ஈஸ்டர் ஞாயிறு, சாவின்மீது கிறிஸ்து அடைந்த வெற்றியைக் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான நாள். உலக வரலாற்றில் இதுபோன்று இருந்ததில்லை; இனியும் இருக்கப்போவதும் இல்லை. இயேசு கிறிஸ்து கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததைக் கிறித்தவர்களாகிய நாம் நம்புகிறோம். மூன்றாவது நாளில் கல்லறை காலியாக இருந்தது என்றும், கல்லறை உடைகள் இன்னும் உள்ளன என்றும் நம்புகிறோம்.
இயேசு,
இதற்குமுன் யாரும் அறிந்திராதபடி வியத்தகு முறையில் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். வானதூதர்கள் கல்லை அப்புறப்படுத்துவதற்கு முன்பே அவர் கல்லறைக்கு வெளியே இருந்தார் (மத் 28:2). அவர் ஏற்கெனவே உயிர்த்தெழுந்துவிட்டார். பின்னர் அவர் உயிருடன் செயல்பட்டார்!
திருவிவிலியத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்கள் இதோ: மகதலா
மரியாவுக்கும் வேறொரு மரியாவுக்கும் தோன்றினார் (மத் 28:1,9,10). இயேசு தம் கைகளையும் விலாவையும் சீடர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள் (யோவா 20:20,27). “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டு அவர்களுடன் உண்டார் (லூக் 24:41,43). எம்மாவு சீடர்களுக்குத் தோன்றி அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்து அவர்களின் கண்களைத் திறந்தார் (லூக் 24:13-31). ‘தம்முடைய தலைமைச் சீடரான பேதுருவுக்கும், பின்னர் 12 திருத்தூதர்களின் உள்வட்டத்திற்கும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்-சகோதரிகளுக்கும், பின்னர் யாக்கோபுக்கும் தோன்றினார். இறுதியாக, ஆரம்ப கால இயேசுவின் திரு அவையைத் துன்புறுத்திய எனக்கும் தோன்றினார்’ என்று
பவுல் கூறுகிறார் (1கொரி 15:5-7). இவை யாவும் திருவிவிலியத் தரவுகளின் தொகுப்பு. உண்மையை அடிப்படையாகக் கொண்டவை.
மனித
வரலாற்றில் நடந்த ஓர் உண்மையான நிகழ்வு இது. கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார் (1கொரிந்தியர் 15:3,4). இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய வரலாற்றுத் தரவுகள், திருவிவிலியம் வாயிலாக உண்மையானது மற்றும் மேன்மையானது என அறிய முடிகிறது.
கிறித்தவம் பிறந்தது கிறிஸ்து பிறந்ததால் அல்ல; அவர் நம் பாவங்களுக்காகச் சிலுவையில் பரிகாரப் பலியாகி, அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்ததால்தான். “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1கொரி
15:14) என்கிறார் பவுல். உயிர்த்தெழுதல் இல்லையென்றால், இயேசு இறந்தோரிலிருந்து எழுப்பப்படவில்லை. இயேசு இறந்தோரிலிருந்து உயிர்த்தெழவில்லை என்றால், மரணம் அவர்மீது அதிகாரம் கொண்டு அவரைத் தோற்கடித்துவிட்டது என்றாகி விடும்.
மரணத்திற்கு
இயேசுவின் மீது அதிகாரம் இருந்திருந்தால், அவர் கடவுளின் மகனாக இருந்திருக்க முடியாது. இயேசு கடவுளின் மகனாக இல்லையென்றால், அவர் பாவங்களுக்காக ஒரு முழுமையான பலியாகத் தம்மை ஒப்படைத்திருக்க முடியாது. பாவங்களுக்காக இயேசு ஒரு முழுமையான பலியைச் செலுத்த முடியாவிட்டால், நம்முடைய பாவங்கள் கடவுளுக்கு முன்பாக முழுமையான பரிகாரம் செலுத்தப்படவில்லை என்றால், நாம் இன்னும் பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, இயேசு உயிர்த்தெழவில்லை என்றால், அவரால் நம்மைக் காப்பாற்ற முடியாது. உயிர்த்தெழுதல் என்கின்ற கொள்கை இல்லையென்றால், முழுக் கிறித்தவ வாழ்க்கையும் நகைப்புக்கு உரியதாய் இருந்திருக்கும். மேலும், எதிர்நோக்குவதற்கு இந்த வாழ்க்கையைத் தாண்டி நமக்கு வேறெதுவும் இருந்திருக்காது.
நமக்காக
இறப்பதற்கு மட்டுமல்ல, நமது பாவங்களுக்கான தண்டனையான உடல், ஆன்மிக மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து முழுமையாகவும் இறுதியாகவும் வெல்லப்படும் வகையில் நமக்காக மரணத்தை எதிர்கொண்டு, அதைக் கொல்லும் ஒருவர் நமக்குத் தேவை. அவர்தாம் இயேசு கிறிஸ்து! அவரே சிலுவையில் மரித்தபோது, தம்மை நம்புகிற அனைவரின் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார்.
இயேசு
தம்மில் உள்ள அனைவருக்காகவும் மரணத்தின் எதிர்பார்ப்பு, மரண அனுபவம் மற்றும் மரணத்தின் விளைவு ஆகியவற்றை என்றென்றும் முறியடித்தார். “ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!” (1கொரி 15:57) என்று பவுல் கூறுவதில் ஆச்சரியமில்லை.
கிறித்தவம்
2000 ஆண்டுகால விமர்சனத்தைத் தாங்கி நிற்கிறது. நாசரேத்து இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் உண்மையான, நம்பகமான மற்றும் வரலாற்றுக் கணக்கு. அவர் சாதாரண மனிதர் அல்லர்; அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக முழு உலகத்தின் வரலாற்றின் போக்கையே மாற்றிய ஒரு மனிதர்; தெய்வீகத் தோற்றம் மற்றும் மகிமையைக் கொண்ட ஒரு மனிதர்!
எனவே,
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பார்வையை நாம் இழந்தால், எல்லா வகையான கேள்விகளாலும் முற்றுகையிடப்படுவோம். சோதனை மற்றும் நம்பிக்கையின்மையால் மூழ்கிவிடுவோம். நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதாகச் சொல்லலாம்; ஆனால், உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் நாம் பரிதாபத்துக்குரியவர்கள். ஆகவே, உயிர்த்தெழுப்பப்பட்ட மீட்பரின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை வலுவாகவும் உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். அப்போது கிறிஸ்து அடைந்த வெற்றியை நாமும் அடைவோம்.
கிறிஸ்து
உயிர்த்தெழுந்தார் என்பதே நம் வாழ்வின் உறுதியான நம்பிக்கையாக இருக்கட்டும். ஏனெனில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மேன்மையான காரியம். எனவே, நற்கருணை உட்கொள்ளும் ஒவ்வொரு முறையும் இயேசுவின் மரணத்தை மட்டுமல்ல, உயிர்த்தெழுதலையும் நினைவுகூரக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
இந்த
உயிருள்ள உணர்வால் நாம் தூண்டப்படும்பொழுது ‘எனக்கு உயிர்த்தெழுந்த மீட்பர் இருக்கிறார்; அவர் எனக்காகத் தந்தை கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்; வாழ்க்கையிலோ அல்லது மரணத்திலோ எதுவும் என்னை அவருடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது’
என்கிற நம்பிக்கையின் ஒளி நம்மில் பிறக்கும். ஆகவே, இயேசு வரும்வரை அவரது மரணத்தை அறிக்கையிடுவோம்; அவரது உயிர்ப்பையும் எடுத்துரைப்போம். இதுவே நமது நம்பிக்கையின் மறைப்பொருள்!