news-details
சிறப்புக்கட்டுரை
குரலற்றவர்களின் குரல்..!

அன்று அதிகாலையில் மிகவும் பரபரப்பாக இருந்தேன். உலகின் மாபெரும் தலைவரை, திரு அவையின் தந்தையை நேருக்கு நேராகச் சந்திக்கவும், அவரோடு சில மணித்துளிகள் செலவிடவும் கிடைத்த அருமையான வாய்ப்பை எண்ணி அந்தப் பரபரப்பு... ஏக்கம்...!

இயேசு சபையின் பொது அமர்வு 2016 அக்டோபர், நவம்பர் மாதங்களில் உரோமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 215 நபர்களில் நானும் ஒருவன். 2016, அக்டோபர் 24 ஒரு மறக்க முடியாத சிறப்பான நாள். அன்று காலை 8:45 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திருத்தந்தை பிரான்சிஸ் எங்களுடன் இருப்பார், உரையாடுவார், ஒவ்வொருவரையும் சந்திப்பார் என்பதால் இரட்டிப்பான மகிழ்ச்சி... பரபரப்பு! அவர் அன்று ஆற்றிய உரைக்கும், தான் இறப்பதற்கு முந்தைய நாள் 2025, ஏப்ரல் 20 அன்று ஆற்றிய உரைக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. இதையே இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

பொதுநலனை முன்வைக்கும் திருத்தந்தை

பதற்றமும் (Tension), உள்மனப் போராட்டமும் எல்லாருடைய வாழ்விலும் எப்போதும் உண்டு. குறிப்பாக, நமது கிறித்தவ வாழ்வில் இறை தியானத்திற்கும் - செயல்பாடுகளுக்கும் இடையே, நம்பிக்கைக்கும் - நீதிக்கும் இடையே, தனிவரத்திற்கும் - நிறுவனத்திற்கும் இடையே, குழும வாழ்விற்கும் - நமது பணிகளுக்கும் இடையே பதற்றம், மோதல்கள் எப்போதும் உண்டு. இப்பதற்றங்களால் உருவாகும் மன உளைச்சல், முரண்பாடுகள், போராட்டங்கள் இயல்பானவை. ஆனால், அவற்றைப் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளின் அடிப்படையில், இயேசுவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி நாம் வாழும் காலத்தின் அறிகுறிகளை அலசி ஆய்ந்தறிந்து இப்பதற்றங்களுக்குப் பதிலிறுப்பது இன்றியமையாதது என்றுரைத்தார் திருத்தந்தை.

நாம் எத்தகைய செயல்பாடுகளைச் செய்தாலும் அவை ஒட்டுமொத்த மனித குலத்திற்கு இன்னும் அதிகமான, சிறப்பான பொதுநலனை முன் வைத்தும், இறை இரக்கத்தின் உதவியுடனும் இன்றைய பதற்றங்களைத் தணிக்க நாம் தனிநபராக, சபையாக, திரு அவையாகச் செயல்பட முன்வர வேண்டும் என்ற ஆழமான அழைப்பை முன் வைத்தார். இக்கருத்தைத் தனது 12 ஆண்டு காலத் திருத்தந்தை பணிவாழ்வில் வலியுறுத்தி வாழ்ந்து காட்டியதோடு, உயிர்ப்பு நாள் 2025, ஏப்ரல் 20 அன்று தனது இறுதிச் செய்தியாகவும் வெளிப்படுத்தினார். பதற்றம் நிறைந்த இவ்வுலகில் அமைதியை உருவாக்க, குறிப்பாக லெபனான், சிரியா, ஏமன், உக்ரைன் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பதற்றங்கள் தணியவும் அமைதி திரும்பவும் அனைவரும் செயல்பட உலகத் தலைவர்களுக்கும் நமக்கும் அழைப்பு விடுத்துச் சென்றுள்ளார்.

உரையாடலை வாழ்வாக்கிய திருத்தந்தை

நாடுகளிடையே, குழுக்களிடையே, மதங்களிடையே, குடும்பங்களிடையே, நம்மிடையே பல்வேறு கருத்து மோதல்கள், வேறுபாடுகள், கலாச்சார - மொழி - இனப் பாகுபாடுகள் இருப்பினும், இப்பதற்றத்தை உரையாடல்கள் மூலம் தணிக்க முடியும், களைய முடியும் என முழுமையாக நம்பினார். அகில உலக அளவில் மதத் தலைவர்களிடையே, நாட்டுத் தலைவர்களிடையே உரையாடலை ஊக்குவிக்கப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். உரையாடல் மூலம் பதற்றத்தைத் தணிக்கவும்  நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் மனித நேயத்திற்கு ஆதரவான சூழலை உருவாக்கவும் இறுதிவரை பல்வேறு செயல்பாடுகளை ஏற்பாடு செய்தார்.

பரிவிரக்கத்தின் பாலமான திருத்தந்தை

இவ்வுலக அவலங்களினால் துயருறும் மக்களின் அழுகுரல்கள் நமதாக வேண்டும்என்ற திருத்தந்தையின் கூற்று அவரின் பரிவிரக்கத்தின் அன்பை ஆழமாக உணர்த்துகிறது. ஏழைகள், நோயாளிகள், வறுமையில் வாடுவோர், அநீதச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்டோர் இவர்களுக்கான பணி முன்னுரிமையும் ஆதரவும் அன்பும் நமதாக வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார். வளர்ச்சியின் பெயரால் புலம்பெயர்ந்த, ஆதரவற்ற மக்களுக்குத் திரு அவை அடைக்கலம் தர வேண்டுமென வலியுறுத்தினார். ‘புலம்பெயர்ந்தோரின் வேதனை என் இதயத்தை முள்போல் குத்துகிறதுஎனத் தனது பரிவிரக்க அன்பைப் பாதிக்கப்பட்டவருக்காக வெளிப்படுத்தினார். பரிவிரக்கத்தோடு கூடிய பிறரன்புப் பணிகளே, நற்செய்திப் பணியின் தவிர்க்க முடியாத அங்கமாகவும் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.

சமூக நீதியை நிலைநாட்டிய திருத்தந்தை

சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்குவதிலும், பாதிக்கப்பட்டோரின் பார்வையில் திரு அவையின் செயல்பாடுகள் மாற்றம் பெறுவதிலும், அழிந்து வரும் இயற்கையைப் பேணிக்காப்பதிலும் திரு அவை செயல்பட இவர் எடுத்த முயற்சிகள் சிறப்பானவை. துன்புறும் ஏழை எளியோரைத் தேடிச்செல்வதும் (go to the street), அவர்களது துயரினில் பங்குகொள்வதும் (smell the sheeps) இவரது சமூக நீதியின் அடித்தளமாக அமைந்திருந்தன. இத்தகைய சிந்தனைகளையேஇறைவா உமக்கே புகழ் (Laudato si), ‘அனைவரும் உடன் பிறந்தோர் (fratalli totti) எனும் தனது ஏடுகளில் சிறப்பாக வலியுறுத்தினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் முன்னிறுத்திய கூட்டொருங்கியக்கத் திரு அவை (synodal church), திரு அவையை மாற்றத்தை நோக்கி மக்கள் மையத் திரு அவையாகத் திசை திருப்பியுள்ளது. இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு, இயற்கை மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பது என இரண்டு தன்மைகளையும் இணைத்து ஒருங்கிணைந்த இயற்கை (integral ecology) அல்லது மனிதன் காக்கும் இயற்கை (human ecology) என ஒடுக்கப்பட்டோரின் சமூக நீதிக்கான பார்வையைத் திரு அவைக்கு வழங்கி, அதை நோக்கிச் செயல்படவும் தூண்டியவர். ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்காமல் இயற்கையை நாம் பாதுகாக்க இயலாது என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தார்.

ஆன்மிகத் தாகம் கொண்ட திருத்தந்தை

இறைச்சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரைச் சிதைப்பதும் ஒடுக்குவதும் பாவம் என்றும், இப்படிப் பாதிக்கப்பட்ட ஏழைகளையே இயேசு தேடி வந்தார் ( மாற் 2:17) என்னும் ஆன்மிகப் புரிதலை ஆழமாக வாழ்ந்து காட்டியவர் இவர். எச்சூழலிலும் எந்நேரத்திலும் இறையாற்றலில் உறுதி கொண்டு ஆழமான நம்பிக்கையில் தன்னையே சரணாகதி ஆக்கிய இறைத்தொண்டர் இவர். அவரது ஒவ்வொரு செயல்பாடும் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சியைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. இறையன்பில், இறைப் பராமரிப்பில் முழு நம்பிக்கை, இந் நம்பிக்கை ஒருபோதும் கைவிடாது (hope does not dissappoint) என்ற உணர்வோடு ஏழை-எளியோருக்கான முன்னுரிமை, இன்னும் சிறப்பாகச் செயல்படும் வேகம், துணிவு, செபமும் செயல்பாடும் இணைந்தே இருப்பது, அனைத்திற்கும் மேலாக ஆவியில் பகுத்துணர்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் (discernment) இவை திருத்தந்தையைப் புனித இஞ்ஞாசியாரின்  மறுவுருவாக வாழ வைத்துள்ளது.

ஏழ்மையும் தாழ்ச்சியும் மிளிரும் திருத்தந்தை

சிறிய பதவி கிடைத்தாலே ஆடம்பரமும் ஆரவாரமும் கொண்ட அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் மத்தியில், ஒரு தனித்துவமான தலைவராக வலம் வந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். தனது வாழ்வின் எல்லா நிலைகளிலும் வகைகளிலும் ஏழ்மையை விரும்பி ஏற்றவர்தங்குமிடம், உடுத்தும் உடை, நடை உடை பாவனை என எப்போதும் எளியோரின் தோற்றம்! அதேபோலத் திரு அவையின் அகில உலகத் தலைவர் எனினும், எளியோரின் பாதம் தொட்டுக் கழுவி முத்தமிடும் தாழ்ச்சி மிக்கப் பணியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். உலகத் தலைவர்களுள் ஏழ்மையையும் தாழ்ச்சியையும் தனதாக்கி, புறக்கணிக்கப்பட்டோரின் புனிதராக நம்மிடையே வாழ்ந்த சமகாலச் சமூகப் புனிதர். இவ்வாறு ஏழ்மையும்  தாழ்ச்சியும் நிறைந்த திருத்தந்தையாக இவரை இறைவன் நமக்கு அடையாளம் காட்டுகிறார். இவரைப் பின்பற்றி, புறக்கணிக்கப்பட்டோரின் புனிதர்களாக வாழ்ந்து காட்ட, இறைவன் நம் ஒவ்வொருவருக்கும்  தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார்.