“இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். எனவே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம்” (2கொரி 5:18,20).
உயிர்ப்புப்
பெருவிழாவைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமையை ‘இறை இரக்கத்தின் ஞாயிறு’ எனக் கொண்டாடுகிறோம். மனிதர்கள் கையிட்டுக் கடவுளுடைய இதயத்தைத் தொடும் அளவுக்குக் கடவுள் மனுக்குலத்தோடு நெருக்கமாகிறார். இறைவனின் அளப்பரிய இரக்கமே இந்த நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. கடவுளுடைய இரக்கத்தை நாம் அனுபவிப்பதும் அறிவிப்பதும் எப்படி? இப்பணியைச் செய்வதற்காகச் சிறப்பாக ஏற்படுத்தப்பட்ட ‘இரக்கத்தின் தூதர்கள்’
யார்? என்னும் கேள்விகளுக்கு விடை தேடுவதுடன், நம் குடும்பங்களிலும் பங்குத்தளங்களிலும் சமூகத்திலும் நாம் அனைவருமே ‘இரக்கத்தின் தூதர்கள்’
ஆவோம்.
அ) ‘இரக்கத்தின்
தூதர்கள்’- என்ன? யார்?
ஏன்?
இரக்கத்தின்
சிறப்பு யூபிலி ஆண்டின் (2015-2016) ஒரு நிகழ்வாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016, பிப்ரவரி 10 அன்று, 800 அருள்பணியாளர்களை ‘இரக்கத்தின் தூதர்கள்’
என்று நியமித்து உலகெங்கும் அனுப்பினார். இவர்களில் 17 பேர் இந்தியர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 அருள்பணியாளர்கள் இரக்கத்தின்
தூதர்களாகப் பணியாற்றுகிறார்கள்: 1. அருள்பணி. அருள் அம்புரோஸ் (பாளையங்கோட்டை), 2. அருள்பணி. நித்திய சகாயம் ஆண்டனி (கப்புச்சின் சபை), 3. அருள்பணி. லியோ வில்லியம் (சேலம்), 4. அருள்பணி.
ஜோசப் மைக்கேல் செல்வராஜ் (எ) ஜோமிக்ஸ் (பாளையங்கோட்டை),
5. அருள்பணி. பன்னீர்செல்வம் செல்வராஜ் (சேலம்), 6. அருள்பணி.
யேசு கருணாநிதி (மதுரை).
இவர்களுக்கு
இரண்டு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன: அ)
‘இரக்கம்’ பற்றிய
சிறப்பு மறையுரைகள் ஆற்றுவது. ஆ)
சிறப்பு ஒப்புரவு அடையாளக் கொண்டாட்டங்களை நிகழ்த்துவது.
இந்தக்
கொண்டாட்டத்தில் திருத்தந்தை மட்டுமே மன்னிக்கும் அதிகாரத்துக்கு உள்பட்ட ஐந்து பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டது. ‘புனிதப் பொருள் அவமதிப்புச் செய்தல் - நற்கருணையை அதற்குரிய இடத்திலிருந்து அகற்றுதல் அல்லது அதற்குரிய மதிப்பைத் தராமல் இருத்தல், திருத்தந்தைக்கு எதிராகக் கை ஓங்குதல், ஆறாம்
கட்டளைக்கு எதிரான பாவத்தில் தன்னோடு உடனிருந்தவரை அருள்பணியாளரே மன்னித்தல், ஒப்புரவு அருளடையாளத்தின் முத்திரையை உடைத்தல், அதாவது ஒப்புரவு அருளடையாளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒன்றை அருள்பணியாளர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றொருவரிடம் வெளிப்படுத்துதல் மற்றும் ஒப்புரவு அருளடையாளத்தில் அருள்பணியாளர் அல்லது பாவ அறிக்கை செய்பவர் பகிர்ந்துகொள்வதை ஒலி அல்லது ஒளி வடிவில் பதித்து, அதைப் பரவலாக்கம் செய்தல் என்பவையே சிறப்பு அதிகாரத்திற்கு உட்பட்ட பாவங்கள்.
மேற்காணும்
ஐந்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தினை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் அனைத்து அருள்பணியாளர்களுக்கும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். எனினும், ‘இரக்கத்தின் தூதர்கள்’
என்னும் அருள்பணியாளர்கள் அவர்களுக்குரிய சிறப்பு நிலையைப் பெற்றுள்ளார்கள்.
2022-ஆம் ஆண்டில்
திருத்தந்தை பிரான்சிஸ் உரோமையின் திருப்பேராயங்களை நெறிப்படுத்தும் ‘நற்செய்தியை அறிவியுங்கள்!’ (‘ப்ரெதிகாத்தே எவான்ஜெலியும்’) என்னும்
ஆணையை வெளியிட்டார். அதில் ‘இரக்கத்தின் தூதர்கள்’
அகில உலகத் திரு அவையில் ஆற்ற வேண்டிய நற்செய்திப் பணியை வலியுறுத்துவதோடு, இவர்களைத் திரு அவையின் அதிகாரப்பூர்வ சிறப்புப் பணியாளர்களாக அறிவிக்கிறார்: “இறை இரக்கத்தை அறிவிப்பதன் வழியாகவே நற்செய்தி அறிவிப்பு நடக்கிறது. இரக்கத்தின் தூதர்கள் ஆற்றுகிறச் சிறப்புப் பணி நற்செய்தி அறிவிப்புக்குத் துணை செய்கிறது”
(எண். 59.2).
‘எதிர்நோக்கு ஏமாற்றம் தருவதில்லை’என்னும்
யூபிலி 2025 அறிவிப்பு ஆணையிலும் இவர்களுடைய பணியின் முக்கியத்துவத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார்: “கடந்த சிறப்பு யூபிலி ஆண்டில் நான் இரக்கத்தின் தூதர்களை ஏற்படுத்தினேன். அவர்கள் ஒரு முதன்மையான பணியைத் தொடர்ந்து செய்கிறார்கள். எதிர்நோக்கைப் புதுப்பிப்பதன் வழியாகவும் திறந்த மனத்தோடும் நொறுங்குண்ட உள்ளத்தோடும் தங்களிடம் வருகிற பாவிக்கு மன்னிப்பை வழங்குவதன் வழியாகவும் வருகிற யூபிலி ஆண்டில் அவர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்வார்களாக! தந்தையின் இரக்கத்தினால் தூண்டப்படும் இதயம் நிறை எதிர்நோக்கை வழங்குவதால் ஒப்புரவின் ஊற்றாகவும், நல்ல எதிர்காலத்தைக் காண்கிற உற்சாகத்தை நமக்குத் தருபவர்களாகவும் விளங்குவார்களாக! அவர்களுடைய இந்த மேன்மையான பணியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆயர்களை அழைக்கிறேன். எதிர்நோக்குச் சோதிக்கப்படும் இடங்களுக்கு - சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், மக்களின் மாண்பு சிதைக்கப்படும் இடங்கள், வறுமையும் சமூகச் சீரழிவும் மிகுந்திருக்கும் இடங்களுக்கு அவர்களை
அனுப்புங்கள். இந்த யூபிலி ஆண்டில், கடவுளின் மன்னிப்பையும் ஆறுதலையும் பெறுகிற வாய்ப்பு யாருக்கும் மறுக்கப்பட வேண்டாம்”
(எண். 24).
‘தூதர்கள்’
என்னும் சொல்லைத் திருத்தந்தை பிரான்சிஸ் கூட்டியக்கத்திற்கான மாமன்றத்தின் இறுதி ஆவணத்தில் ‘கூட்டியக்கத்தின் தூதர்கள்’
என்று பயன்படுத்தி அனைவரையும் இணைந்து பயணிக்க அழைக்கிறார் (கூட்டியக்கத்திற்கான மாமன்றம், இறுதி ஆவணம், எண்கள் 9, 11, 155). இரக்கத்தின்
தூதர்களுடைய சிறப்பான பணியைப் பின்வருமாறு வரையறுக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்: “மன்னிப்பைத் தேடிவருகிற அனைவரையும் வரவேற்கும் தந்தையைப்போல இருங்கள்! நீங்கள் அனைவரும் வரவேற்கிற தந்தையின் அடையாளங்கள்” (இரக்கத்தின்
முகம், 18). ஒப்புரவு அருளடையாளத்தையும் தாண்டி, இரக்கத்தை அறிவித்தல், மேய்ப்புப்பணியில் உடனிருத்தல், இரக்கத்தின் பண்பாட்டை வளர்த்தல் போன்றவற்றில் ஈடுபட அவர்களை அழைக்கிறார்.
ஆ) கடவுளின்
பெயர்
‘இரக்கம்’
விப
34:6-இல் ஆண்டவராகிய கடவுள் தம் பெயரை மோசேவுக்கு வெளிப்படுத்தும் நிகழ்வில் “ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம்கொள்ளத் தயங்குபவர், பேரன்பு மிக்கவர், நம்பிக்கைக்குரியவர்” என்று
அறிவிக்கிறார். நீதி அல்லது அதிகாரத்தை அடிப்படையாக அல்ல; மாறாக, இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது ஆண்டவருடைய பெயர். இரக்கம் என்பது கடவுளுடைய பண்புகளுள் ஒன்று அல்ல; மாறாக, அது கடவுளுடைய ‘தான்மை’ அல்லது ‘அடையாளம்’
ஆகும்.
திருவிவிலியத்தின்
பல பகுதிகள் ஆண்டவராகிய கடவுளின் இரக்கத்திற்குச் சான்றாக அமைகின்றன. தன் குழந்தையை மறந்துபோகாத ஒரு தாயின் அன்பைப் போல கடவுளின் அன்பு இருக்கிறது (எசா 49:15). ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’
(திபா 136) என்று கடவுளின் இரக்கத்தை நமக்கு நினைவுறுத்துகிறது. கடவுள் நீதியின்படி தங்களைத் தண்டித்துவிட்டார், பாபிலோனிய அடிமைத்தனத்திற்குத் தங்களை விற்றுவிட்டார் என்று யூதா நாட்டினர் புலம்பும் நேரத்திலும்கூட எதிர்நோக்கு அங்கே ஒளிர்கிறது: “ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன!” (புலம்பல் 3:22-23).
புதிய
ஏற்பாட்டில் ‘காணாமற்போன மகன்’ உவமை (லூக் 15) மற்றும் ‘நல்ல சமாரியன்’
உவமை (லூக் 19) என்னும் இயேசுவின் போதனைகள் கடவுளின் பரிவுள்ளத்தை எடுத்துரைப்பதோடு, கடவுளைப்போல பரிவு காட்டவும் நம்மை அழைக்கின்றன. விபசாரத்தில் பிடிபட்ட பெண்மேல் இரக்கம் காட்டுகிறார் இயேசு (யோவா 8:1-11). பரிவு கொண்டு நோயுற்றவர்களைக் குணமாக்குகிறார் (மத் 14:14). எருசலேமுக்காகக் கண்ணீர் விடுகிறார் (லூக் 19:41-44). இறப்பு என்னும் எதார்த்தத்தின்முன் மானிடர் அனுபவிக்கிற வலுவற்ற நிலையை எண்ணிப் பார்த்து இலாசருக்காகக் கண்ணீர் விடுகிறார் (யோவா 11:35). இறுதியாக, சிலுவையில் தொங்கியபோது அனைவரையும் மன்னிக்கிறார் (லூக் 23:34).
ஆகவே,
இயேசுவின் போதனைகளும் செயல்களும் அவரை ஓர் இரக்கத்தின் தூதராக நம் முன்னிறுத்துவதோடு, அவரைப்போல அனைவருக்கும் இரக்கம் காட்ட நம்மைத் தூண்டுகின்றன.
இ) இரக்கத்தில்
கனியும்
நீதி
திராட்சைத்
தோட்டப் பணியாளர் உவமையில் (மத் 20:1-16), காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை பணிக்கு வந்தவர்களுக்கு ‘நீதியின்’
அடிப்படையில் ஒரு தெனாரியம் வழங்குகிறார் நிலக்கிழார். மாலை 5 மணிக்கு வந்து வெறும் ஒரு மணி நேரமே வேலை செய்தவர்களுக்கு ‘இரக்கத்தின்’ அடிப்படையில்
அவர் ஒரு தெனாரியம் வழங்குகிறார். நீதிக்கும் இரக்கத்திற்கும் பொருந்தாமை அல்லது முரண் இருப்பதை நாம் காண்கிறோம். கடவுள் ஏன் ஒருசிலரை நீதியின் அடிப்படையிலும், இன்னும் சிலரை இரக்கத்தின் அடிப்படையிலும் நடத்துகிறார்? என்னும் கேள்வி நம்மில் எழுகிறது.
மேலும்,
‘காணாமற்போன மகன்’ உவமையில் (லூக் 15) இளைய மகன் திரும்பி வந்தவுடன் தந்தை விருந்து அளித்து மகிழ்கிறார். தந்தையின் இச்செயல் மூத்த மகனுக்கு நெருடலாக இருக்கிறது. நினிவே நகர்மேல் இரக்கம் காட்டிய கடவுள்மேல் கோபம் கொண்ட இறைவாக்கினர் யோனாபோல (யோனா 4:1-11) தந்தையின்மேல் கோபம் கொள்கிறார் மூத்த மகன். வீட்டுக்குள் நுழைய மறுக்கிறார். வீட்டுக்கு வெளியே வந்து அவரை உள்ளே அழைக்கிற தந்தை ‘நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டியது முறையே!’ என்கிறார். நீதியின்படி ‘முறை இல்லை’ என்று நாம் நினைப்பது இரக்கத்தின் கண்கொண்டு பார்க்கும்போது முறை என்றாகிறது.
நம்
உறவு நிலைகளில் பல நேரங்களில் நாம்
நீதியின் அடிப்படையில் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் கோபமும் வன்மமும் பகைமையும் பாராட்டுகிறோம். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இரக்கம் காட்டுவது நீதிச் செயலே. மாலை ஐந்து மணிக்கு வேலைக்கு வந்தவர் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தார் என்று கணக்கு பார்ப்பது நீதியான செயலே. அதே வேளையில், அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஒரு தெனாரியம் தேவை என்று இரக்கம் காட்ட வேண்டியதும் நீதியின் செயலே. அவரிடம் கணக்குப் பார்க்க வேறு ஒன்றும் இல்லை. சொத்துகளை இழந்து பசியோடு வீடு திரும்புகிற இளைய மகன் கைகள் வெறுமையாயிருக்கக் கண்டு அவர்மேல் கோபம் கொள்வது நீதியான செயலே. ஆனால், அவர்மேல் கோபம் கொள்வதால் அவர் சொத்துகளை மீண்டும் கொண்டு வந்து சேர்த்துவிடுவாரா? வலுவற்ற நிலையில் நிற்கிற அவர்மேல் இரக்கம் காட்டுவதும் நீதிதானே!
“இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்!” என்று ஆண்டவராகிய கடவுளும் இஸ்ரயேல் மக்கள்மேல் சில நேரங்களில் கோபம் கொள்கிறார் (எரே 15:6). வலுவற்றவர்கள்மேல் இரக்கம் காட்டும்போது நாம் வலுவற்றவராகிறோம். நல்ல சமாரியன் உவமையில், சாலையில் குற்றுயிராய்க் கிடந்தவரைக் கண்டு கழுதையிலிருந்து கீழே இறங்குகிற சமாரியர் தன்னையே வலுவற்ற நிலைக்கு உட்படுத்துகிறார். ஏனெனில், அவரையும்கூட கள்வர்கள் வந்து கொள்ளையிட நேரிடலாம். ‘இவருக்கு இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?’ என நினைத்தால் அது
வியாபாரம். ஆனால், ‘இவருக்கு இதைச் செய்யாவிட்டால் அவருக்கு என்ன ஆகும்?’ என நினைத்தால் அது
பரிவு. நல்ல சமாரியர் பரிவு கொள்கிறார்.
இன்று
நம் வாழ்வில் நாம் இரக்கம் காட்டும்போது நாம் ஏமாற்றப்படலாம்; மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்; மற்றவர்கள் நமக்குப் பதிலிரக்கம் காட்டாமல் போகலாம்; இருந்தாலும் நாம் இரக்கம் காட்ட வேண்டும்.
ஈ) நாம்
அனைவரும்
இரக்கத்தின்
தூதர்களே!
திருத்தந்தையால்
அனுப்பப்பட்ட அருள்பணியாளர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே இரக்கத்தின் தூதர்களே. ஒருவர் மற்றவரை மன்னிக்கும் போதும், பரிவு, கனிவு என்று நம் கரங்களை வலுவற்றவர்கள் நோக்கி நீட்டும்போதும், பகைமையால் புரிதலின்மையால் அந்நியப்பட்டு நிற்பவர்கள் இடையே ஒப்புரவை ஏற்படுத்தும்போதும் நாம் அனைவரும் இரக்கத்தின் தூதர்களே.
இறை
இரக்கத்தின் திருநாளைக் கொண்டாடுகிற நாம், கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட இரக்கத்தை ஒருவர் மற்றவருக்கு வழங்க முயற்சி செய்வோம். ஏனெனில் “நீரும் போய் அவ்வாறே செய்யும்!” (லூக் 10:37) என்பதே இயேசுவின் கட்டளையாக இருக்கிறது.