news-details
சிறப்புக்கட்டுரை
கரடி கூட காறித் துப்பும்!

கீழடியில் தமிழர் தொன்மை நாகரிகம் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த செய்திகளைத் தனது ஆய்வறிக்கை மூலம் வெளிக்கொணர்ந்த தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களை மீண்டும் ஒருமுறை அதிகாரமும் செயல்பாடுகளும் இல்லாத ஒரு பணியிடத்திற்கு ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. கீழடி அகழாய்வு வடக்கே உள்ளவர்களுக்கு ஏன் பதற்றத்தையும் பரிதவிப்பையும் தருகிறது என்பதைத் தமிழ்நாட்டிற்கும் உலகிற்கும் எடுத்துச் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

கீழடி அகழாய்வின்போது கிடைத்துள்ள மிக அரிதான பொருள்கள் இதுகாறும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார அமைப்புகள் கட்டமைத்து வைத்திருந்த வரலாற்றுப் புனைசுருட்டுகளின் போலி முகங்களை உலகிற்கு உணர்த்தியுள்ளன.

வேதகால நாகரிகமே இந்தியத் துணைக் கண்டத்தின் ஆதி நாகரிகம் என்றும், சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றும் கூறிவந்தவர்கள் தலைகளில் கீழடித் தகவல்கள் பேரிடியாக விழுந்தன. தமிழர் நாகரிகமும் தமிழ் மொழியும் வேதகால நாகரிகத்திற்கும் முந்தையவை என்ற அறிவியல்பூர்வமான உண்மையினை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. குற்றவாளிகள் தடயங்களை அழித்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதுபோல கீழடி நாகரிகத்தின் தொன்மையினையும் சிறப்பையும் வெளியுலகிற்குத் தெரியாமல் இருட்டடிப்புச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும்அவர்கள்செய்து பார்த்தார்கள். உண்மைகளை எத்தனை நாளுக்குத் திரையிட்டு மறைக்க முடியும்? சரியான நேரத்தில் கீழடியைக் கைவசம் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்ச்சமூகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள வரலாற்று அறிஞர்கள் கீழடி நாகரிகத்தின் தொன்மையையும், அதனது பிரமாண்டத்தையும் பார்த்துப் பிரமித்து, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் துவங்கியுள்ளதால் மூக்கறுபட்ட ஒன்றிய அரசு, கீழடி அகழ்வாய்வு அறிக்கையின் தகவல்கள்இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லைஎன்று கூறி அறிக்கையை வெளியிட மறுக்கின்றது.

தொல்பொருள் அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சிதுறை சார்பில் இரண்டு கட்டமாகக் கீழடியில் அகழாய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும், அந்த அறிக்கையினை ஏற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு மேலும் அதிகமான தரவுகளும் ஆதாரங்களும் தேவைப்படுகின்றன என்றும், அவற்றை அவர் தந்தால் மட்டுமே அடுத்தக் கட்டத்திற்கு நகரமுடியும் என்றும் ஒன்றியக் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். அவர் கூறிய ஒரு செய்தி மிகவும் முக்கியமானது:

Let them come with more results, data and evidence because a single finding cannot change the entire discourse.”

- ‘தி இந்துஆங்கிலப் பத்திரிகைக்கு ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அளித்த பேட்டி இது. அதாவது, “எங்களுக்கு இன்னும் ஏராளமான தரவுகளும் சான்றுகளும் வேண்டும்; ஓர் அகழாய்வின் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு இதுகாறும் சொல்லப்பட்ட வரலாற்றை மாற்ற முடியாது.”

அமைச்சர் எதையும் ஒளிக்கவும் இல்லை; மறைக்கவும் இல்லை. தற்போது கீழடியில் கிடைத்துள்ள தகவல்களை ஒன்றிய அரசின் தொல்லியல் ஆராய்ச்சித்துறை ஏற்றுக்கொண்டால் இதுகாறும் கூறப்பட்டு வந்த வரலாற்றை மாற்ற வேண்டியதிருக்கும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதே அமைச்சர் கூறும் செய்தி.

கீழடி ஆய்வில் ஒவ்வொரு தட்டிலும் கிடைத்த பொருள்களின் தொன்மத்தையும் சிறப்பையும் பார்த்து அதிர்ச்சியடைந்த ஒன்றிய அரசு, அகழாய்வை அப்படியே கைவிட முயற்சித்தது. “அகழாய்வில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை, கிடைத்த பொருள்களுக்கு எவ்வித வரலாற்று முக்கியத்துவமும் இல்லைஎன்று கூறி இராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு ஆய்வை அப்படியே நிறுத்தியது.

இந்திய நாட்டின் தொன்மை நாகரிகப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அறிவியல் சார்ந்து ஆய்ந்து தெரிவிக்கும் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொல்லியல்துறை, தனது சிறப்பான செயல்பாட்டால்  உலகம் முழுமையும் பாராட்டுகளைப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால், மோடி அரசு பதவியேற்ற பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கூறுகின்ற வலதுசாரி (வரலாற்று) நிலைப்பாடுகளுக்கு ஏற்ப தங்களது செயல்பாடுகளை வைத்துக்கொள்வதுதான் இன்றைய தொல்லியல்துறையின் நிலைப்பாடு என்று அந்தத் துறையில் அனுபவம் பெற்ற சிலர் கூறுவதைக் கவனிக்க வேண்டியதுள்ளது. இதிகாசங்களை வரலாறாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை துணை போகிறதோ என்ற ஐயத்தைத் தவிர்க்க முடியவில்லை.

கீழடித் தகவல்களுக்கு அறிவியல்பூர்வமான தகவல்களும் சான்றுகளும் இல்லை என்று கூறுகின்ற அமைச்சர் ஷெகாவத் உத்தரப்பிரதேசம் சின்னாலியில் நடந்த ஆய்வுகளைப் பற்றித் தொல்லியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு என்ன அறிவியல் ஆதாரங்கள் உள்ளன என்று கூறுவாரா? அங்குக் கிடைத்தப் பொருள்களை வைத்துக்கொண்டு துறையின் ஆய்வாளர்கள் அங்கே ஒரு தொன்மையான இந்து நாகரிகம் இருந்ததாகக் கட்டமைத்து உள்ளார்கள். ஆனால், உண்மையில் கிடைத்த பொருள்கள் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்ட செய்திகளுக்கு எதிர்மாறான கண்டுபிடிப்புகளை நிரூபிக்கின்றன என்று நடுநிலையான, உலகம் போற்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சம்பால், ஞானவாபி பள்ளிவாசல்களில் நடந்த ஆய்வுகளும், பிரதமரின் சொந்த ஊரான வாட் நகரில் நடந்த ஆய்வுகளும் தொல்லியல்துறை ஆய்வுகளை ஒன்றிய அரசு விரும்பியபடி எப்படியெல்லாம் வளைக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் என்று பெயர்களைக் கூறவிரும்பாத தொல்லியல்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2003-ஆம் ஆண்டில் தொல்லியல்துறையின் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜெனரலாகப் பணியாற்றிய A.I. மணி எனும் அதிகாரி பாபர் மசூதிக்குக் கீழே பத்தாவது நூற்றாண்டை சார்ந்த ஓர் இந்து ஆலயம் போன்ற கட்டுமானங்கள் இருக்கின்றன என்று ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தார். பாபர் மசூதி சம்பந்தப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்கு அந்த அறிக்கையே அடிப்படையாகக் காட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவரை, மோடி அரசு தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஜெனரலாக நியமித்துப் பெருமை சேர்த்தது. பாபர் மசூதி சம்பந்தப்பட்ட ஆய்வறிக்கைக்கான அங்கீகாரம்தான் அந்தப் பதவி என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ‘2Gவழக்கிற்குக் காரணமாக இருந்த தணிக்கைத்துறை அறிக்கையினைத் தந்த வினோத் ராய்க்கு, மோடி அரசால் வழங்கப்பட்ட பேங்கிங் ஓம்பட்ஸ்மேன் பதவியையும், பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த சில நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பின்னர் வழங்கப்பட்ட பதவிகளும் நம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

அமர்நாத் இராமகிருஷ்ணா தொல்லியல் துறையில் நீண்ட நிறைந்த அனுபவம் பெற்ற ஆராய்ச்சியாளர். தொல்லியல் துறையில் அகில இந்திய அளவில் பல களங்களில் பணியாற்றியவர். அப்படிப்பட்ட தகுதியுடைய ஒருவர் எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் உலகமே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் ஓர் அகழாய்வு பற்றித் தரமற்ற ஓர் ஆய்வறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளார் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? அப்படி ஒரு தரமற்ற அறிக்கையினை அவர் அரசுக்குத் தரவேண்டிய அவசியம் என்ன? தொல்லியல் துறையில் நடந்த பல்வேறு ஆய்வுகளுக்கு என்ன விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டனவோ, அதே நடைமுறைகளைப் பின்பற்றிதான் தனது அறிக்கையினை அவர் சமர்ப்பித்துள்ளார்.

அகழாய்வுக்காக வரையறுக்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் 45% நிலத்தில் மட்டுமே தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 90 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் உள்ள நிலப்பரப்பில் இதுவரை 13,000 பழம்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தந்தம், தங்கம், கண்ணாடி, தாயக்கட்டங்கள், சுட்ட மண்பாத்திரங்கள், ஓடுகளில் எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள், பாசிமணிகள், தாமிர நாணயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிணறுகள், வடிகால் அமைப்புகள் என்று வளமான தொழிலும் வணிகமும் செழித்து வளர்ந்திருந்த ஒரு நாகரிக சமூகத்திற்கு அடையாளங்களாக இருக்கும் அத்தனை பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கரிம பகுப்பாய்வு பரிசோதனைகளுக்கு உலகின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, பகுப்பாய்வுச் செய்யப்பட்டு ஆய்வறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. சில பொருள்களைப் பகுப்பாய்வு செய்த அமெரிக்க ஆய்வு நிறுவனமான பீட்டா அனெலிட்டிக்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட பொருள்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று சான்றிதழ் தந்துள்ளது. இதுதவிர சிகாகோவின் ஃபீல்டு மியூசியம், பூனாவின் ஆகர்கார் ஆராய்ச்சி நிறுவனம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இத்தாலியின் பீஸா பல்கலைக்கழகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடீஸ் பெங்களூரு போன்ற பல சர்வதேச, தேசிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொல்லியல் துறைக்குச் சந்தேகங்கள் இருப்பின் பகுப்பாய்வு செய்த அந்த நிறுவனங்களிடமிருந்தே தெளிவுகளைப் பெற்றிருக்க முடியும். எதையும் செய்யாமல் அறிக்கையினை வாங்கி வைத்துக் கொண்டு இரண்டு வருடங்கள் தூங்கிய தொல்லியல்துறை நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கும், பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதில் கூற முடியாமல், ‘அறிக்கை முழுமையாக இல்லைஎன்று கூறித் தப்பிக்க நினைப்பது கண்டனத்திற்குரியது.

உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் தரக்கூடிய சான்றுகளை ஏற்க மறுக்கும் தொல்லியல்துறை சில முக்கியமான ஆய்வுகளில் தந்த அறிக்கைகள் சர்வதேசத் தொல்லியல் ஆய்வர்களையே அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

நமது பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறை செய்த ஆய்வுக்கும், அவர்கள் தந்த அறிக்கைக்கும் எந்த அறிவியல் ஆதாரம் என்பது யாருக்கும் தெரியாது. பள்ளிவாசலுக்குள் தொழுகைக்குச் செல்லுமுன்னர் இசுலாமியர்கள் தங்களை ஒடுக்கம் செய்துகொள்ளும் இடமானவாசுகானாபகுதிக்குள் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் ஆய்வர்களைத் தடை செய்துவிட்டது. தொழுகை நடக்கும் பகுதிகளில் தரையைத் தோண்டக்கூடாது என்றும் தடை விதித்துவிட்டது. பூமிக்கு மேலே வைத்துப் பார்க்கும் நவீன ஸ்கேன் கருவிகள் மூலம் கண்டதாக ஓர் அறிக்கையினை நீதிமன்றத்தில் தொல்லியல்துறை தாக்கல் செய்தது. அதில் தொல்லியல்துறை, ஞானவாபி பள்ளிவாசல் கட்டடத்திற்குக் கீழே இடிந்த நிலையில் ஓர்  இந்து கோவிலையும் சிலைகளையும் கண்டதாகவும், அது 17-வது நூற்றாண்டில் மொகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டிருப்பதைப்போல தெரிகிறது என்றும், சில இடங்களில் கோவிலின் பகுதிகளையே பள்ளிவாசலாக மாற்றியுள்ளனர் என்றும் அறிக்கை தாக்கல் செய்தது.

17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று சொல்ல எந்தக் கரிமப் பகுப்பாய்வும் நடந்ததாகத் தெரியவில்லை. அவுரங்கசீப் காலத்தில் இடிக்கப்பட்டது என்று சொல்ல அறிவியல் ஆதாரம் எதையும் தரவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் சரியான நேரம் பார்த்து நீதிமன்றத்தில் தொல்லியல்துறை அறிக்கையினைத் தாக்கல் செய்துவிட்டு, ஊடகங்களிலும் பெருமளவில் செய்திகள் வெளிவரும்படி பார்த்துக்கொண்டது. இந்த அறிக்கையால் தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதாயம் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.

மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில்  பாக்பாட் மாவட்டத்தில் சொனாலி என்ற இடத்தில் தொல்லியல் துறையின் ஆய்வின்போது, பழங்கால மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட நூறு இடங்களைக் கண்டனர். வாள், வில், அம்பு, பானை ஓடுகள் போன்ற பொருள்களோடு சக்கரம் பொருத்திய வண்டி போன்ற ஒரு வாகனமும் கண்டுபிடிக்கப்பட்டன. சஞ்சய் குமார் மஞ்சுல் என்ற தலைமை ஆய்வர் அதனைக் குதிரைகள் பூட்டி இழுக்கப்பட்ட இரதம் என்றும், இதன் மூலமாக அங்கு ஒரு மாபெரும் சத்திரிய வம்சத்தினர் வாழ்ந்திருந்தது தெரியவருவதாகவும், ரிக் வேதம் மற்றும் மகாபாரத நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த நாள் நமது பிரதமர் அந்த அகழாய்வு அறிக்கையினைப் பாராட்டியும், நமது தொன்மையான நாகரிகத்தை வியந்தும் தனதுXதளத்தில் பதிவு செய்தார். கண்டுபிடிக்கப்பட்ட வாகனம் ஒரு வண்டியாக இருக்க வாய்ப்பு உண்டு என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குதிரைகள் இருந்ததாக அடையாளங்கள் கிடைக்கவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களுக்கும் ரிக் வேதத்திற்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்புக்கு அறிவியல் ஆதாரம் ஏது என்று யாரும் கேட்கவும் இல்லை. அதையெல்லாம் வியந்து பாராட்டுகிற பிரதமருக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் இரும்பை உருக்கும் வித்தையைக் கற்றிருந்தான் என்பதை உலகுக்குக் கூறிய அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பை வியந்து பாராட்ட மனமில்லை.

தற்போது சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள, நாட்டின் முக்கிய அருங்காட்சியகமானபிரின்ஸ் ஆப் வேல்ஸ்அருங்காட்சியகத்தில் சிந்து சமவெளிப் பகுதிகளில் நடந்த அகழாய்வின்போது கிடைத்த பொருள்களைதிராவிட நாகரிகத்தின் எச்சங்கள்என்ற பெயரில் காட்சிப்படுத்தியிருந்தனர். தற்போது அதனை மாற்றிவிட்டுஅடையாளம் தெரியாத மக்களின் நாகரிக எச்சங்கள் (unknown civilisations) என்று எழுதி வைத்துள்ளனர். திராவிட நாகரிகத்தையும், அதன் தொன்மையையும்அவர்கள்ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இல்லை!

நமது முதலமைச்சர் கூறியதுபோல தவறுகள் அறிக்கையில் இல்லை. ‘அவர்களதுமனங்களில் இருக்கின்றன. ‘ஒரே நாடு, ஒரே இனம், ஒரே கலாச்சாரம்என்று கூறி அரசியல் நடத்திவரும் அவர்களுக்குச் சமஸ்கிருத மரபு மற்றும் ஆரிய நாகரிகம் தவிர வேறு பண்பாட்டுக் கூறுகளை ஏற்க முடியவில்லை. அவர்கள் கொண்டாடும் வேதகால நாகரிகத்தைவிட, பலவகைகளில் சிறந்த ஒரு நாகரிகம் வேதகாலத்திற்கு முன்னரே இந்த மண்ணில் செழித்தோங்கியிருந்தது என்ற உண்மையை ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மை அவர்களிடம் இல்லை. இதிகாசங்களை வரலாறாகக் கட்டமைக்கும் அவர்களது அரசியல் திட்டங்களுக்கு கீழடி மண் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்ற எதார்த்தம் அவர்களைக் கதிகலங்கச் செய்கிறது.

அவர்களைபற்றிக்கூட நாம் கவலைப்படவில்லை; திராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள், தமிழ்ச் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்த அவதானித்திருக்கும் தலைவர்கள் என்றெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இப்பெரும் அநீதி குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கள்ள மௌனம் காக்கிற இவர்களைதமிழர் விரோதிகள்என்று ஏன் அழைக்கக்கூடாது?

எங்கள் ஊர் மொழியில் கூறினால், ‘கரடி கூட காறித் துப்பும்.’ இவர்களது துரோகத்தைக் காலம் ஒரு நாளும் மன்னிக்காது!