கிறிஸ்துவின் தொண்டர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் புனித வெள்ளியாக மாறும்.
அஞ்சி
நடுங்கும் கோழைகளாக இயேசுவின் குழந்தைகள் குறுகிவிடக்கூடாது. எல்லா இரவுகளும் விடிகின்றன. மறைந்த சூரியன் மறுநாள் காலையில் கிழக்கு வானில் முகம் காட்டுவதுபோல வாய்மையே வெற்றிபெறும். கழுமரமோ, கல்லறையோ இயேசுவின் இறையாட்சி வேள்விகளுக்கு வேட்டு வைத்திட இயலவில்லை. நீதிக்காக நிமிர்ந்து நின்று புனித வெள்ளிகளைச் சந்தித்தால் உயிர்ப்பின் ஞாயிறு எல்லாருக்கும் பிரகாசிக்கும். சாவு சரித்திரமாகி புதிய வாழ்வு பூமியில் புலப்படும்.