news-details
ஆன்மிகம்
இறைவேண்டல் தடைகளும் விடைகளும் (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 41)

இறைவேண்டல் எளிதா? கடினமானதா?’ என்ற கேள்விக்கு உங்களின் விடை என்ன?

ஒருவகையில் பார்த்தால், அது எளிதுதான். குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் இறைவேண்டல் செய்து வந்திருக்கிறோம். அந்தப் பழக்கத்தின் காரணமாக இறைவேண்டல் எளிது எனக் கூறி விடலாம்.

அதேவேளையில் நிறைவான, முழுமையான வகையில் இறைவேண்டல் செய்வதென்றால், அதற்குப் பல ஆயத்தங்கள், விழிப்புணர்வு, உத்திகள், மனநிலைகள், தெளிவு போன்றவை தேவை. அந்தக் கண்ணோட்டத்தில், இறைவேண்டல் என்பது கடினம் மட்டுமல்ல, ஓர் அறைகூவலும்கூட.

எனவேதான், கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (CCC) இறைவேண்டல் என்பது ஒரு கொடை, அதேவேளையில்ஒரு பணி (a gift and a task) என்கிறது. இறையருள் இல்லாமல் யாரும் இறைவேண்டல் செய்ய இயலாது. எனவே, இறைவன் நமக்கு இலவசமாகத் தரும் அருளே இறைவேண்டல். அதேவேளையில், நாமும் இறையருளோடு ஒன்றித்து, முயற்சியெடுத்து, இறைவனோடு நமக்குள்ள உறவை ஆழப்படுத்த வேண்டும் என்கிறது (கதிம 2725). இந்தப் பின்னணியில், இறைவேண்டல் தொடர்பான தடைகள் என்னென்ன? என்று நாம் ஆய்வு செய்யும்போது, ஏராளமானவை நம் முன் தோன்றுகின்றன. அவற்றைப் பின்வரும் ஆறு தலைப்புகளில் பட்டியலிடலாம்:

1. புறச்சூழல் தொடர்பானவை: தனியாகவோ, குடும்பமாகவோ, பங்குச் சமூகமாகவோ இறைவேண்டல் செய்வதற்குப் பலவிதமான எதிர்ச் சூழல், புறத்தடைகள் இருக்கின்றன. ஒலிப்பெருக்கி, ஓசைகள், புறவிழாக்கள், போக்குவரத்து போன்ற பல தடைகளையும் கடந்தே நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும்.

2. உடல் தொடர்பானவை: உடல் களைப்பு, சோர்வு, வலுவின்மை, பசி, தாகம், தூக்கம் போன்றவை நம் இறைவேண்டலுக்குத் தடையாகின்றன.

3. மனம் தொடர்பானவை: கவனச்சிதறல், செப ஆர்வமின்மை, அறியாமை, முற்சார்பு எதிர் மனநிலை, இறைவேண்டல் அனுபவமின்மை போன்றவை. இவை சிந்தனையோடு இணைந்தவை.

4. ஆன்மா தொடர்பானவை: நம்பிக்கையின்மை, நம்பிக்கை குறைவு, பாவக் கறைபடிந்த ஆன்மா, அலகையின் சோதனை, பாவப் பழக்கங்களின் அடிமைத்தனம், இறைவனே அருளை விலக்குவது போன்றவை மிகவும் கடினமான தடைகள். பாவத்தால் ஆன்மா கறைபடிந்துவிட்டால் இறையுணர்வு, இறையார்வம் போன்றவை ஆன்மாவில் எழுவதேயில்லை. ஆன்மா பாவக்கறையால் மாசு படிந்துள்ளது என்னும் தன்னுணர்வின்மையே (lack of self-awareness) ஒரு வியப்புக்குரிய தடைதான். சில வேளைகளில் இறைவேண்டலுக்கான ஊக்கத்தை, அருளை கடவுளே விலக்கிக்கொள்ளும்ஆன்மாவின் இருண்ட இரவுஅனுபவங்களோடு பல புனிதர்களும் போராடியிருக்கிறார்கள் என்பது நமக்கு அச்சம் தரும் உண்மை!

5. உணர்வுகள் தொடர் பானவை: மனச்சோர்வு, மன அழுத்தம், அச்சம், கவலை, துயரம், அவமானம், கோபம், ஏக்கம் போன்ற உணர்வுகளின் பாரம் போன்றவை நம்மை இறைவேண்டல் செய்ய விடாமல் வலிமையாகத் தடுக்கின்றன.

6. மனவலிமை தொடர்பானவை: நாம் இறைவேண்டல் செய்வதற்குக் கடவுள் தந்துள்ள கொடைகளுள் ஒன்றே மனவலிமை (will power). நம் வாழ்வின் எல்லாப் பணிகளையும் கடமைகளையும் செய்வதற்கு இந்த மனவலிமை நமக்கு உதவுகிறது. ஆனால், சில வேளைகளில் மன வலுவின்மை நம் உடலையும் உள்ளத்தையும் பாதித்து, இறைவேண்டல் செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது.

தடைகளை உடைக்கும் விடைகள்

இறைவேண்டலுக்கு எதிராக எத்தனை  தடைகள் வந்தாலும், அனைத்தையும் உடைப்பதற்கான உத்திகளையும் ஆற்றலையும் கடவுளே நமக்குத் தந்திருக்கிறார்.

1. உடல் ஈடுபாடு: தலை வணங்குதல், கைத் தட்டுதல், பாடல் பாடுதல், குரலை உயர்த்துதல், கண்களை மூடுதல், முழங்கால்படியிடுதல் போன்றவற்றின் வழியாக உடல் தொடர்பான தடைகளை உடைத்து, முழு உள்ளத்தோடு இறைவேண்டல் செய்யலாம்.

2. மனத்தை ஒருங்கிணைத்தல்: பராக்குகளைத் தவிர்த்தல், கவனச்சிதறலை அகற்றி, கவனத்தை இறைவேண்டலில் திருப்புதல், சொற்களையும் சிந்தனையையும் இணைத்தல் போன்றவற்றின் வழியாக மனத்தையும் உடலையும் இறைவேண்டலில் ஒருங்கிணைக்கலாம்.

3. உணர்வுகளோடு மன்றாடுதல்: மனத்தால் (மூளை) மட்டும் இறைவேண்டல் செய்யாமல், உணர்வுகளோடும் (இதயம்) இணைந்து இறைவேண்டல் செய்வதே நிறைவான இறைவேண்டல். சில வேளைகளில் கண்ணீர் சிந்தி பாடுவதும் மன்றாடுவதும் இறைவேண்டலை உயர் தளத்துக்கு இட்டுச்செல்கின்றன.

4. உணர்வுகளை இறைவனிடம் ஒப்படைத்தல்: அச்சம், கவலை, கோபம், துயரம், அவமானம், ஏக்கம் போன்ற எதிர்மறைப் பேருணர்வுகளால் பாதிக்கப்படும்பொழுது நம்மால் இறைவேண்டல் செய்ய இயலாது. ஆனால், அந்த உணர்வுகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை இறைவனிடம் ஒப்படைத்து இறைவேண்டல் செய்யும் முறையைத் திருப்பாடல்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

5. உடலால் மனத்தை ஊக்குவித்தல்: மனத்தால் உடலை ஊக்குவித்தல். உடல் களைப்பாக இருக்கும்பொழுது மனமும், மனம் சோர்வுற்றிருக்கும்போது உடலும் ஒன்று மற்றொன்றை ஊக்குவிக்கும் கலையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

6. மன வலிமையைப் பயன்படுத்துதல்: உடல், மனம், ஆன்மா, உணர்வுகள் ஆகியன வலிமை குறைவாக இருந்தாலும்கூட, இறைவேண்டல் செய்ய விரும்புதல் (will to pray) என்னும் ஊக்கமும் மனவலிமையும் இறைவேண்டலை இறைவனுக்கு உகந்ததாக மாற்றுகின்றன.

7. படைப்பாற்றல்: இறைவன் தந்த படைப்பாற்றல் இறைவேண்டலை மேம்படுத்துகிறது.

8. இறைப்புகழ்ச்சி: இது இறைவேண்டலுக்கு இனிமையும் எளிமையும் சேர்க்கின்றது.

9. பரிந்துரை: பிறரது பரிந்துரை மன்றாட்டு நமக்கு இறைவேண்டலால் ஊக்கம் தருகிறது.

10. பாவ மன்னிப்புக் கோரல்: இது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, இறைவேண்டலில் ஆர்வத்தைத் தருகிறது.

11. ஒப்புரவு: இந்த அருளடையாளம் இறைவேண்டலுக்கான மிகச்சிறந்த ஊக்க மருந்து.

12. தூய ஆவியாரின் துணை இறைவேண்டலால் சிக்கல்களின்போதெல்லாம் தூய ஆவியார் நமக்குத் துணை நிற்கிறார்.

13. அன்னை மரியாவின் பரிந்துரை நமக்கு இறைவேண்டல் ஆர்வம் தருகிறது.

14. சொந்தச் சொற்களில் இறைவேண்டல் ஒரு மிகச் சிறந்த உத்தி.

15. தியாகத்தோடு இறைவேண்டல். எப்போதெல்லாம் நோன்பிருந்து, விழித்திருந்து, தியாகத்தோடு மன்றாடுகிறோமோ, அப்போது இறைவேண்டல் எளிதாகவும், வலிமையானதாகவும் மாறுகிறது.

எனவே, இறைவேண்டலின் அனைத்துத் தடைகளையும் உடைக்க இறைவன் தந்துள்ள படைக்கலன்களைப் பயன்படுத்துவோமாக!